நூல் நயம்: அனுபவங்களின் கொள்ளிடம்

நூல் நயம்: அனுபவங்களின் கொள்ளிடம்
Updated on
3 min read

பத்திரிகையாளர் ராஜாவின் நாவல் இது. தனியார் தொலைக்காட்சி செய்தி வடிவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். செய்திகளை இவர் செம்மையாக்கும் விதத்தை அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்குண்டு. நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் பயில வேண்டிய பத்திரிகை மொழியில் ராஜாவுக்கு நல்ல பயிற்சி உண்டு என்பதை இந்நாவலின் விவரிப்பு வழி அறிந்துகொள்ள முடிகிறது. காவிரியின் வெள்ளத்தைக் கொள்ளும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூரின் கதை இது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கருப்பேரி அது. இந்நாவலும் ராஜாவின் அனுபவ வெள்ளத்தைக் கொள்ளும் வடிகாலாகத் தொழில்பட்டுள்ளது. தன் பால்ய கால அனுபவங்களை மதித்து அதைப் புனைவு என்கிற வடிவத்தில் ராஜா இதில் பதிவுசெய்துள்ளார். அறிவியல் வளர்ச்சியால் பயன்படுபொருள்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலிருந்து ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்புள்ள காலகட்டத்தைச் சித்தரிக்கும் விதத்தில் இந்நாவல் அந்தக் காலகட்ட நினைவேக்கத்தை அளிக்கிறது. அந்தக் காலத்தின் எளிமையான வாழ்க்கை, இயல்பான மனிதர்கள் என எல்லாமும் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன.

பருவ காலத்தின் முதல் வெள்ளத்தைப் போல் இந்த நாவல் பல விஷயங்களை இழுத்துக் கொண்டோடினாலும் கல்வியே இதன் மையம். இதை ஒட்டி மனிதர்களுக்குள் நடக்கும் முரண்பாடுகள், போட்டிகள் எல்லாவற்றையும் நாவல் பேசுகிறது. இறுதியாக நாவல் தான் கொண்ட கருப்பொருளுக்கான விடையைத் தேடி முடிவடைகிறது. - ஜெய்

கொள்ளிடம்
ராஜா வாசுதேவன்
தழல் பதிப்பகம்
விலை: ரூ.360
தொடர்புக்கு: 9360860699

கரோனா காலக் கதைகள்

கரோனாப் பெருந்தொற்றுக் காலம், புறவயமாகவும் அகவயமாகவும் பெரும் பாதிப்பை விளைவித்தது. இதன் பாதிப்பு தமிழ் இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முக்கியமானது ரவிச்சந்திரன் அரவிந்தனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. ‘உயிரச்சம்’ என்ற தலைப்பிலேயே அந்தக் காலகட்டத்தின் தீவிரத்தை எழுத்தாளர் நமக்கு உணர்த்திவிடுகிறார். இந்தத் தலைப்புக் கதை பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்த இளைஞனின் கதையைச் சொல்கிறது.

புலம்பெயர்ந்து வந்தவர்கள் பலரும் வெளியேறி சென்னையே வெறிச்சோடிக் கிடந்த காலகட்டத்தில் இந்தக் கதையின் நாயகன் கிரி இங்கேயே இருக்கிறான். ஒவ்வொரு வாசலும் மூடிக்கொள்ள நாதியற்றுத் தெருவில் கைவிடப்படுகிறான். சட்டனெக் கதையைத் தொடங்கிவிடும் ரவிச்சந்திரனின் லாவகம், வாசகனை நெருக்கம் கொள்ளவைக்கிறது.

‘தீப்பிணி தீண்டல் கொடிது’ கதை கரோனாக் காலத்தில் மருத்துவப் பணியாளர்கள் ஆற்றிய பணியை விவரிக்கிறது. ஊரடங்குக் காலம், எளிய வாழ்க்கை மீது நடத்திய தாக்குதலை ‘பொல்லாப் பேரிடர்’ கதை சொல்கிறது. இக்கதைகள் மூலம் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை நூலாசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். - விபின்

உயிரச்சம்
ரவிச்சந்திரன் அரவிந்தன்
வம்சி பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9445870995

இயற்கையின் பேருண்மை

விளாதிமிர் கே ஆர்சென்யேவ் எழுதிய இந்நூல் இயற்கையோடு இயைந்து வாழ நம்மை வலியுறுத்தும் முன்னோடிப் படைப்பு. இரு முறை திரைப்படங்களாக உருவாகி உலகெங்கிலும் வாழும் இயற்கை நேசர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நூலை அவை நாயகன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஒரு நகரவாசிக்கும் காட்டில் தனித்துத் திரியும் ஒரு பழங்குடிக்கும் இடையிலான நட்பின் வழியே இயற்கையின் பேருண்மைகளை இந்நூல் நம்முள் கடத்தும் விதம் அலாதியானது. சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான நூல் இது. - ஹுசைன்

டெர்சு உஸாலா
விளாதிமிர் கே ஆர்சென்யேவ்
(தமிழில்: அவை நாயகன்)
ஓசை பதிப்பகம்
தொடர்புக்கு: 9443022655

நாம் அறியாத எம்.கே.டி.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படுபவர் எம்.கே.டி என அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதர். ஒரு சினிமாவுக்கு நிகரான திருப்பங்களும் விறுவிறுப்புகளும் கொண்டது இவரது வாழ்க்கை. பிரபல பத்திரிகையாளர் விந்தன் இவரது வாழ்க்கைச் சுருக்கத்தைச் சுவைபட எழுதியுள்ள கட்டுரைத் தொகுப்பின் மறுபதிப்பு இது. லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்காக தியாகராஜ பாகவதர் கைதுசெய்யப்படும் காட்சியில் இந்த நூல் தொடங்குகிறது.

இது தியாகராஜ பாகவதரின் வீழ்ச்சி தொடங்கும் முக்கியமான தருணம். இந்தச் சம்பவத்தை எடுத்துக்காட்டி இந்தக் கதையை பின்னோக்கி அவரது பால்ய காலத்துக்கு ஒரு புனைவைப் போல் விந்தன் நகர்த்துகிறார். சிறு வயதிலேயே அவருக்குக் கலை ஈடுபாடு வந்த பின்னணியை உதாரணத்துடன் விந்தன் எழுதியிருக்கிறார்.

எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகத்தை அப்பாவின் விசிறி அடியை மீறிப் பார்க்கச் சென்றுள்ளார். சாதாரண பின்னணியில் தொடங்கி புகழின் கொடுமுடிக்குச் சென்ற கதையைச் சுவாரசியமாக விந்தன் இதில் விளக்கியுள்ளார். பாகவதரைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அறியாத ஒரு சம்பவத்தைச் சொல்லும் முனைப்புடன் நூலாசிரியர் இதற்காக உழைத்துள்ளார். - குமார்

எம்.கே.டி. பாகவதர் கதை
விந்தன்
நக்கீரன் பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 044 43993000

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in