

தமிழ் மண் சார்ந்த இடதுசாரி நோக்கத்துடன் புத்தகங்களை வெளியிடுவது என்ற தீர்மானத்துடன் 1982இல் கார்க்கி நூலகம் பதிப்பகத்தைத் தொடங்கி, வி.பி.சிந்தனின் ‘இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துகள்’ என்ற நூலிலை வெளியிட்ட பதிப்பாளர் வைகற (வைகறைவாணன்) இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமது ‘பொன்னி’, ‘சாளரம்’ ஆகிய பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
ஏ.கே.செட்டியாரின் ‘குடகு’, கல்கியின் ‘தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி’ ஆகிய நூல்களை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறார். ‘வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்’, ‘ஏழாவது ஊழி’, ‘தோல்விகளின் ஒப்புதல்’, இன்குலாபின் கவிதைத் தொகுப்பான ‘ஒவ்வொரு புல்லையும்’, பூமணியின் முழுச் சிறுகதைத் தொகுப்பு ‘அம்பாரம்’, 5 நாவல்களின் தொகுப்பு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
திருவையாறு அரசர் கல்லூரியில் படித்தவர். பழம்பெரும் தமிழ் அறிஞர் தி.வே.கோபாலய்யரிடம் பாடம் கேட்டவர். கொள்ளிடத்தின் நடுவே நீர் சூழ்ந்த தீவாக அமைந்துள்ள இராமநத்தம் இவர் பிறந்த ஊர். நாணல் கூரைவீடு, சாணம் மெழுகிய தரை, எங்கும் மணல் மேடுகள், மணல் மூடிய தெருக்கள் வெளியுலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, அரணமுறுவலின் வழிகாட்டலில் அச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.
சிற்பி தனபால், ஓவியர்கள் ஆதிமூலம், வீரசந்தானம், அரண்மனைக்குறிச்சி கு.கைலாசம், மருது, பேராசிரியர் இளவரசு, பெரியாரியக்கத் தொண்டர் குருவிக்கரம்பை சு.வேலு என இவருக்கு அமைந்த நட்பு வட்டம் இவரது பதிப்புப் பணிக்குத் துணைநின்று வழிகாட்டியது.
எழுபத்து மூன்று வயதாகும் வைகறை தற்போது பதிப்புப் பணிகளில் ஈடுபடாவிட்டாலும் பதிப்புத் துறையின் கடந்த காலம், சமகாலப் போக்குகள் பற்றிய தமது காத்திரமான கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்: “அச்சு என்பது பிரதி எடுத்தல்தான், பதிப்பித்தல் என்பது ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் வரிவடிவப் பதிப்புகளைப் படியெடுத்து மொழிநடையை இலக்கணப்படி சரிசெய்து அச்சிடுவதற்கு ஏற்ற மூலப்படியாகத் தயார் செய்வதுதான் பதிப்பித்தல் என்பது. உ.வே.சாமிநாதர் ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியச் செல்வங்களை அச்சுச்சுவடிக்கு மாற்றி உயிர் கொடுத்தார். ஓலைச்சுவடி வழி பாடம் கேட்ட கடைசி தலைமுறை அவர்.
இருபதாம் நூற்றாண்டு அச்சு ஊடகமான புத்தகங்கள், பத்திரிகைகள், பல பதிப்புகள் காணும் நூல்கள் என்று பதிப்புத் துறை அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. பல பதிப்புகளைத் தேடிப் படித்து மூலப் பிரதியோடு ஒப்பிட்டுச் சரியான பாட பேதங்களோடு பதிப்பிக்கிற தற்காலப் பதிப்பாசிரியர்களாக ய.மணிகண்டன். ஆ.இரா.வேங்கடாசலபதி, பழ.அதியமான் ஆகியோரைக் கூறலாம்.
பல அரிய நூல்கள் மறுபதிப்பாக வெளிவருவதற்குக் காரணமாக இருந்தவர்களான ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி பல்லடம் மாணிக்கம் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். வடிவமைப்பை அச்சுக் கோப்பவரோ அல்லது கணினியை இயக்குபவரோதான் செய்கிறார். இதற்கு எந்த அழகியல் உணர்வும் தேவை இல்லை. பெரும்பாலும் தமிழ்ப் புத்தகத் தொழிலில் புரூப் ரீடர்தான் எடிட்டராக இருக்கிறார். ஏனென்றால் புத்தகத் தொழில் இன்னும் குடிசைத் தொழிலாகத்தான் இருக்கிறது.
தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு மனோபாவம் மாறவில்லை. பதிப்பக உரிமையாளர்கள் காரில் போகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். ஆனால் படைப்பாளிகளும் காரில் போகும் அளவுக்கு ராயல்டி கிடைக்க வேண்டும். புத்தகத் தொழிலுக்குத் தேவையான புத்தகத் தயாரிப்புப் பிரிவு, பிரதியைத் தயார்படுத்தும் ஆசிரியர்கள், புத்தகத்தைச் சந்தைப்படுத்தும் விற்பனைப்பிரிவு என்ற மூன்று அம்சங்களோடு ஒரு சில பதிப்பகங்கள்தான் இயங்கிவருகின்றன.
வாசகர் சார்ந்த சந்தை என்றால் பபாசி நடத்தும் சென்னை புத்தகக் காட்சியைச் சொல்லலாம். வாசிப்புத் தன்மை உடைய வாசகர்களின் வாங்கும் சக்தியை மீறும் அளவிற்குப் புத்தகங்கள் குவிக்கப்படுகின்றன. புத்தகக் கடைகளும் அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன. புத்தகங்களுக்கான அடுத்த சந்தை அரசு நூலகங்கள்தான். நூலக ஆணையைப் பெறுவதற்குப் பெரும் அதிகாரப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியால் நூல்களின் தரம் பின்னோக்கித் தள்ளப்படுகிறது.
நான் படிப்பதற்காக நானே பதிப்பித்துக்கொண்ட நூல்கள்தான் நான் வெளியிட்ட நூல்கள். லாப நட்டக் கணக்குப் பார்த்தால் படுதோல்வி அடைந்த பதிப்பாளன்” எனப் புன்னகை இழையோடத் தன் கருத்தைச் சொல்லி முடிக்கிறார் வைகறை. ஆனால், அறிவு விருத்தியை அடிப்படையாகக் கொண்ட பதிப்புத்துறை வெற்றி என்பது புத்தக விற்பனையால் மட்டும் அளவிடப்படுவதில்லையே!
- தஞ்சாவூர்க் கவிராயர் எழுத்தாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com