Published : 03 Dec 2016 11:33 AM
Last Updated : 03 Dec 2016 11:33 AM

கலைகிறதா நேருவின் புத்தகக் கனவு?

சுதந்திர இந்தியாவின் ஜனநாயகக் குழந்தைகளுள் 'நேஷனல் புக் டிரஸ்ட்' (என்.பி.டி.) அமைப்பும் ஒன்று. சாகித்ய அகாடமியும் லலித் கலா அகாடமியும் அதன் உடன் பிறப்புகள். 'நேஷனல் புக் டிரஸ்ட்' கடந்த ஓராண்டாக செயற் குழுவும் அறங்காவலர் குழுவும் இல்லாமல் இருப்பதாகச் செய்தி கள் வெளியாகியுள்ளன. இதைச் செயல்படாமல் வைத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.எஸ்.எஸ். சார்பு நபர்களை அரசு புகுத்துவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

'நேஷனல் புக் டிரஸ்ட்' நேருவின் புத்தகக் கனவு! தன்னாட்சி அறக்கட்டளையாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் 1957-ல் இது உருவானது. மலிவான விலையில் நல்ல புத்தகங்கள் என்பது அதன் குறிக்கோள். புத்தகங்களைத் தயாரித்தல், வாசிப்பை ஊக்குவித்தல், நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் உதவுதல், குழந்தை இலக்கியம் வளர்த்தல், ஆகியவை இதன் கடமைகள். பல இந்திய மொழிகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. சிறப்பான ஓவியங்களோடு வெளியாகும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் இதன் தனிச்சிறப்பு. வெளிநாடுகளிலும் இந்தியப் புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறது இது.

பேராசிரியர் விபின் சந்திரா 2004 முதல் 2012 வரை இதன் தலைவராக இருந்தபோது, சமூக அறிவியல், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள், உலகின் பிற பகுதிகளில் வாழும் இந்தியர் களின் வாழ்வு பற்றிய புத்தகங்களும் வெளியாயின. அவருக்குப்பிறகு மலையாள எழுத்தாளர் ஏ. சேதுமாதவன் தலைவர் ஆனார். புதிதாகப் பதவியேற்ற மத்திய அரசு, சேதுமாதவனின் பதவிக் காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டது. கடந்த 2015 மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 'பாஞ்சஜன்யா' இதழின் முன்னாள் ஆசிரியர் பல்தேவ் சர்மா 'நேஷனல் புக் டிரஸ்ட்'டின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பல்தேவ் சர்மா மத்திய அரசின் விருப்பங்களுக்கும் சார்பு களுக்கும் ஏற்ப 'நேஷனல் புக் டிரஸ்ட்'டை மாற்றிவருவதாக அறிவுலகினர் கவலை தெரிவித்துவருகிறார்கள். இது போன்ற அமைப்புகள் அரசியல் சார்பு, அரசின் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்ற நேருவின் விருப்பம் அபாயத்துக் குள்ளாகியுள்ளது.

சாகித்ய அகாடமியை உருவாக்கி அதன் தலைவராக நேரு இருந்தபோது, 'சாகித்ய அகாடமி'யின் தலைவர் நேருவின் செயல்பாட்டில் பிரதமர் நேருவின் தலையீட்டை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்' என்று அவர் கூறினார். மேலான இந்த அணுகுமுறையை அடியொற்றி, 'நேஷனல் புக் டிரஸ்ட்' அமைப்பின் அரசியல் சாயத்தை நீக்கவும் அதற்குப் புத்துயிர் கொடுக்கவும் அரசு முன்வர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x