

தொண்டை நாடும் வைணவமும்
முனைவர் இரா.வ. கமலக்கண்ணன்
விலை: ரூ. 225
யாழினி பதிப்பகம்,
சென்னை.
 044- 25369892.
தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்கை முதலான விவரங்கள், முதலாழ்வார்கள் காலத்தில் இருந்த சமய நிலை போன்றவற்றைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஏழு இயல்களில் தொண்டை நாட்டில் வைணவம் தழைத்த வரலாற்றை நெருங்கி நின்று நம்மை தரிசிக்க வைக்கும் அனுபவத்தைத் தருகிறது நூலாசிரியரின் முனைவர் பட்டத்துக்கான இந்த ஆய்வு நூல்.
திரை மணிக்கோவை (வியப்பூட்டும் அன்றைய திரைத்துளிகள்)
‘குண்டூசி’ பி.ஆர்.எஸ். கோபால்
விலை: ரூ. 40
விஜயா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை - 26
 044- 2365 2007
பிரபல சினிமா பத்திரிகையாளரான ‘குண்டூசி’ பி.ஆர்.எஸ். கோபால் ‘பொம்மை’ இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவர் 1937-ம் ஆண்டிலிருந்து சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். சினிமா பத்திரிகையில் முதன்முறையாகக் கேள்வி-பதில் பகுதியை இவர்தான் ஆரம்பித்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் தமிழ் சினிமா சம்பந்தமான சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், ‘குண்டூசி’ பி.ஆர்.எஸ்.கோபாலின் சினிமாத் துறை அனுபவங்களையும் இந்நூல் விளக்குகிறது.
ஜெயந்தன் - தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தேர்வும் தொகுப்பும்: அகரமுதல்வன்
விலை: ரூ. 200
டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-600078
 8754507070
தமிழ்ச் சிறுகதையுலகுக்கு 1970-களில் அறிமுகமான குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயந்தன். மனிதர்களின் அக மனச் சித்திரங்களை மையமாகக் கொண்டு ஜெயந்தன் எழுதிய கதைகளிலிருந்து 18 கதைகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன.
சமூகத்தின் மேன்மைகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க மனோபாவத்தைப் பகடி செய்கின்றன ஜெயந்தனின் கதைகள். உரையாடல்கள் வழியே வேகமாய் அடித்துப் பாய்கிற ஜெயந்தனின் கதைமொழி, கதைகளின் முடிப்பில் வாசகர் மனதில் கேள்விகளாகக் குத்திட்டு நிற்கின்றன.
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
ந. பெரியசாமி
விலை: ரூ. 30
தக்கை வெளியீடு, சேலம்-636503
 9487646819
குழந்தைகளின் மனவுலகை நெகிழ்ந்த மொழியில் கவிதையாக்கிவரும் கவிஞரின் நான்காம் கவிதைத் தொகுதி இது. மழலை வார்த்தைகளால் மொழியை அழகாக்கும் குழந்தைகள், பெரியசாமியின் கவிதை வழி மேலும் அழகாகிறார்கள். வலியின் சித்திரங்கள்,கையசைப்பின் புன்னகை, வெற்றுத்தாளை வனமாக்கியவள், காத்திருப்பின் தரிசனம் ஆகிய கவிதைகள் தனித்த கவனத்தைக் கோருகின்றன. புத்தக வடிவமைப்பு எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.
ஆனந்த யாழ்
தொகுப்பு: ஆரூர் தமிழ்நாடன்
விலை: ரூ. 170
நக்கீரன் வெளியீடு, சென்னை - 14
 044- 43993000
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரைப் பற்றி நண்பர்களும், இலக்கிய தோழர்களும், திரையுலகத்தினரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களின் தொகுப்பு இந்நூல். ‘இனிய உதயம்’ ஆகஸ்ட் 2016 இதழிலும், இன்னும் பிற இதழ்களிலும் அவரைப் பற்றி வெளியான படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், நா. முத்துக்குமாரின் சில நேர்காணல்களையும் இந்தப் புத்தகத்தில் காண முடிகிறது. எத்தனை பேர் வாழ்க்கையில் முத்துக்குமார் இடம்பிடித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
தொகுப்பு: மு.மு., ரவி, கனி