

குழப்பங்கள், சிரமங்கள்
அரங்குகளின் எண் வரிசையைத் தொடர்வதில் குழப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசையின் முகப்பிலும் பதிப்பகங்களின் பெயர், அரங்கு எண்களைத் தெரிவிக்கும் பதாகைகள் இந்த முறை வைக்கப்படவில்லை. மாறாக அரங்குப் பட்டியல் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு கேட்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதனால் எண்களை வைத்து அரங்குகளைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ஒரு வரிசையிலிருந்து இன்னொரு வரிசைக்கு எளிதாகச் செல்ல முடியாத வகையில் வரிசை முகப்புகளில் தடுப்பு போடப்பட்டிருந்தது. சில வரிசைகளின் முகப்பில் மட்டுமே குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. அரங்குகளுக்குள் போதுமான காற்றோட்டம் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அவ்வப்போது ஒலிப் பெருக்கியின் மூலம் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்புகள் செய்துகொண்டே இருந்தது புத்தக வெளியீடு, எழுத்தாளர்- வாசகர் உரையாடல் ஆகியவற்றைப் பாதித்தது. நடைபாதை சில இடங்களில் ஏற்ற இறக்கத்துடன் தடுக்கி விழவைப்பதுப் போல் இருந்தது.
அரசின் ஒத்துழைப்பு
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்திவரும் சென்னைப் புத்தகக் காட்சிக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது ஒத்துழைப்பையும் நிதியுதவியையும் அளித்துவருகிறது.இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வழங்கப்படும் ‘கலைஞர் பொற்கிழி விருது’களை முதலமைச்சரே விருதாளர்களுக்கு வழங்கினார். கூடுதலாக இந்தாண்டு சர்வதேசப் புத்தகக் காட்சியை அரசே நடத்தவும் தொடங்கியிருக்கிறது.
கையெழுத்தான ஒப்பந்தங்கள்!
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்திய சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி 16-18), 30 நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், பதிப்புரிமை முகவர்கள் பங்கெடுத்தனர். தமிழில் இருந்து அயல்மொழிக்கு 90, தமிழில் இருந்து பிற மாநில மொழிகளுக்கு 60, பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு 170, பிற மொழிகளில் இருந்து மற்ற மொழிகளுக்கு 45 என இக்கண்காட்சியில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்ப் பதிப்புலகில் இது ஓர் முக்கிய முன்னகர்வு.
மேம்பட்ட வசதிகள்
சென்னை புத்தகக் காட்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வருவோர், வாகன நிறுத்துமிடத்திலிருந்து நீண்ட தூரம் நடந்து செல்வதற்கான நிர்ப்பந்தம் தவிர்க்கப்பட்டது. அரங்குகளுக்குள் இணைய இணைப்பு, மொபைல் சிக்னல் ஆகியவை மேம்பட்டிருந்தன. இலவச வைஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கார்டு, டிஜிட்டல் வழியில் பணம் செலுத்த முடியவில்லை என்னும் புகார்களை அரிதாகவே கேட்க முடிந்தது. பல அரங்குகளுக்கு நடந்து சென்றும் நின்றுகொண்டே புத்தகங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பைப் போக்கிக்கொள்ள அரங்குகள் இருந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்த ஓய்வறை முதியோருக்குப் பெரிதும் பயனளித்தது. ஆனால், இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களின் அசெளகரியங்களை உணர்ந்து பாலூட்டும் அறை ஒதுக்கப் பட்டிருந்ததும் பாராட்டுக்குரிய முன்னெடுப்பு.
சுளுந்தீ சர்ச்சை
முத்துநாகு எழுதிய ‘சுளுந்தீ’ தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ஆதி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. ஆனால், சர்வதேசப் புத்தகக் காட்சிப் பதிப்புரிமை கேட்டலாக்கில் தடாகம் பதிப்பகம் தங்கள் வெளியீடாக இந்த நாவலை முன்மொழிந்திருந்தது. இது பற்றி ஆதி பதிப்பாளர் தில்லை முரளி, ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தது விவாதமாகியிருந்தது. ஆனால், இது குறித்து சம்பந்தப்பட்ட பதிப்பகமோ எழுத்தாளரோ பதிலளிக்கவில்லை.
‘சால்ட்’ எதிர்ப்பு
சால்ட் பதிப்பகத்துக்கு அரங்கு ஒதுக்கப்படாதது சர்ச்சையாகியிருந்தது. இந்நிலையில் சால்ட் பதிப்பகம் புத்தகக் காட்சிக்கு வெளியே நடைபாதையோரத்தில் கடையை விரித்து எதிர்ப்பைப் பதிவுசெய்தது. எழுத்தாளர்கள் பலரும் இங்கு விருந்தினர்களாக வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
இலக்கியத் திருவிழா
சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழா இந்தாண்டு கவனம் ஈர்த்த விஷயங்களில் ஒன்று. நூற்றுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் ஓர் அமர்வில் கலந்துகொண்டனர். பேசாப் பொருளை பேசுவதற்கான வெளியாக அது அமைந்தது.
சரிந்த விற்பனை
சென்னைப் புத்தகக் காட்சி என்பது தமிழ்ப் பதிப்புகலத்தைப் பொருத்தமட்டில் ஒரு பெரிய லாபகரமான சந்தை. ஆனால், இந்தாண்டு விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக பதிப்பாளர்கள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டது இந்தச் சரிவுக்கான காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதனால் சென்னைப் புத்தகக் காட்சியை மட்டும் மையப்படுத்தாமல் லாபம் பிரிந்திருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
விலையடக்கப் பதிப்புகள்
இந்தப் புத்தகக் காட்சியில் விலையடக்கப் பதிப்புகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிப்பகங்கள் இந்தப் புத்தகக் காட்சியில் விலையடக்கப் பதிப்புகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ மொழிபெயர்ப்பு நாவலும் காலச்சுவடு வெளியிட்ட தொ.பரவசிவன் நேர்காணல் தொகுப்பும் கவனத்தை ஈர்த்தன.
கேட்டலாக்கில் போதாமை
மிகக் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டாலும், சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது. முதல்முறை என்பதால் அதற்குரிய குறைபாடுகள் தவிர்க்கமுடியாதவை என்றாலும், ‘பதிப்புரிமை கேட்டலாக்’கில் இடம்பெற்ற பெரும்பான்மை நூல்களின் தேர்வு கேள்விக்குரியதாக இருந்தது. நவீனத் தமிழிலக்கியத்தை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டின் சமூக-அரசியலைப் பிரதிபலிக்கும் நூல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தில், விற்பனையை மையப்படுத்தி ஒப்புக்கு எழுதப்படும் நூல்களும் இடம்பெற்றது வருத்தத்துக்குரியது.
சிறை நூலகத்துக்கு ஓர் அரங்கு
குற்றவாளிகளின் சீர்திருத்தத்துக்கும் புத்தக வாசிப்புக்கும் உள்ள தொடர்பை அரசு, பதிப்பாளர்கள், வாசகர்கள் என அனைத்து தரப்பினரும் உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு சிறைத் துறைக்குத் தனி அரங்கு (எண்:286), ஒதுக்கப்பட்டு சிறைக் கைதிகளுக்கு நூல்களை நன்கொடை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாசகர்கள் பலர் தம் கையிருப்பிலிருந்தும் புத்தகக் காட்சியில் விலைகொடுத்து வாங்கியும் நூல்களைச் சிறைக் கைதிகளுக்காக அளித்தனர். பதிப்பாளர்களும் தமது வெளியீடுகளை இந்த அரங்கில் கொண்டுசென்று கொடுத்ததைக் காண முடிந்தது.
மேம்பட்ட வசதிகள்
சென்னை புத்தகக் காட்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வருவோர், வாகன நிறுத்துமிடத்திலிருந்து நீண்ட தூரம் நடந்து செல்வதற்கான நிர்ப்பந்தம் தவிர்க்கப்பட்டது. அரங்குகளுக்குள் இணைய இணைப்பு, மொபைல் சிக்னல் ஆகியவை மேம்பட்டிருந்தன. இலவச வைஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கார்டு, டிஜிட்டல் வழியில் பணம் செலுத்த முடியவில்லை என்னும் புகார்களை அரிதாகவே கேட்க முடிந்தது. பல அரங்குகளுக்கு நடந்து சென்றும் நின்றுகொண்டே புத்தகங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பைப் போக்கிக்கொள்ள அரங்குகள் இருந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்த ஓய்வறை முதியோருக்குப் பெரிதும் பயனளித்தது. ஆனால், இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களின் அசெளகரியங்களை உணர்ந்து பாலூட்டும் அறை ஒதுக்கப் பட்டிருந்ததும் பாராட்டுக்குரிய முன்னெடுப்பு.
பால்புதுமையினருக்குப் பச்சைக்கொடி
முற்றிலும் பால்புதுமையினர் தொடர்பான நூல்களுக்காகவே ஒரு அரங்கு (எண் 28) ஒதுக்கப்பட்டிருந்தது இந்தப் புத்தகக் காட்சியின் சிறந்த அம்சங்களில் ஒன்று. திருநர்கள், தன்பால் ஈர்ப்பாளர்கள் ஆகியோரின் சுயசரிதைகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பால்புதுமையினர் பற்றிய நூல்கள் ஆகியவை தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த அரங்கை அலங்கரித்தன. ‘க்வீர் பப்ளிஷிங் ஹவுஸ்’ என்னும் பெயரில் அமைந்திருந்த இந்த அரங்கைப் பலதரப்பட்ட வாசகர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டதையும் நூல்களை வாங்கியதையும் காண முடிந்தது.
புத்தகக் காட்சி நிறைவு
புத்தகக் காட்சியில் தாராளமான ஞெகிழிப் பயன்பாட்டைக் காண முடிந்தது. புத்தகங்களுக்கு உறையாக ஞெகிழி பயன்படுத்தப்படுகிறது. சில அரங்குகளில் ஞெகிழிப் பைகளும் பயன்படுத்தப்பட்டன. உணவகம், வாசகர்கள் பசியாறத்தானே தவிர அது தனித் தொழில் அல்ல என்பதை உணர்ந்து பதார்த்தங்களுக்கான விலையை பபாசி நிர்ணயிக்க வேண்டும். இது போன்ற பல எதிர்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு இடையில் புத்தகக் காட்சி இன்று நிறைவடைகிறது. அடுத்தாண்டு இக்குறைகள் களையப்படும் என நம்புவோம்.l