Last Updated : 10 Dec, 2016 11:26 AM

 

Published : 10 Dec 2016 11:26 AM
Last Updated : 10 Dec 2016 11:26 AM

காதலின் முழுமையான தலபுராணம்

இந்த உலகிலேயே அதிகம் மலினப்படுத்தப்பட்டதும் புனிதப்படுத்தப்பட்டதுமான சொல்லாகக் காதல்தான் இருக்க வேண்டும். விளம்பரங்கள், வெகுஜன ஊடகங்கள் முதல் நவீன சந்தை வரை ஆண்-பெண்ணுக்கு இடையிலான ஈர்ப்பையும் காதலையும்தான் தங்களின் முதலீடாக வைத்துள்ளன. மனிதாபிமானம், லட்சியங்கள், விழுமியங்கள் மிகவும் குறைந்துவிட்டதாகக் கருதப்படும் தற்போதைய உலகில் தற்காலிகமான உணர்வாக இருப்பினும், ஆதி முதல் இன்று வரை, காதல்தான் இன்றைக்கும் நம்பத் தகுந்த, மாசுபாடுகள் குறைந்த விழுமியமாக இருக்கிறது. ஒரு மனித உயிர் சக உயிரிடம், நிபந்தனைகள் ஏதுமற்று சரணடையும் உறவுநிலையாகக் காதலே இருக்கிறது.

கல்வித்துறை ஆய்வாளரும் கவிஞருமான டயன் அக்கர்மேன் எழுதியுள்ள ‘காதல் வரலாறு’ நூல் கவிஞரின் உள்ளுணர்வும், ஆராய்ச்சியாளரின் தீர்க்கமான முடிவுகளும் இணைந்த அரிதான நூல். இந்த நூலை காதல் என்ற உணர்வு தொடர்பான ஒரு விரிவான கலை ஆய்வுக் களஞ்சியம் என்றே சொல்ல முடியும். பகுத்தறிவு தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட, சாதி, வர்க்க வேறுபாடுகள் தாண்டிய ஒரு வேட்கையை நுண்ணுணர்வுடன் எழுதிய நூல் இது. இந்த நூலின் ஆசிரியர் ஒரு பெண் என்பது மேலும் சிறப்பம்சமாகும். இவர் புலன்களின் வரலாறு என்ற புகழ்பெற்ற நூலையும் எழுதியுள்ளார்.

காதல் என்ற கருத்துரு உருவான காலம் மற்றும் இடம், புராதன காலத்திலிருந்து நவீன காலம் வரைக்கும் மேற்கத்திய நாடுகளில் காதல் தொடர்புடன் உருவான கலைகள், புகழ்பெற்ற காவியக் காதலர்கள், காதலுக்கும் பாலுணர்வுக்கும் இடையிலான பந்தம், உடல் இச்சை தொடர்பில் இல்லாத காதல் உறவுகள் என அறுநூறு பக்கங்களில் நீள்கிறது இந்நூல்.

ப்ளேட்டோ, ஃபிராய்டு முதல் ப்ரூஸ்த் வரை காதலைப் பற்றிய கருத்தாக்கங்கள் மாறிய விதத்தைத் தொகுத்துச் சொல்கிறார் ஆசிரியர். மானுடவியல், உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் காதல் என்ற புலனுணர்வுகள் செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகளையும் விளக்குகிறார். காதல், களியாட்டம் தொடர்பாகப் பொதுமக்களிடம் காணப்படும் கதைகள், கதாபாத்திரங்கள் குறித்த விரிவான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. நிறைய பெண்களை ஈர்க்கும் ஆணை ‘காசனோவா’ என்று குறிப்பிடுகிறோம். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே தெரியும். அதன் கதை இந்த நூலில் உள்ளது. இடிதாங்கியைக் கண்டுபிடித்துக் கொடுத்த மைக்கேல் ஃபாரடே மிகப் பெரிய காதலராக இப்புத்தகத்தில் நினைவுகூரப்படுகிறார்.

இத்தனை பெரிய நூலில் காதலின் வெவ்வேறு உணர்வுநிலைகள், உக்கிரம், வலி மற்றும் இன்றியமையாமை பற்றி பேசும் ஆசிரியர் ஒருபோதும் அதை வரையறுக்க முயலவில்லை. “காதலைப் பொறுத்தவரை காலமும் தேசமும் அர்த்தமற்றவை. அத்தளத்தில் எல்லா நெருப்பும் ஒரே நெருப்பே” என்கிறார். நேசமும் மரணமும் ஏன் ஒன்றுக்கொன்று எப்போதும் தொடர்புடையதாக இருக்கிறது? என்ற கேள்வியையும் அவர் வைக்கிறார். “மரணம் வரும்போது நாம் மிகுந்த விழிப்புணர்வையும் உயிர்ப்பையும் அடைகிறோம். அதேதான் காதலிலும்” என்ற பதிலையும் சொல்கிறார் டயன் அக்கர்மேன்.

காதலின் பெயரால் ஆணவக் கொலைகள் அதிகரித்திருக்கும் நிலப்பரப்பில் காலம் காலமாகத் தொடரும் ஒரு அபூர்வ உணர்வு நிலை குறித்து ஆழமாகத் தமிழர்கள் பயில்வதற்கான அருங்கொடை இந்த மொழிபெயர்ப்பு.

- ஷங்கர், தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x