

சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தகக் காட்சி, 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில் 22 அரங்குகள். அதில் இரண்டே இரண்டு அரங்குகளில்தான் தமிழ் நூல்கள் இருந்தன. ‘பாரி நிலைய’மும், ‘பூம்புகார் பதிப்பக’மும் அதில் பங்கேற்றன. மீதம் 20 அரங்குகளில் ஆங்கிலப் புத்தகங்கள். அது ஆங்கிலப் புத்தகக் காட்சிதான்.
ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்தான் இந்த முயற்சியைத் தொடங்கியவர்கள். அக்காட்சியில் குழந்தைகளுக்கான நூல்களே முதன்மைப்படுத்தப்பட்டன. குழந்தைகளுக்கான புத்தக விழாவாகவே அதனைத் திட்டமிட்டனர். அதோடு இணைந்து வேறு ஆங்கில நூல்களும் இடம்பெற்றன.
இதில் தமிழ்ப் புத்தக உலகம் பங்குபெறத் தொடங்கியது பிற்காலத்தில்தான். 45 காட்சிகளில், 44இல் பங்கேற்ற அனுபவம் எனக்கு உண்டு. இப்போது 46ஆவது காட்சி அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. முதல் 25 ஆண்டுகள் வெகுசனம் பங்கேற்கும் நிகழ்வாக அது இல்லை. பிறகுதான் புத்தகக் காட்சியின் முகம் படிப்படியாக மாறத் தொடங்கியது. 2007இல் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்புக்குத் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி கொடுத்தார். இதன்மூலம் ஆண்டுதோறும் எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் ’பொற்கிழித் திட்டம்’ நடைமுறைக்கு வந்தது.
வாசகத் தளம்
தமிழ்ப் புத்தக வாசிப்புத் தளம் என்பது மிக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவில் அதிகளவில் புத்தகங்கள் வெளிவரும் மொழிகளில் தமிழுக்கு இரண்டாவது இடம்; முதலிடம் இந்தி என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, நாம் மூன்றில் ஒரு பங்குதான். அந்தக் கண்ணோட்டத்தில், அதிக மக்கள்தொகையுடைய மொழியுடன் ஒப்பிடும்போது, குறைந்த மக்கள்தொகையுடைய நாம், புத்தக வெளியீட்டில் இரண்டாவது இடம் பெற்றிருப்பதன் மூலம், உண்மையில் முதலிடத்தில்தான் இருக்கிறோம்.
மத்திய அரசின் நிறுவனமான சாகித்ய அகாடமியில், அதிக எண்ணிக்கையில் புத்தக வெளியீடு தமிழில்தான்; விற்பனையிலும் தமிழுக்குத்தான் முதலிடம். நமது புத்தகக் காட்சிகள் ஆண்டுதோறும் வளர்ச்சிபெறுவதும் உலகத் தரமான வடிவில் புத்தகங்களை வெளியிடுவதும் தமிழில் நிகழ்கிறது.
இப்போது அரசாங்கத்தின் உதவியோடு மாவட்டத் தலைநகரங்கள்தோறும் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்ச் சூழலில் வாசிப்பின் வளர்ச்சி, புத்தகங்களை வாங்கும் மனநிலை ஆகியவை பன்மடங்கு அதிகரித்துள்ளன. மக்களின் பெரும் விழாவாக, பண்பாட்டு விழாவாக இந்த நிகழ்வு வடிவம் பெற்றுவிட்டது. ஆனால், பண்பாட்டு விழாவாக இது நிகழ்த்தப்பெறுகிறதா என்கிற கேள்வி நம்முன் எழுகிறது.
பண்பாட்டு விழா
புத்தகம், வாசிப்பு நமது பண்பாட்டோடு இரண்டறக் கலந்தது. புத்தக விற்பனை தொடர்பாக நடைபெறும் இந்த விழா, புத்தகப் பண்பாட்டு விழாவாகவே நிகழ வேண்டும். வாசகர், எழுத்தாளர், புத்தக உற்பத்தியாளர், புத்தக விற்பனையாளர் எனும் நான்கு தரப்பினர் இடம்பெறும் செயல் இது.
இதில் உற்பத்தியாளரும் விற்பனையாளரும் புத்தகக் காட்சியை நிர்வகிக்கிறார்கள். வாசகர், எழுத்தாளர்களுக்கான வெளி என்பது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இந்த நிகழ்வில் அவர்கள் இருவர்தான் முழுமையானவர்கள். அவர்களே கச்சாப் பொருள். அவர்கள் இல்லாவிட்டால் உற்பத்தி இல்லை.
தமிழில் தரமான வாசகர் பெருக்கமும் தரமான வெகுசன விருப்பமும் சார்ந்த ஜோதிடப் புத்தகங்களும் சமையல் புத்தகங்களும் சுய முன்னேற்றப் புத்தகங்களும் மிக அதிகமாக புத்தக உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்டன. அது வெகுசன நுகர்வுப் பண்டமாகவே இருந்தது. ஆனால், அதற்கு மாற்றான புத்தக வாசிப்புப் பண்பாடும், சிரத்தையான புத்தக உருவாக்கப் பண்பாடும் கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளன.
இதைப் புத்தகக் காட்சி நடத்தும் அமைப்பு கணக்கில் கொண்டுள்ளதா என்பது சந்தேகம். இந்தப் பின்னணியில் வாசகர், எழுத்தாளர், வெகுசனம் ஆகியோர் இணைந்த விழாவாக இந்நிகழ்வு நடைபெற, புத்தக வணிக நிறுவனங்களும் தமிழக அரசும் திட்டமிட வேண்டிய தார்மிக நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், தரமான படைப்பாளிகள் இனம் காணப்படுதல் அவசியம். தரமான வாசகர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டும். குழந்தைகளும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்தக் காட்சிகளில் முதன்மை பெற வேண்டும். ஆய்வுத்தளம் உருவாக்கப்பட்டு, தமிழ் அச்சுப் பண்பாட்டின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆய்வுகளாக வெளிப்படுத்தும் ஆய்வரங்குகள் நடத்தப்பட வேண்டும். தமிழர் கலைகளை நாள்தோறும் கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
குழந்தைகளும் இளைஞர்களும் முதன்மையாகப் பங்கேற்கும் பண்பாட்டுத் திருவிழாவாக வடிவமைக்கப்பட வேண்டும். இதனைத் தமிழ்நாடு அரசு தரும் உதவிகள் மூலம் சாத்தியப்படுத்த முடியும். இதற்கான திட்டமிடல் பபாசி அமைப்பிடமும் தேவை.
- வீ.அரசு தமிழ்ப் பேராசிரியர்; தொடர்புக்கு: arasuveerasami@gmail.com