

தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சர்வதேசப் புத்தகக் காட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து, சர்வதேசப் புத்தகக் காட்சியை (ஜனவரி 16-18) நடத்துகின்றன. தமிழ்நாட்டின் அறிவுப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கவுள்ள இக்கண்காட்சி குறித்த பிரத்யேக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்:
சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தீர்மானித்தது எப்படி; அதன் தொடக்கம் பற்றிச் சொல்லுங்கள்.
தற்போதைய திராவிட மாடல் அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் முதலமைச்சர்தான் தொடக்கம். Knowing, Sharing and Creating என்று சொல்லக்கூடிய புதியன கற்றல், அறிவுப் பகிர்தல் மற்றும் படைப்புகளை உருவாக்குதல் எனும் நோக்கத்துடன் சர்வதேசப் புத்தகக் காட்சி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக முதலமைச்சர் ரூ.6 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளாதார ரீதியில் மேம்பட வேண்டும் எனும் எண்ணத்துடனும் தமிழ்ப் பதிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் மனதில் வைத்து இந்தச் சர்வதேசப் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேசப் புத்தகக் காட்சி என்பது நமக்கு முற்றிலும் புதிது. அரசு இதற்கு எப்படித் தயாராகியிருக்கிறது?
முதலமைச்சர் அவர்கள், ‘சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும்’ என்ற விருப்பத்தைச் சொன்னவுடனே நானும் எனது துறையைச் சார்ந்த அலுவலர்களும் அதற்கான பணிகளில் இறங்கினோம்.
எப்போதும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு இடையே நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியோடு இணைத்து, சர்வதேசப் புத்தகக் காட்சியை நடத்துவது என முடிவெடுத்தோம். 2022 நவம்பர் 5 அன்று, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அதற்கான இலச்சினை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து, சார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றோம். சார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி எங்களின் முயற்சிக்குப் பெரும் உறுதுணையாக விளங்கியது; புதிய யோசனைகளை வழங்கியது. அந்நாட்டு அரசுத் தூதர்கள் நமது முயற்சிக்கு ஆதரவளித்தனர். சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சிக்கான வரைவுக் குறிப்பையும் அவர்களிடம் வழங்கினோம்.
சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியில் பங்கெடுக்க விருக்கும் அயல்நாட்டுப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்தது எப்படி?
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எழுத்தாளர் களையும் இலக்கியங்களையும் கொண்டாடிவருகிறது. இந்த அரசின் முயற்சிக்குத் தமிழ் எழுத்தாளர்கள் உறுதுணையாக விளங்குகிறார்கள். சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி எனும் முயற்சியைத் தொடங்கியபோதே தமிழ் எழுத்தாளர்களும் எங்கள் துறை அலுவலர்களும் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். அவர்கள் இணைந்து அயல்நாட்டுப் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்தார்கள்.
முன்னதாக, எங்களது துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகக் காட்சியைப் பார்வையிட அரசால் அனுப்பிவைக்கப்பட்டார்கள். அங்கே பெற்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டோம். கிட்டத்தட்ட அனைத்துக் கண்டங்களில் இருந்தும் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30 பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், துறைசார் அதிகாரிகள் ஆகியோர் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியில் பங்கேற்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அரசின் மொழிபெயர்ப்பு நல்கை உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாக அறிகிறோம். ஒவ்வொரு நாட்டுக்கும், மொழிக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது?
‘திசைதோறும் திராவிடம்’, ‘முத்தமிழறிஞர் கலைஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்’ போன்ற திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேசப் புத்தகக் காட்சியின் மூலம் இத்திட்டங்கள் மேலும் விரிவடையும்.
மொழிபெயர்ப்புக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்து கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சுமார் 100 புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்குப் பரிமாறப்படும் என நம்புகிறோம். 50 புத்தகங்கள் தமிழ் மொழியிலிருந்து பிற உலக மொழிகளுக்கும், 50 நூல்கள் பிற உலக மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் கொண்டுவருவதே திட்டம்.
சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியில் பங்கேற்க, 75 தமிழ்ப் பதிப்பகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு பதிப்பகத்தினரிடம் இருந்தும் சிறந்த மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அரசின் சார்பாக பிரசுரக் குறிப்பு அச்சடிக்க உள்ளோம். அரசின் சார்பாக மற்ற மொழிபெயர்ப்பாளர்களிடமும் இக்குறிப்பை வழங்குவோம்.
அவர்கள் விருப்பம் தெரிவித்தால் வேற்று மொழிக்கு இப்புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். இவை அல்லாமல் கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்துப் பதிப்பாளர்களும் தனிப்பட்ட முறையில் பிற மொழிபெயர்ப்பாளர்களிடம் தங்களின் படைப்புகளை எடுத்துச் செல்லலாம்.
10 இந்திய மொழிகளுக்கும், 10 அயல்நாட்டு மொழிகளுக்கும் தலா 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலும் நிதிநல்கை வழங்கப்பட உள்ளது. உள்நாட்டு மொழி, பன்னாட்டு மொழி, புத்தகத்தின் தன்மையைக் கவனத்தில் கொண்டு, நிதிநல்கை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும். தமிழ் அறிவுலகை விரிவுபடுத்த நவீனத் தமிழிலக்கியத்தின் தலைநகரமான சென்னைக்கு உலகையே அழைத்துவருகிறோம். நிச்சயமாக, இந்த முயற்சி நம் சமூகத்தின் அறிவை விசாலமாக்கும்!
- சந்திப்பு: சு.அருண் பிரசாத்
தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in