பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பயன்படுத்துவது எப்படி?

பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பயன்படுத்துவது எப்படி?
Updated on
3 min read

பிராங்க்பர்ட் புத்தகச் சந்தைக்கு 2007இல் முதல் முறையாகச் சென்றேன். புத்தகங்களின் மெக்கா அது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்கக்கூடியது. 7000த்துக்கும் அதிகமான கடைகள் இருந்தன. காலச்சுவடு வெளியிட்ட சுமார் 25 தமிழ்ப் படைப்புகளின் ‘ரைட்ஸ் கேட்டலாக்’குடன் சென்றேன். அதைத் தயாரிப்பதற்குச் சுமார் ஓராண்டு எடுத்துக்கொண்டேன். ஒரு பதிப்பகம் வெளியிடும் நூல்களின் முழுப் பட்டியலுக்கான ஆங்கிலச் சொல் ‘கேட்டலாக்’.

அவர்கள் தமது முழுப் பட்டியலிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு உரிமையைக் கொடுக்க அல்லது திரைப்பட உரிமையை விற்பனை செய்வதற்கு என்று தயாரிக்கும் தேர்ந்தெடுத்த நூல்களின் பட்டியல் ‘ரைட்ஸ் கேட்டலாக்’ (Rights Catalogue). இது நூல், நூலாசிரியர் பற்றிய அறிமுகம், நுல் உரிமையை விற்பனை செய்ய அவசியமான தகவல்களுடன் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, வாசகர்கள் நூல்களை வாங்குவதற்கான சந்தை அல்ல; அது தொழில்சார் சந்திப்புகளுக்கானது. நூல் சார்ந்த உரிமைகளைப் பரிமாறிக்கொள்வதற்கானது. பதிப்புத் தொழில் சார்ந்த நமது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவும் பல வாய்ப்புகள் இருக்கும். அச்சகத்தார், தாள் விற்பனையாளர்கள், நூல் விநியோகிப்பாளர்கள், மென்பொருளாளர்கள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

அங்கு நான் சந்தித்த பதிப்புத் துறையினர் பலரும் தமிழைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களைக் கேட்டதும் ஒளிப்படங்களைப் பார்த்ததும் அதுதான் முதல்முறை. எனக்குப் பிராங்பர்ட்டுக்குப் பயணிக்க இரண்டு நோக்கங்கள் இருந்தன: உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவது, தமிழ்ப் படைப்புகள் உலக மொழிகளுக்குச் செல்ல வகைசெய்வது.

முதல் திட்டம் நிறைவேறப் பல வாய்ப்புகள் அமைந்தன. நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், ஓரான் பாமுக் போன்றோரைத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சி முதல் பயணத்திலேயே தொடங்கியது. பல நாடுகள், மொழிகள் சார்ந்த அமைப்புகள் அங்கு அரங்கமைத்து, படித்துப் பார்க்க நூல்களைத் தருவது, உரிமை வாங்க உதவுவது, மொழிபெயர்க்க நல்கை தருவது என்று ஊக்கத்துடன் செயல்பட்டார்கள்.

ஆனால், நமது படைப்புகளை உலகிற்குக் கொண்டுசெல்ல உதவும் எந்த நிறுவனமும் இந்தியாவிற்கு இருக்கவில்லை. புத்தகப் பண்பாட்டிற்கான, இலக்கியத்துக்கான இந்திய அரசு நிறுவனங்களுடன் பல ஆண்டுகள் இது பற்றி உரையாடியும் பலன் கிடைக்கவில்லை. தமிழ் என்கிற மொழியை உலகம் அறியாத நிலையில், எந்தத் தமிழ் நவீன இலக்கியப் படைப்பையும் எழுத்தாளரையும் உலகம் அறியாத நிலையில், பிராங்க்பர்ட்டில் தமிழ்ப் படைப்புகளின் உரிமைகளை விற்பதென்பது காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதுபோல இருந்தது.

நம்மூர் மேடைகளில் நின்றுகொண்டு தமிழ்தான் உலகின் முதன்மை மொழி என்று மார்தட்டுவதற்கும் உலகச் சூழலில் தமிழுக்கு இருக்கும் குறைந்த அந்தஸ்திற்கும் பொருத்தமே இல்லை என்பதை உளமார உணர்ந்த தருணமது. இந்நிலை மாறுவதற்கான முழு உழைப்பையும் வழங்க முடிவுசெய்தேன். இருப்பினும் அத்தகைய முன்னெடுப்பு ஒரு மொழிப் பண்பாட்டுச் சூழல் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்.

பல ஆண்டுகள் பிராங்க்பர்ட்டில் போராடி ஒரு சில படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றபோது, நமது படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உதவிடும் நல்கை எதுவும் நமது நாட்டிற்கோ மொழிக்கோ இல்லையே என்ற ஏக்கம் மீண்டும் மீண்டும் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு அயல் மொழிப் பதிப்பாளருக்குத் தமிழ்ப் படைப்பை மொழிபெயர்த்துத் தனது மொழியில் வெளியிடும் ஆசை ஏற்படுகிறது என்று கொள்வோம்.

அந்த நூலையோ எழுத்தாளரையோ அவரது மொழி வாசகர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், தமிழ் என்ற மொழியையே அநேகர் அறிந்திருக்க மாட்டார்கள் எனும்போது, அதை வெளியிடுவதால் நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்ற தயக்கம் அவருக்கு ஏற்படும். அந்தப் பதிப்பாளருக்கு நல்கை கிடைக்குமென்றால் தயக்கம் குறைந்து ஒரு புதிய படைப்பாளியை தனது மொழிக்கு எடுத்துச்செல்லும் ஆர்வம் பெருகும்.

தமிழ்நாடு அரசின் சிறந்த முன்னெடுப்பு: தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரு எளிய திட்டத்தை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கீழ் உருவாக்கிய தமிழ்நாடு அரசு, கடந்த ஓராண்டில் தமிழ் இலக்கியத்தை உலகிற்குக் கொண்டுசெல்லும் ஒரு திட்டமாக அதை வேகமாக வளர்த்தெடுத்துவருகிறது. இத்தகைய முன்னெடுப்பின் ஒரு அங்கமாகச் சென்னை புத்தகச் காட்சியின் ஒரு பகுதியாகச் சர்வதேசப் புத்தகக் காட்சியை ஜனவரி 16 முதல் 18 வரை தமிழ்நாடு அரசு நடத்தவிருப்பது மிக முக்கியமான முன்னெடுப்பு. இதை ஆர்வமுடைய தமிழ்ப் பதிப்பாளர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனது அனுபவத்திலிருந்து சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில் உரிமை வாங்கிட:

1. நல்ல ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பதிப்புச் சூழலில் இல்லை. நமது கருத்தைச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் பேச, மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். நவீனத் தொழில்நுட்பம் தரும் மொழிபெயர்ப்பிகளையும் பிழைதிருத்திகளையும் பயன்படுத்துவது நல்லது. தேவையெனில் பதிப்பாளர் சந்திப்புகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களை அழைத்துச்செல்லலாம்.

2. ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னர் கையெழுத்திட வேண்டும். இல்லையேல், பணம்/உழைப்பு நஷ்டம் ஏற்படக்கூடும். சட்டச் சிக்கல்களும் உருப்பெறக்கூடும்.

3. ஒப்பந்த ஷரத்துகளை முழுமையாகவும் சரிவரவும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக உரிமை பெற்ற நூலை உரிய காலத்தில் வெளியிட வேண்டும்.

தமிழ் நூல்களின் உரிமையை விற்க:

1. மொழிபெயர்ப்பு உரிமை விற்பனைக்குப் பதிப்பாளர் எழுத்தாளருடன் அத்தகைய உரிமையைப் பெறும் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஒப்பந்தம் ஆங்கிலத்தில் இருப்பது நல்லது.

2. பன்னாட்டுப் பதிப்பாளர்கள் நமது நூல்களைத் தமிழில் படித்துப் பார்த்து மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே விற்பனை செய்ய விரும்பும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுமையாகவோ, பகுதியாகவோ வைத்திருப்பது அவசியம்.

3. உலகின் முன்னணிப் பதிப்பகங்களில் படைப்புகளின் மொழிபெயர்ப்பு உரிமைகளை விற்கும் எடிட்டர்கள் வேறு, வாங்குவோர் வேறு. விற்க வருபவர்கள் அதிகமும் வாங்க மாட்டார்கள். விற்க வருபவர்களை யாரும் சந்திக்கலாம். உரிமை வாங்குபவர்களைச் சந்திக்கக் கிடைப்பது ஒரு கொடுப்பினை.

பிற மொழி, நாட்டுப் பதிப்பாளர்களுடன் உறவாடும், ஒப்பந்தம் செய்யும் ஒவ்வொருவரும் நாம் தமிழ்ப் பண்பாட்டின் பிரதிநிதி என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். நமது விடுதல்கள், பிழைகள் அனைத்துப் பதிப்பாளர்களையும் அரசின் முயற்சியையும் பாதிக்கும். கெட்ட செய்தி மிக வேகமாகப் பரவும்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திப் பதிப்பாளர் ஒருவர் ஐரோப்பிய நல்கை வழங்கும் அமைப்புகளை ஏமாற்றிய கதையைப் பல ஆண்டுகளுக்கு டெல்லியிலிருந்து பிராங்க்பர்ட், இஸ்தான்புல்வரை பதிப்பாளர் சந்திப்புகளில் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதைக் கடந்து அவர்தம் நம்பிக்கையை மீட்பது எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது.

தமிழ்ப் பதிப்பாளர்களுக்குச் சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி பிற இந்திய மொழி, உலக மொழி பதிப்பாளர்களைச் சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்பு. நமது மொழி பதிப்புச் சூழல் எனும் கிணற்றைத் தாண்டும் ஆவல் கொண்டவர்கள் இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பதிப்புலகத்தின் உலகளாவிய பயணத்திற்கு 2023 ஒரு மைல்கல்லாகட்டும்!

- கண்ணன் பதிப்பாளர், காலச்சுவடு பதிப்பகம்
தொடர்புக்கு: publisher@kalachuvadu.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in