

திப்புவின் வாள்
பகவான் எஸ்.கித்வானி
தமிழில்: வெ.ஜீவானந்தம்,
விலை: ரூ.265
என்.சி.பி.எச், சென்னை 98.
044-26241288.
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாதவரான திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை, கதை வடிவில் பதிவு செய்யும் நாவல் இது. ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்டவர், போரில் பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியவர், விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தவர் என்று பல சிறப்புகளைக் கொண்ட திப்பு சுல்தானின் வரலாறு, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது கண்முன்னே மீண்டும் நிகழ்வதை உணர முடியும். இந்திய வரலாற்றில் திப்பு சுல்தானின் பெயரை நீக்கத் துடிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது.
*
நெல்லை வரலாற்றுச் சுவடுகள்
முத்தாலங்குறிச்சி காமராசு
ரூ.240.
காவ்யா, சென்னை-24.
044-23726882.
பொதுவாக நாளிதழ்களில் துணுக்குகள் அதிகம் கவனம் பெறாது. செய்திகளுக்குத்தான் பிரதான இடம் இருக்கும். இப்படி ஒரு நாளிதழில் எளிதில் கடந்துபோக வாய்ப்பிருக்கும் துணுக்குகள், சுருக்கமான அதே சமயத்தில் ஆழமாக கருத்துகளை வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாக இந்நூலில் விரிகின்றன. இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதாரிநாத் தெரிந்தவர்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அத்ரிநாத்தையும் அங்கு உருவான கங்கையைப் பற்றியும் இந்நூலில் தெரிந்துகொள்ளலாம். நெல்லை மண் சார்ந்த ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட நூல் இது.
*
கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை
சிற்பி விலை ரூ.80/-
கவிதா பப்ளிகேஷன், சென்னை-600017
044-24364243
'கவிதை பற்றிய எந்த முன் முடிவோடும் நான் எழுதுவது இல்லை'என்றபடி கடந்த அரை நூற்றாண்டு காலமாகக் கவிதை எழுதிவரும் மூத்த கவிஞர் சிற்பியின் சமீபத்திய கவிதை நூல் இது. சமூகத்தின் நிகழ்காலத் தாக்கங்களை கவிதைகளாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். 'மின் துளிர்கள்'எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள குறுங்கவிதைகளில்,
'மணல் தோண்டிய/ படுகுழிகளில் கிடக்கிறது/ ஆற்றின் சடலம்' எனும் வரிகள் சட்டென நம்மை ஈர்ப்பதாய் உள்ளன.
*
2015 மழையின் பிழையன்று மனிதனின் பிழை!
பி.டி. சக்திவேல்
விலை: ரூ. 130
வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை- 600 005.
97907 06549
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடரின் நினைவுகள் இன்னமும் ஈரம் காயாமல் இருக்கும் வேளையில் மறுபடியும் அதுபோல் ஆகிவிடுமோ என்ற அச்சமும் அதே ஈரத்துடன் இருக்கிறது. கடந்த ஆண்டின் பேரிடரிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் என்பதை உணர்த்தும் வகையில் வெளியாகியிருக்கிறது இந்த நூல் 'இயற்கையின் கோரத் தாண்டவம், நாம் என்ன செய்ய முடியும்?' என்று நாம் தப்பிவிட முடியாது. இயற்கையைக் கையாளத் தெரியாமல் சீரழித்ததே அந்தப் பேரிடருக்குப் பிரதானக் காரணம் என்பதை பி.டி. சக்திவேல் ஏராளமான தரவுகளுடன் நிறுவுகிறார்.