

சர்வதேச அளவில் இந்திய இலக்கியம் என அறியப்படுவது நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்தியர்களின் படைப்புகளே. பிற இந்திய மொழிகளில் வெளியாகும் படைப்புகளை மாநில மொழியில் எழுதப்பட்டவை. ‘மொழிபெயர்ப்புகள்’ என்று இரண்டாம் நிலையாகக் கருதும் போக்கே நீடிக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியும் இணையமும் சமூக ஊடகங்களும் புத்தகச் சந்தையும் இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்பும் தாய்மொழியில் எழுதும் ஒரு எழுத்தாளன் சர்வதேச அளவில் கவனம் பெறுவது என்பது பெரும் சவாலே. ஆங்கிலத்தில் வெளியாகும் ஞாயிறு இணைப்புகளில் பேசப்படுவது உண்மையான இந்திய இலக்கியமில்லை. நிஜமான இந்திய இலக்கியம் என்பது பன்மைத்துவம் கொண்டது. பல்வேறு தீவிர இலக்கியப்போக்குகளின் சங்கமம்.
இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படும் எந்த ஒரு நாவலுக்கும் இணையாக இந்திய மொழிகளில் நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை உரிய கவனம் பெறவில்லை. இந்திய மொழிகளில் சிறுகதை எட்டியுள்ள உயரம் நிகரற்றது. உண்மையில் இவ்வளவு வேறுபட்ட கதைக் களன்களை, கூறல் முறையை, வடிவத்தைக் கொண்ட சிறுகதைகள் வேறு எந்தத் தேசத்திலும் எழுதப்படவில்லை. குறிப்பாகத் தமிழ்ச் சிறுகதையுலகம் அடைந்துள்ள விரிவும் உச்சமும் நிகரற்றது. அதை நாமும் சரியாக உணரவில்லை. உலகிற்கும் அடையாளம் காட்டவில்லை.
போலிப் போக்குகள்: இரண்டாயிரத்துக்குப் பிறகான இந்த 20 ஆண்டுகளில் இந்திய இலக்கியத்தின் முகம் வெகுவாக மாறியிருக்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்ட புதிய பரிசோதனை இலக்கியங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இணைய இதழ்களின் வருகையால் சிற்றிதழ்களின் பங்களிப்பு சுருங்கிவிட்டது. மாற்றுச் சிந்தனைகள், தத்துவார்த்தத் தேடல்கள் மெல்லக் குறைந்து வருவதுடன் உள்ளீடற்ற, படைப்புகள் அதிகம் வெளியாகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாகச் செய்தி ஊடகங்களுடன் போட்டியிடும் பணியினை இலக்கியம் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதன் விளைவாகச் சந்தைக்கு ஏற்ப எழுதுதல், பரபரப்பான சமூகப் பிரச்சினைகளை விற்பனைப் பொருளாக மாற்றுதல், போலி பாவனைகள் கொண்ட எழுத்துகளைப் பெருஞ்சாதனைகளாக அடையாளம் காட்டுதல் போன்ற தன்மைகள் உருவாகின.
இந்திய இலக்கியத்தின் மையப்போக்காக வரலாற்றை/புராணங்களை மீள் உருவாக்கம் செய்தல் உருவாகியுள்ளது. இன்று இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கும் அனீஸ் சலீம், டி.டி.ராமகிருஷ்ணன், கே.ஆர். மீரா, நேமிசந்த்ரா, அமிதவ் கோஷ், அருண் சர்மா, இந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்றுள்ள கீதாஞ்சலி போன்ற பலரும் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதிவருகிறார்கள்.
சென்ற தலைமுறைபோல வரலாற்றுப் பெருமைகளை மட்டுமே பேசுவதோ இனம், மொழி சார்ந்த அடையாளங்களுக்குள் தங்களை வைத்துக்கொள்ளவோ விரும்பாத இன்றைய தலைமுறை கடந்த கால வரலாற்றை நம்ப மறுக்கிறது; ஆராய விரும்புகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள், வரலாற்று நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் வாழ்க்கை, வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத மக்களின் வாழ்க்கை நிலை இவற்றை நாவலாக எழுதவும் வாசிக்கவும் விரும்புகிறார்கள்.
50 களில் தொடங்கி 80 வரை கிராமப்புற வாழ்க்கையைச் சித்தரித்த நாவல்களே இந்திய இலக்கியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டன. நவீனத்துவத்தின் அடுத்த படிநிலையில் நகரை மையமாகக்கொண்ட படைப்புகள் உருவாகின. குறிப்பாக, நகரமயமாதல். நகரவாழ்வின் நெருக்கடிகள், வேலையின்மை. நடைபாதை வாசிகளின் நிலை, மத்தியதர வாழ்க்கையின் அவலங்கள் நாவல்களாக எழுதப்பட்டன. மலையாளத்திலும் வங்கத்திலும் மராத்தி யிலும் இந்தியிலும் சிறந்த நாவல்கள் வெளியாகின.
தொடராத நவீனம்: 1990 களில் இந்தியா முழுவதும் தலித் இலக்கியம் தன்வரலாற்றுப் புனைவுகள், பாலியல் ஒடுக்குமுறைகள் பற்றி எழுதுதல், பிறழ்வு எழுத்துகள், விளிம்பு நிலை வாழ்க்கையைப் பதிவுசெய்தல் போன்றவை முக்கிய இலக்கியப் போக்காக மாறின. இந்த அலை பின்நவீனத்துவத்தை நோக்கி இந்திய இலக்கியம் நகர்ந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்கியது. ஆனால், அது தொடரவில்லை. பத்தாண்டுகளில் அடங்கிவிட்டது.
இன்றைய இந்திய இலக்கியப் போக்கினை இப்படி வரையறை செய்யலாம். 1. வரலாற்றை/ இதிகாசம் மற்றும் தொன்மங்களை மீள் உருவாக்கம் செய்து எழுதுதல் 2. பெருநகர வாழ்க்கையை எழுதுதல் 3. புலம்பெயர்ந்த வாழ்க்கை, நினைவுகளை எழுதுதல் 4. பெண்களின் அக-புறவாழ்வும் அதன் நெருக்கடிகளும் 5. பாலியல் இச்சை, ஒடுக்குமுறைகள், அது சார்ந்த பண்பாட்டுச் சிக்கல்கள், உளவியலை எழுதுதல் 6. சுய அடையாளம், மிதமிஞ்சிய நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதிப்புகளை எழுதுதல்.
பதிவுசெய்யப்படாத வெற்றிடங்கள்: சமகால இலக்கியம் அரசியலால் பாதிக்கப்பட்டபோதும் அதை விமர்சனம் செய்தோ, ஆய்வு செய்தோ நாவல் எழுதுவது குறைவாகவே உள்ளது. அதுபோலவே சாதி, மதம் சார்ந்த வன்முறைகள், இணையக் குற்றங்கள், பொருளாதார மோசடிகள், நுகர்வு உருவாக்கும் மாயவலை பற்றிய நாவல்களும் அதிகம் எழுதப்படவில்லை. தனிநபரின் பாலியல் சிக்கல்கள், வரலாற்றை மறுபுனைவாக்குதல், குற்றவுலகினை ஆராதித்தல் போன்றவையே இன்று முதன்மையாக எழுதப்படுகின்றன.
கிராமத்திலிருந்து நகருக்கும் பின்பு நகரிலிருந்து புலம்பெயர்தலை நோக்கியும் நகர்ந்த இலக்கியம், இன்று தனிநபரின் அறைக்குள் அதுவும் அவனது படுக்கை அறை, கணிப்பொறிக்குள் விரியும் உலகையே முதன்மையாகச் சித்தரிக்கிறது. இன்றைய தனிநபர் இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது சமூக வாழ்க்கை வேறுவிதமாகவும் தனிப்பட்ட வாழ்க்கை வேறுவிதமாகவும் இருக்கிறது. அவர் ஒரு விநோதமான இரட்டை நிலை மனிதரே. இந்த இரட்டை நிலையின் அபத்தத்தை, சந்தோஷத்தை, துயரை இன்னும் ஆழமாக அணுகி எழுத வேண்டியிருக்கிறது.
விவேக் ஷான்பெக், உன்னி ஆர், ஷம்சூர் ரஹ்மான் ஃபரூக்கி, உதய் பிரகாஷ், கிரண் நகார்கர், ஜெயந்த் கைகினி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், ஊர்மிளா பவார், ரிஷிகேஷ் பாண்டா, பி.ராமன், வீரான்குட்டி, கே.ஆர்.மீரா, ஜேனிஸ் பரியத், கல்பற்றா நாராயணன் என நீளும் பட்டியலே உண்மையான இந்திய இலக்கியத்தின் முகங்கள். இதில் சிலருடைய புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி வாசிக்கும்போது இந்திய இலக்கியத்தின் பன்மைத்துவத்தையும் தனித்தன்மையினையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.
- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர், தொடர்புக்கு: writerramki@gmail.com