

எழுத்தாளர் பாவண்ணனின் சிறுகதைத் தொகுப்பு ‘ஆனந்த நிலையம்’. மொத்தம் பத்து சிறுகதைகள். அத்தனை கதைகளும் பாண்டிச்சேரியையும் சுற்றுவட்டாரத்தையும் மையமாகக் கொண்டவை. பெரும்பாலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை விவரிக்கின்றன. ‘ஆனந்த நிலையம்’, ‘கடைசி வரை’, ‘பூக்காத மரம்’ ஆகிய மூன்று சிறுகதைகளும் மனித சுயநலத்தைப் பேசுகின்றன.
கதைகள், யார் வழியாகக் காட்சிப் படிமம் போல் விரிவடைகின்றன என்பதுதான் முக்கியம். வீடு விற்பனை செய்யும் தரகரின் உதவியாளர், பூங்காவில் ஒளிப்படம் எடுப்பவர், மரண வீட்டில் கிளாரினெட் வாசிப்பவர் என்று அந்தந்தச் சூழலின் அங்கமாக இருக்கும் ஒருவரின் வாயிலாகக் கதை சொல்லப்படுவதுதான் யதார்த்தம்.
ஒரு சாதாரண கிராமத்து மூதாட்டிக்குள் இருக்கும் ஆழ் மன உணர்வுகளை எந்த அதிர்வும் இல்லாமல் சொல்லிச் செல்கிறது ‘முறி மருந்து’. ‘பழுது’ கதை தொலைபேசி இலாகாவில் வேலை பார்ப்பவரின் மனைவி எவனோ ஒரு ஜவுளிக்கடைக்காரருடன் புறப்பட்டுப் போனாள் என்ற விஷயத்தைக் கொச்சைப்படுத்தாமல் சொல்கிறது. ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு அரசு இலாகா எப்படி இயங்குகிறது என்பதுதான் விஷயம். ‘சங்கராபரணி’ ஒரு தெள்ளிய நீரோடைக்குள் பளிச்சிடும் கூழாங்கல்லைப் போன்ற ஒரு கதை.
கதைமாந்தர்கள் வெகு சாதாரணமானவர்கள். ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் சிப்பந்திகள். மனிதர்களுக்குள் இருக்கும் மேன்மையைப் பார்க்கத் தெரிந்துவிட்டால் சாதாரணம்கூட அசாதாரணமாகிவிடுகிறது. ‘தனிவழி’ கதையில் வரும் பாட்டுக்காரர் ஊரையே தன் பாட்டால் சொக்க வைக்கிறார். ஊர்ச் சிறுவர்களுக்குப் பல விஷயங்களைச் சொல்லித் தருகிறார். அவர்களுக்குள் புதிய ஆர்வங்களைத் தூண்டுகிறார். அக்ரஹாரத்திலிருந்து வரும் அழைப்பை மென்மையாக நிராகரிக்கிறார். அவர் ஏன் நிராகரிக்கிறார் என்பது சொல்லாமலே புரிகிறது.
இந்தக் கதையில் சிறுவன் ஒருவன் பாட்டுக்காரரிடம் சில பாடல்களைக் கற்றுக்கொள்கிறான். அதேசமயம், வீட்டில் அவன் சகோதரி விளையாடத் துணையில்லாமல் வெளியில் போகவும் வழியில்லாமல் உட்கார்ந்திருக்கிறாள். இது போன்ற முரண்பாடுகள் கதையின் ஓட்டத்தில் இழைந்து வருவதுதான் சிறப்பு. தயிர் விற்கும் வள்ளி வீட்டுக்கே வந்து கொல்லைப்புறத்தில் நெய் காய்ச்சுகிறாள்.
அதில் முருங்கை இலையைப் போட்டு கேழ்வரகு மாவைக் கலந்து அவள் செய்து தரப்போகும் நெய் வண்டலுக்காகச் சுற்றிச் சுற்றி வருகிறான் வீட்டுச் சிறுவன். எந்த வீட்டில்தான் பிரச்சினைகள் இல்லை? ஆனால், நெருங்கிய சொந்தங்களால்கூடப் பளிச்சென்று புத்திமதிகள் சொல்லிவிட முடியாது. சொன்னால் அது வேறுவிதமாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.
ஆனால் நெய் காய்ச்சிக்கொண்டே அக்கம்பக்கத்து வீட்டுத் தகவல்களைச் சொல்லும் விதத்தில் அந்த வீட்டில் படிந்திருக்கும் வண்டலை அகற்ற முயல்கிறாள் வள்ளி. நெய் வண்டலைப் பற்றி விவரித்தாலும் ‘வண்டல்’ என்பதே கதையின் தலைப்பு. கதைகளின் ஓட்டத்தில் ஆங்காங்கே வெளிப்படும் தகவல்கள், தத்துவப் பார்வைகள், பிரமிப்பூட்டும் இயற்கைச் சூழல் என வாசிப்பவர்களுக்கு இந்நூல் அனுபவ விருந்து படைக்கிறது.
ஆனந்த நிலையம்
பாவண்ணன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.200
- கே.பாரதி, எழுத்தாளர், தொடர்புக்கு: bharathichandru14@gmail.com