புத்தகத் திருவிழா 2023 | சர்ச்சைகள் இல்லாமல் எழுத ஓர் ‘அசுரலோகத்தை’ உருவாக்கியிருக்கிறேன்: பெருமாள் முருகன் நேர்காணல்

புத்தகத் திருவிழா 2023 | சர்ச்சைகள் இல்லாமல் எழுத ஓர் ‘அசுரலோகத்தை’ உருவாக்கியிருக்கிறேன்: பெருமாள் முருகன் நேர்காணல்
Updated on
3 min read

பெருமாள் முருகன், சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், பதிப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். ‘மாதொருபாகன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ ஆகிய இவரது நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளன. அமெரிக்காவின் உயரிய இலக்கிய விருதான ‘தேசியப் புத்தக விருது’க்கான குறும்பட்டியலிலும் நெடும்பட்டியலிலும் இவரது நாவல்கள் இடம்பிடித்துள்ளன. இந்திய அளவில் பல விருதுகளை இவரது ஆக்கங்கள் பெற்றுள்ளன. இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், போலிஷ், செக் எனப் பல உலக மொழிகளிலும் மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் இவரது ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெருமாள் முருகனின் நூல்களைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உங்களது ‘நெடுநேரம்’ புதிய நாவலுக்கு ஆணவக் கொலைகள்தாம் ஆதாரமா?

பிஞ்ச் (Bynge) செயலியில் 2021ஆம் ஆண்டு தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான சூழலை எதிர்கொள்கிறது. நாற்பதாண்டுகளாக அணையாமல் கனன்று நிற்கும் அக்காதலை மையமிட்டுச் செல்கிறது நாவல். காதல் சார்ந்த விழுமியங்களைக் காலம் எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் விசித்திரமான குணங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறேன்.

ஊர்கள், சாதிகள் எல்லாம் கற்பனைப் பெயர்களாக இருக்கின்றன?

ஆமாம். ‘மாதொருபாகன்’ நாவலில் வரும் ஊர்ப் பெயர்கள், பாத்திரப் பெயர்கள்கூடப் பிரச்சினைக்கு உள்ளாகின. அதன் பிரதான பாத்திரம் ‘பொன்னா’ என்று அழைக்கப்படும் பொன்னாயி, கொங்குப் பகுதியில் பரவலாகப் பெண்கள் பெயர். ஊரில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பொன்னாவிடம் சிலர் போய் ‘உங்களை இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்’ என்று சொல்லிவிட்டார்கள். வருத்தப்பட்டு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார் அவர். மக்கட்பெயர், ஊர்ப் பெயர், சாதிப் பெயர் ஆகியவை பிரச்சினைக்கு ஆதாரமாயின. அதன் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவர இயலவில்லை. ஆகவே ‘பூனாச்சி’ நாவல் முதற்கொண்டு ‘அசுரலோக’த்தைக் கதைக்களமாக்கி அதற்குரிய பெயர்களைச் சூட்டி எழுதுகிறேன். ‘நெடுநேரம்’ நாவலிலும் புதிய பெயர்கள் தொடர்கின்றன.

இந்த நாவலில் உங்கள் கூற்றுமொழியில் ஒரு துரிதம் தெரிகிறது...

மகிழ்ச்சி. சமகால வாழ்வை எழுதும்போது இயல்பாகவே மொழித்துரிதம் கூடும். இந்நாவல் கரோனா பொதுமுடக்கத்தைப் பின்னணியாகக் கொண்டது. இன்றைய இளைஞன் ஒருவனின் நோக்குநிலை. இரண்டும் இந்த மொழித்துரிதத்தைக் கூட்டக் காரணமாக இருக்கலாம். இதைத் தொடராக எழுதத் தொடங்கியபோது வாரம் இரண்டு இயல்கள் என வெளியிட்டார்கள். ‘தினமும் ஓர் இயல் வெளியிட்டால் நல்லது’ என வாசக வேண்டுகோள் வந்ததால் அன்றாடம் ஓர் இயல் வெளியிடும்படி நேர்ந்தது. அதற்கேற்ற வகையில் விரைவாக எழுதினேன். ஓர் இயல் ஆயிரம் சொற்கள் என்கிற வரையறையும் இருந்தது. இவையும் காரணமாக இருக்கலாம். வாசகர்கள் ஆவலோடு வாசிக்க இந்த மொழித்துரிதம் உதவியது. அதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

தீவிர இலக்கியம், வெகுசன இலக்கியம் இடைவெளி இன்றைக்குக் குறைந்துவருகிறதா?

அப்படித் தோன்றவில்லை. இப்போதும் இரண்டுக்குமான இடைவெளி தெளிவாகவே இருக்கிறது. தீவிர இலக்கியம் கூடுதலான வாசகர்களைச் சென்றடைகிறது. அதனால் இந்த மயக்கம் தோன்றுகிறது. பெருந்திரளான வாசகர்கள் வாசித்தால் அது தீவிர இலக்கியமாக இருக்காது என்னும் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் உட்கூறுகள் பல உள்ளன. அவற்றில் மாற்றம் நேரவில்லை. சான்றாக ஒன்றைச் சொல்கிறேன். தீவிர இலக்கியம் விதிவிலக்குகளின் மேல் கவனம் குவிக்கும். வெகுசன இலக்கியம் விதிகளின் மீது கவனம் கொள்ளும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

‘மாதொருபாகன்’ சர்ச்சை உங்கள் எழுத்தில் என்னவிதமான பாதிப்பை விளைவித்துள்ளது?

அதைத் தெளிவாகச் சொல்ல எனக்கே தெரியவில்லை. ‘மாதொருபாகன்’ பிரச்சினைக்கு முன் நான் எழுத நினைத்திருந்தவற்றை இப்போது எழுத முடியவில்லை. அவற்றைப் புதுப்பிக்கும் உத்வேகம் கூடவே இல்லை. புதிதாகத் தோன்றுபவற்றையே எழுதுகிறேன். முன்சொன்னதுபோல ‘அசுரலோகம்’ என்னும் கற்பனைப் பின்புலத்தைப் படைத்துக்கொள்வது எனக்குச் சஞ்சரிக்க வசதியாக இருக்கிறது. பெயர்களைப் புதிதாக உருவாக்குவது உற்சாகம் தருகிறது. இப்படி என்னவெல்லாம் நேர்ந்திருக்கின்றன என்பதை இன்னும் கொஞ்சகாலம் கடந்து பார்த்தால் சுவாரசியமான விஷயங்கள் பிடிபடும் என்று நினைக்கிறேன்.

இந்திய ஆங்கில இலக்கிய உலகமும் சர்வதேச இலக்கிய உலகமும் தமிழ்ப் படைப்புகளை எப்படி அணுகுகின்றன?

மிகுந்த ஆரோக்கியத்தோடு அணுகுகின்றன. இந்தச் சூழலை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆரோக்கிய மனநிலை நம்மிடையே இல்லை என்பதுதான் குறை. ஆங்கிலப் பதிப்புலக நடைமுறைகள், சர்வதேசப் பதிப்புலக நடைமுறைகள் ஆகியவற்றை நன்றாக அறிந்துகொண்டு தெளிவுடன் முயன்றால் தமிழ்ப் படைப்புகளைப் பெரிய அளவுக்குக் கொண்டு சேர்க்கலாம். இதில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். பலருடைய படைப்புகளையும் பிற மொழிகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இப்போது தமிழக அரசு சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடுசெய்துள்ளது. இது சிறந்த முன்னெடுப்பு. தமிழ் எழுத்தாளர்களும் பதிப்புலகமும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களின் சிறந்த ஆக்கங்களுக்கு ஆங்கிலத்தில் கிராக்கி இல்லை. இங்குள்ள பிரச்சினைகளைத்தான் ஆங்கில இலக்கியம் விரும்புகிறதா?

அப்படியல்ல. எல்லாப் படைப்புகளுமே பிரச்சினை களைத்தானே பேசுகின்றன? வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளில்தான் ஆங்கிலப் பதிப்புலகம் மிகுதியும் கவனம் செலுத்துகிறது. ஒரு நூலைச் சந்தைப்படுத்தலுக்கு எழுத்தாளர் தேவைப்படுகிறார். நூல் அறிமுகம், விவாதம், வாசிப்பு, நேர்காணல் என்பவை எல்லாம் எழுத்தாளரின் இருப்பால் சாத்தியமாகின்றவை. மேலும் வாழும் எழுத்தாளர் ஏதோ ஒருவகையில் சமகாலத்தின் பிரதிநிதியாகத் தம் படைப்புகளில் வெளிப்படுகிறார். சமகாலத்தைப் பேசும் படைப்புகளுக்குக் கிராக்கி அதிகம்தான். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி முதலியோரின் படைப்புகள் நவீனச் செவ்வியல் தன்மை பெற்றுவிட்டவை. பொதுவாகவே செவ்வியல் இலக்கியங்களுக்குக் குறைவான வாசகர்கள்தாம் உண்டு. அந்த வாசகர்களை நோக்கித் தமிழின் நவீனச் செவ்வியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தும் நல்ல மொழிபெயர்ப்பிலும் கொடுத்தால் தமிழ் முன்னோடி எழுத்தாளர்கள் பலருக்கும் வரவேற்பு இருக்கும்.

இலக்கியத்தில் இளம் தலைமுறை எப்படி இருக்கிறது?

உற்சாகமாக இயங்குவதைக் காண்கிறேன். என் தலைமுறை எழுத்தாளர்கள் எழுதத் தயங்கியவற்றை எல்லாம் சாதாரணமாக எழுதுகிறார்கள். இந்தத் தலைமுறை அனுபவிக்கும் சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு காண்கிறேன். மொழி ஆளுமை சிலரிடம் மட்டுமே நன்றாக இருக்கிறது. பெரும்பாலோர் மொழியில் ஆளுமை குறைந்தவர்களாகவே உள்ளனர். அது நம் கல்விமுறையின் குறைபாடு என்றும் தோன்றுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in