

மணிகண்டன், அச்சுத் துறையில் 20 வருடம் அனுபவம் கொண்டவர். ரமணி பிரிண்ட் சொல்யூசன் அச்சகத்தின் உரிமையாளர். ‘நூல்வனம்’, ‘வானம்’ ஆகிய பெயர்களில் புத்தகங்களையும் பதிப்பித்துவருகிறார்.
இப்போது புத்தகத் தயாரிப்பில் பிஓடிதான் (POD–Print on demand) ஆதிக்கம் செலுத்துகிறது...
இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் இந்த பிஓடி முறை தமிழுக்கு அறிமுகமாகி 12 வருஷமாகிவிட்டது. வந்த புதிதில் ஜெராக்ஸ் எடுக்கிற மாதிரிதான் பிஓடி எனப் பலரும் நினைத்தனர். அதனால் பிஓடி மை அழிந்துவிடும் என்றெல்லாம் பேச்சு இருந்தது. ஆனால், பல ஆண்டுகள் மை அழியாத மாதிரி நல்ல தரமான பிஓடி இயந்திரங்கள் இப்போது வந்திருக்கின்றன. அந்தத் தொடக்ககாலத் தயக்கங்கள் இன்று மாறியிருக்கின்றன.
பிஓடி சாதகமானதுதானா?
பிஓடி தொழில்நுட்பம் வந்ததால் புத்தகங்களைத் தேக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பல பதிப்பகங்களும் தேவைக்குப் புத்தகங்களை அச்சிட்டுக்கொள்கிறார்கள். பிஓடி தொழில்நுட்பத்தால் அதிகமான புத்தகங்கள் உருவாகிவருவதும் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், பலரும் தனி நபர்களாகப் புத்தகம் வெளியிடுகி றார்கள். இதனால் புத்தகங்களுக்கு எடிட்டர் இல்லாமல் அதன் உள்ளடக்கம் கேள்விக்கு உரியதாகிவிட்டது.
புத்தகங்கள் வாங்குவது சமீப காலமாக அதிகமாகிவருவதற்கு பிஓடி ஒரு காரணமா?
இல்லை. அதற்குச் சமூக ஊடகங்கள்தாம் காரணம். ஃபேஸ்புக்கில் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதினாலே அதைப் படித்துவிட்டுப் புத்தகங்கள் வாங்கப் பலரும் முன்வருகிறார்கள். இதுதான் ஒருவகையில் பிஓடி தயாரிப்பு அதிகமாகக் காரணம் எனலாம்.
இந்த பிஓடி நுட்பம் என்ன தேவைக்காக உருவானது?
வெளிநாடுகளில் ஒற்றைப் பிரதி மாதிரி (single copy model) என்று சொல்வார்கள். புத்தகம் கையிருப்பில் இருக்காது. ஆனால், வாசகர்கள் கேட்டால், அதைத் தயாரித்துக் கொடுப்பார்கள். இந்த நுட்பம் இணைய விற்பனையை ஒட்டித் தொடங்கப்பட்டது. அமேசான் போன்ற இணைய விற்பனை நிறுவனங்களுடன் ஒரு புத்தகப் பதிப்பாளர் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களது புத்தக மென் பிரதிகளை நிறுவனத்துக்கு வழங்கிவிட்டால், வாசகர்கள் அதை இணையத்தில் தருவிக்கும்போது அதை பிஓடியில் அச்சிட்டு அனுப்பிவிடுவார்கள். இதில் பதிப்பாளர் களின் பங்கு பெருமளவு மிச்சம். லாபமும் கிடைக்கும். இப்படி ஆரம்பிக்கப்பட்டது இன்று இந்த இடத்திற்கு நகர்ந்திருக் கிறது. இந்த ‘ஒற்றைப் பிரதி மாதிரி’யில் தமிழில் கிழக்கு, காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் ஈடுபட்டுவருகின்றன.
ஆஃப்செட்டில் அச்சிடுவதுதான் தரமானது என்பது ஒரு கற்பிதம்தானா?
காகிதம் தயாரிப்பதில் தண்ணீர்தான் முக்கியமானது. பிஓடியில் இயந்திரங்கள், மையைக் காகிதத்தில் கொட்டி, குறிப்பிட்ட வெப்பநிலையில் இறுக்கிவைக்கின்றன. இதனால் காகிதத்தின் நீர்த்தன்மை பாதிக்கப்படுகிறது. ஒரு விறைப்புத்தன்மையும் வந்துவிடும். ஆஃப் செட்டில் மை, ஒரு உருளை வழியாகத்தான் காகிதத்தில் இறங்கும். இதனால் காகிதம் பாதிக்கப்படாது. அதனால் இதைக் கற்பிதம் எனச் சொல்ல முடியாது.
புத்தக விற்பனையில் புத்தகத் தயாரிப்புக்குப் பங்கு இருக்கிறதா?
தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ 90, 100 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. ஆனால், நான் அதை கிளாசிக் நேர்த்தியுடன் தயாரித்துப் பதிப்பித்தேன். விலை ரூ.220. இதுவரை 1,200 பிரதிகள் விற்றிருக்கின்றன. அதுபோல் ‘சூதாடி’ நாவல் ரூ.250க்குக் கிடைக்கும் நிலையில் அதை 500 ரூபாய்க்கு வெளியிட்டுள்ளேன். அதற்கும் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு. ‘போரும் வாழ்வும்’ நாவலை ஹேண்ட்மேட் லெதரில் வெளியிடலாம் என்பது என் ஆசை. ஆனால், அந்த மாதிரி 10 நூல் உருவாக்கவே ரெண்டுநாள் பிடிக்கும். விலை நிர்ணயமும் சவாலானதுதான். சர்வதேசப் புத்தகத் தரத்துடன் ஒப்பிட்டால் இம்மாதிரியான காரணங்களால் நாம் பின்தங்கிதான் இருக்கிறோம்.
ஒரு புத்தகத் தயாரிப்பாளராக நீங்கள் முன்மாதிரியாகக் கொள்ளும் புத்தகங்களைச் சொல்ல முடியுமா?
இங்கிலாந்து பதிப்பகமான எவ்ரிமேன்ஸ் லைப்ரரி தயாரிக்கும் புத்தகங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நான் அதை வாங்கிப் பார்த்திருக்கிறேன். சிறார் இலக்கியம், நேர்காணல், கட்டுரைகள் என உள்ளடக்கம் சார்ந்து புத்தகங்களைத் தயாரிக்கிறார்கள். அதுமாதிரி தமிழில் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு.