புத்தகத் திருவிழா 2023 | என் கதைகளில் நிலமும் ஒரு கதாபாத்திரம்தான்: சு.தமிழ்ச்செல்வி நேர்காணல்

புத்தகத் திருவிழா 2023 | என் கதைகளில் நிலமும் ஒரு கதாபாத்திரம்தான்: சு.தமிழ்ச்செல்வி நேர்காணல்
Updated on
2 min read

தமிழில் கவனம் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வி. ‘மாணிக்கம்’ என்ற தன் முதல் நாவலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதைப் பெற்றவர். அடித்தட்டு மக்களின் பாடுகள்தாம் இவரது எழுத்தின் பாடுபொருள். கதைகள் வழி நிலம், பண்பாடு ஆகிய அம்சங்களைச் சொல்வதில் தீராக் காதல் உள்ளவர். அதனால், தமிழின் ‘சிறந்த மானுடவியல் எழுத்தாளர்’ என்ற அடையாளமும் பெற்றவர். சு.தமிழ்ச்செல்வியின் நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்சிபிஹெச்) பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உங்கள் எழுத்துகளை ‘இனவரைவியல்’ என்ற வகைக்குள் அடைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் அப்படித் திட்டமிட்டு எழுதவில்லை. ஆனால், என் எழுத்துகளை ஆய்வுசெய்பவர்கள் இதைக் கண்டுபிடிக்கின்றனர். அந்த அம்சங்கள் இயல்பாக என் கதைகளில் அமைந்திருக்கின்றன.

மானுடவியல் ஆய்வுகளைப் பதிவுசெய்யும் வேலையை இலக்கியங்கள் ஏன் செய்ய வேண்டும்?

இலக்கியவாதிகள் ஆய்வுசெய்ய வேண்டியதில்லை. மானுடவியல் ஆய்வாளர்கள் நாவல்களை ஆராயும்போது இதைக் கவனிக்கிறார்கள். தமிழ் பல முகங்களைக் கொண்டது. அதை வட்டார வழக்கு என நாம் வகைப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால், அதைத் தனியாகவோ தரம் குறைந்ததாகவோ பார்க்க வேண்டியதில்லை. இதுவும் இலக்கியம்தான்.

நிலமும் பண்பாடும்தான் உங்களை எழுதுவதற்குத் தூண்டுகின்றனவா?

இல்லை. அப்படிப் பொதுமைப்படுத்த முடியாது. ‘மாணிக்கம்’ எழுத ஆரம்பித்தபோது மாணிக்கத்தின் வாழ்க்கையைத்தான் முதலில் நினைத்தேன். பிறகுதான் அதில் செல்லாயி, நிலம் எல்லாம் வந்தன. ‘கற்றாழை’ எழுதும்போது உப்பளம் என்னும் நிலத்தை மையப்படுத்தித்தான் எழுத நினைத்தேன். ‘கீதாரி’யில் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் செல்லும் நாடோடி வாழ்க்கை முறையைப் பதிவுசெய்ய நினைத்தேன். இப்படி ஒவ்வொன்றும் ஒரு மாதிரி.

ஒரு நிலத்துக் கதாபாத்திரங்களை வேறு நிலத்தில் நட்டுவைப்பதுண்டா?

சமூகத்தின் பார்வையிலிருந்து ஒதுக்கப்படுபவர்கள், இருட்டடிப்புச் செய்யப்படுபவர்கள் இவர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அவர்களை அவர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நிலம் இந்த அம்சங்களுடன் பதிவுசெய்கிறேன். அதுதான் அந்த மனிதர்களுக்கு நான் செய்யும் நியாயமாக இருக்கும். என் நாவல்களில் நிலம் ஒரு கதாபாத்திரம். அதைப் பிரித்து மக்களின் கதைகளைச் சொல்ல முடியாது.

உங்கள் பெரும்பாலான நாவல்கள் பெண்கள் பக்கம் நின்றே பேசுகின்றன. ‘மாணிக்கம்’ ஆணை மையப்படுத்தியது என்றாலும் நீங்கள் செல்லாயியைத்தான் அதிகம் பேசுகிறீர்கள்...

‘மாணிக்கம்’ நாவல் மாணிக்கம் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதியதுதான். ஆனால், எழுதத் தொடங்கிய பிறகு ஒரு பெண்ணாக செல்லாயியின் பக்கம் நின்றேன். என்ன செய்தாலும் மாணிக்கத்துக்கு என்னால் வலு சேர்க்கவே முடியவில்லை. அந்தக் கதாபாத்திரம் அவ்வளவு பலவீனமாக இருந்தது.

உங்கள் சிறந்த நாவல்களில் ஒன்றான ‘கண்ணகி’, இளங்கோவடிகளின் கற்புக்கரசி பிம்பத்துக்கான பதிலா?

அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் எந்த மூலைமுடுக்கில் நின்று கேட்டாலும் கண்ணகி என்றால் கற்புக்கரசி என்பார்கள். ஆனால், எல்லாருக்கும் இது பொதுவா? இளங்கோவடிகள் கண்ணகி கதாபாத்திரத்தை ஒரு கற்புக்கரசியாக வடிவமைத்திருக்கிறார். என்னுடைய எளிய கண்ணகிக்கு அதெல்லாம் சாத்தியப்படவில்லை. எல்லாராலும் அதைக் கடைப்பிடிக்க முடியுமா? இந்தச் சூழலில் ‘கற்பு’ என்பது பெண்ணுக்கு எதிரான விரோதம் என்றுதான் தோன்றுகிறது.

என்னுடைய கண்ணகி வாழ்க்கையில் பெரும் பாடுகளையும் அனுபவங்களையும் பெறுகிறாள்.காப்பியக் கண்ணகியையும் இவளையும் ஒப்பிட்டால் தராசுத்தட்டில் இவள்தான் கனமானவள். ஆனால், நம் சமூகம் இவளை ஒழுக்கங்கெட்டவள் எனச் சொல்கிறது. இந்தக் கற்பு என்பது காலடியில் மிதிபட்டு நசுங்குகிற சருகு மாதிரிதான். அந்தக் கோபத்தில் இதை எழுதினேன்.

‘ஆறுகாட்டுத்துறை’ நாவலும் இந்த வரிசையில் தகழியின் ‘செம்மீன்’ நாவலுக்கான பதிலா?

இல்லை. அந்த நாவல் மீனவ வழக்கத்தை மையமாகக் கொண்டது. நான் பொதுவான விஷயங்களைத் தான் இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன். ஒரு ஆண், இரண்டு மனைவிகளுடன் வாழ்வதைச் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், ஒரு பெண் இரு ஆண்களுடன் வாழ்வதை ஏன் கேலிக்குரியதாக, விமர்சனத்துக்குரியதாகப் பார்க்க வேண்டும்? ‘ஆறுகாட்டுத்துறை’ நாவலில் அவளுக்கு இயல்பாகத்தான் இரண்டாவது மணம் நடக்கும். ஆனால், அதற்கு ஏன் இந்தச் சமூகம் பதற்றம் கொள்கிறது? இதைத்தான் கேட்க நினைத்தேன்.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு பையன். தகப்பன் இல்லாதவன். பள்ளிக்கூடத்தில் ஒருநாள் மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றோம். அந்தப் பையன் ரொம்ப வால். இப்படிச் சுற்றுலா போகும்போது மருத்துவ உதவிக்காக ஒரு மருத்துவரை அழைத்துச் செல்வது வழக்கம். அப்போதுதான் எம்.பி.பி.எஸ். முடித்த ஒரு பெண்ணை அழைத்துச் சென்றோம். இந்தப் பையனை நான் பார்த்துக்கொள்கிறேன் என அந்தப் பெண், தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டாள். அவளிடம் அந்தப் பையன் தன் அனுபவத்தைச் சொல்வதுதான் நாவல்.

இப்போது எழுதுகிறவர்களை வாசிக்கிறீர்களா?

அவரவர் அவரவர் அனுபவங்களை எழுதிவருகிறார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் இந்த எழுத்துகள் என்னைப் பாதிக்கின்றன. எந்தப் படைப்பும் ஏமாற்றம் தரவில்லை. முன்பு தமிழ் எழுத்துகள், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையைத்தான் சொல்லிவந்தன. இப்போது புதுப் புது வாழ்க்கையைப் புதியவர்கள் பதிவுசெய்கிறார்கள். அந்தந்த வாழ்க்கையைச் சம்பந்தப்பட்டவர்களின் குரலிலேயே கேட்பது முக்கியமானதாக இருக்கிறது.

சந்திப்பு: மண்குதிரை
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co
.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in