

கலை, இலக்கியம் சார்ந்த பதிப்புகள் என்பது பெருமளவு பொதுமன்றம் (public intellectuals) சார்ந்தே இயங்கும். ஒரு சில படைப்பாளிகள் கல்விப்புலப் பணிகளில் அமர்ந்தாலும், அவர்களது படைப்புகள் பொதுமன்றம் சார்ந்தே இருக்கும். உதாரணமாக நோபல் பரிசு பெற்ற துருக்கி நாவலாசிரியர் ஓரான் பாமுக் வருகைதரு பேராசிரியராக, நான் பயின்றுவந்த கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.
தமிழ்நாட்டு உயர்கல்வி அமைப்புகளில் பண்பாடு, சமூக அறிவியல் துறைகள் (Humanities and Social Sciences) இருபதாம் நூற்றாண்டில் தக்க வளர்ச்சி காணவில்லை. காரணம், பொருளாதாரப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அறியவியல் தொழில்நுட்பக் கல்வி, தொழிற் கல்வி, மருத்துவக் கல்வி, வணிகம் சார்ந்த கல்வி, சமீப காலமாக மென்பொருள் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றிலேயே தீவிர ஆர்வம் காட்டுவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்துறைகள் தேவையாக இருப்பதும்தான்.
தொடக்கத்தில் சிறிது வலுவாக இயங்கிய வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகள்கூட நாளடைவில் உலகளாவிய வளர்ச்சிப் போக்கிற்குத் தொடர்பற்றுத் தேங்கிப்போயின. தத்துவம், மானுடவியல் உள்ளிட்ட துறைகள் காணாமலேயே போயின. மேலும், பெரும்பாலான பல்கலைக்கழகங்களை அரசே நடத்துவதால் கல்விப்புலம் சார்ந்த பதிப்புத்துறை என்று எதுவும் தனித்து உருவாகவில்லை.
இதெல்லாம் இந்தியா முழுமைக்குமான பிற்காலனியச் சமூகத்தின் பிரச்சினைகள் என்பது முக்கியமானது; ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமான பிரச்சினை கிடையாது. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட நமது சமூகம்தான் முதலில் இது குறித்துச் சிந்திப்பது சாத்தியம். எனவே சிந்திக்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த எழுபதாண்டுகளில் மேலை நாடுகளில் சிந்தனைப் புலத்தில், ஆய்வுப் புலத்தில் ஏற்பட்டுள்ள ஏராளமான புதிய போக்குகள், முறைமைகள், ஆழ்ந்த பரிசீலனைகள் ஆகிய எதுவும் தமிழ் மொழியில் அறிமுகமாகவில்லை என்பதுடன், அந்தப் போதாமை குறித்த உணர்வுகூட இன்னும் உருவாகவில்லை. ஒரு மானுடவியல் உதாரணத்தைக் குறிப்பிடலாம் என்று நினைக் கிறேன்.
சமீபத்தில் காலமான ஃபிரெஞ்சு மானுட வியலாளர் புரூனோ லதூர், அரசியல், அறிவியல், சூழலியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் குறித்து கடந்த முப்பதாண்டுகளில் எழுதிய நூல்கள் சிந்தனைப்புலத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவை.
தமிழில் பொதுமன்றத்தின் ஆதரவிலேயே இயங்க முடியும் என்ற சூழலில் சிந்தனைப் புலமும், ஆய்வுப் புலமும் இலக்கியப் புலத்தையே சார்ந்துள்ளன. நவீனத்துவ இலக்கிய வகைமைகளைப் பிரசுரிக்கும் சிற்றிதழ்கள், அவை சார்ந்த பதிப்பகங்கள் ஆகியவற்றின் ஆதரவில்தான் சிந்தனைப் புலமும், ஆய்வுப் புலமும் இருந்தன.
ஆனால் இத்தகைய பிரசுர வெளி என்பதும் மிகவும் சிறிய வாசகப் பரப்பை கொண்டுள்ளதுடன், சரியானதொரு வணிக வலைப்பின்னலும் அமையப்பெறாமலேயே விளங்குகிறது. அதனால் இலக்கியப் பயிற்சியாளர்களும், ஆய்வுலக, சிந்தனையுலகப் பயிற்சியாளர்களும் கலந்து முயங்கிச் சில சமயங்களில் கசந்துகொள்ளவும் நேர்கிறது.
தமிழ்ப் படைப்புலகம் என்று எடுத்துக் கொண்டால் இருபதாம் நூற்றாண்டில் நான்கு முக்கியப் பிரிவுகள் இயங்கின. ஒன்று ஜனரஞ்சக, வெகுஜன இலக்கிய வெளிப்பாடுகள். இரண்டு திராவிட இயக்கம் சார்ந்த இலக்கிய, சிந்தனை வெளிப்பாடுகள். மூன்று பொதுவுடைமை இயக்கம் சார்ந்த இலக்கிய, சிந்தனை வெளிப்பாடுகள்.
நான்காவது நான் முன்பு குறிப்பிட்ட நவீனத்துவ இலக்கிய வகைமைகளைப் பயிற்சி செய்த சிறுபத்திரிகை வெளி. இவற்றிற்கிடையிலான எல்லைக்கோடுகள் திட்டவட்டமானவை அல்ல. பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வெளிகளில் இயங்கியுள்ளார்கள் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும்.
இந்த வெளிகளில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகிய இரண்டிற்கும் மனித சுயம் சமூக இயக்கத்தால் கட்டமைக்கப்படுகிறது என்ற கோட்பாடு இருந்தது. ஜனரஞ்சக/வெகுஜன வெளியும், நவீனத்துவ இலக்கிய வெளியும் மனித சுயத்தை அதனளவிலேயே முரண் கொண்டதாகக் கருதி ஆராயத் தலைப்படுபவை. இவற்றிற்கிடையிலான விவாதங்கள், முரண் போக்குகள் சமகாலத் தத்துவ, கோட்பாட்டுச் சிந்தனைகளின் வெளிச்சத்தில் வளர்ச்சியடையாமல் நிர்ணயவாதங்களாகத் தேக்கமடைந்துள்ளதாகவே கூற வேண்டும்.
இதன் காரணமாகப் படைப்பிலக்கிய விமர்சனம் என்பதும் தொடர்ந்து தேக்கமடைந்தே காணப்படுகிறது எனலாம். தத்துவம், கோட்பாடு சார்ந்த விமர்சனங்களே தீதானவை என்று வெளிப்படையாக இலக்கியக் குழுக்கள் பிற்போக்குவாதம் பேசும் சூழ்நிலையும் நிலவுகிறது.
எண்பதுகளில், தொண்ணூறுகளில் சமகாலத் தத்துவக் கோட்பாடுகள் குறித்து இடதுசாரிச் சிந்தனையாளர்கள் ‘படிகள்’, ‘நிகழ்’, ‘நிறப்பிரிகை’ உள்ளிட்ட சிற்றிதழ்களில் ஈர்த்த கவனம்கூட, கடந்த இருபதாண்டுகளில் பலவீனமடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. இலக்கிய வெளியில் முன்னெப்போதும் இல்லாத பிரபலங்களின் கலாச்சாரம் என்ற ‘செலிபிரிடி கல்ச்சர்’ ஊடுருவியுள்ளது ஆரோக்கியமற்ற போக்காகவே நிலவுகிறது.
இலக்கியப் புலம், சிந்தனைப் புலம், ஆய்வுப் புலம் எல்லாமே எவ்வகையிலெல்லாம் மானுட சுயம் உருவாகின்றது, எவ்வாறான சொல்லாடல் தொழில்நுட்பங்களால் தன்னிலைகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஆராய்பவை என்ற பொது விமர்சன நோக்கு வளர்ச்சியடைவது தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.
- ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டெல்லி, தொடர்புக்கு: rajankurai@gmail.com