

தென்றல், மயில், முதிர்கன்னிகள் எனக் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்த பட்டிவீரன்பட்டி தென்றல்தாசனுக்கு, அந்தப் புரட்சிக் கூட்டத்துக்குப் போன பிறகுதான் ‘கவிதைக் கண்’ திறந்துகொண்டது. சமூகம்தான் கவிதைக்கு மையமாக இருக்க வேண்டுமென அங்கு ஒரு வட்டார வழக்குக் கவிஞர் உரைத்ததை, சம்மூகம்தான் கவிதை மையம் எனத் தட்டுத் தடுமாறிப் புரிந்து, ‘அட! கெக்கிப்பட்டி சம்மூகம் இவ்ளோ பெரிய ஆளா?’ என ஆச்சரியப்பட்டுப் போனான். தென்றல்தாசனைப் ‘புரட்சிப் புயலோன்’ என மாற்றிக்கொண்டு பேனாவும் கையுமாக கெக்கிப்பட்டிப் போகும் அஞ்சரக்குள்ள வண்டியைப் பிடித்துப் பறந்தான்.
கவிதை மயக்கத்திலிருந்தவன் கண்ணும் மயங்கிவிட, ஊர் தப்பி நவீனயூரில் இறங்கித் திடுக்கிட்டுப் போனார். எங்கு பார்த்தாலும் எலியட்டும் எஸ்ராபவுண்டும் உருட்டிக்கொண்டிருந்தார்கள். ஊர்த் தெரு மாடுகள் ‘மா...’ எனக் கத்துவதின் அகத்தில் கவிதை இருக்கிறது, அதன் தொழுத்தில் கவிதை இருக்கிறது என நவீனயூர்க்காரர்கள் கம்பி கட்டிக்கொண்டிருந்தார்கள்.
கோலப்பொடி விக்கிறவரும் கொய்யப்பழ விக்கிற அம்மாளும் கூவுவதிலும் ஊர்க்காரர்கள் கவிதையைப் பிடிக்க, அவர்கள் ஒரே ஓட்டமாக ஊர் எல்லையைக் கடந்தார்கள். தாகத்துக்கு சிங்கிள் டீ குடிக்கப் பயந்தான் புயலோன். வயசானவர்கள் சிலர் இளைஞர்களைக் கூட்டி ‘எமிலி டிக்கன்சன், எமிலி டிக்கன்சன்’ எனப் பிதற்றிக் கொண்டிருந்தார்கள்.
அடிப்பதற்கென்றே அளவெடுத்துச் செய்திருந்த புயலோனைப் பார்த்ததும் ஒரு இளங்கவிஞர் கொத்தோடு கொண்டுபோய்க் கவிதை கிளாஸ் எடுக்கத் தொடங்கினார். ‘உன் பேரே சரியில்லை’ எனச் சோசியம் பார்த்து ‘எலியட்டன்’ என மாற்றிவைத்தார். எலியட்டன் என்ன சொன்னாலும் ‘நீ சொல்வது மாதிரி இல்லை’ என மறுத்து, ‘உனக்குத் தெரிதா தெரியலையே?’ எனத் தெறிக்க விட்டார்.
‘அங்க என்ன இருக்கு? எனக்குச் சத்தியமா ஒண்ணும் தெரிலை’ என்றதும் ‘தெரிதா, சாத்தர் ஒண்ணும் தெரியாம பஸ் பிடித்து வந்துட்டாங்க. எனக் கோபக் கவிஞர் கொதித்துவிட மிரண்ட எலியட்டன், பின்னாலிருந்த பூக்கோஸ்கியை மிதித்துவிட்டான். கொஞ்சம் பார்க்காமல் போனால் பர்ராவையும் மிதித்திருப்பாய் எனக் கடிந்துகொண்டு துண்டை உதறித் தோளில் போட்டு நகர்ந்த பூக்கோவைப் பார்த்துக் குரல்வளை நடுங்க, பாய்ந்துவந்த ‘கவிதை சிட்கோ’ பஸ்ஸில் ஃபுட்போர்டு அடித்துப் பிடித்துப் பறந்தான் எலியட்டன்.
புரட்சிக் கவிதை, நவீனக் கவிதை, மானுடவியல் கவிதை என ரக ரகமான கவிதைகள் ரெண்டு ஷிஃப்ட்டுகளில் தயாரிக்கப்பட்டுவந்த ‘கவிதை சிட்கோ’வில் புத்தகக் காட்சிக்காக மூன்றாவது ஷிஃப்ட் வேலை என ஒரே பரபரப்பு. பதிப்பகம் பிடித்துத் தந்தால் ஒரு ரேட், யுவபரஸ்கர் கவிதைக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட், உள்ளூர் விருதுகளுக்குப் பல பல ஸ்பெஷலிஸ்ட்டுகள் எனத் தொழில் ஏக போகம். பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டாம் ஆட்ட ஷிஃப்ட்டுகளில் கவிதையாடிக்கொண்டிருந்தார்கள்.
அரசு உயர் அதிகாரிகளின் கவிதை ஆர்டர்களை மொத்த காண்ட்ராக்ட் வைத்திருக்கும் ஒருவர், மானுடவியல்தான் இப்போ ட்ரெண்ட் என சாம்பிள்களையும் கொட்டேஷனையும் அள்ளி வீச... அரண்டுபோன தென்றல்தாசன் என்கிற புரட்சிப் புயலோன் என்ற எலியட்டன் என்ற ராமலிங்கம் மலைச்சாமி மீண்டும் பஸ்ஸைப் பிடித்து அரக்கப்பறக்க சீட்டில் அமர, தலையில் துண்டைப் போட்டு சினிமாவூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்த இலக்கியத் தூய்மைவாதிகள் கண்டும் காணாத மாதிரி மூஞ்சைத் திருப்பிக்கொண்டனர்.
- விஜித்ரவீர்யன்