

இந்த ஆண்டின் ‘ஞானபீட விருது’ தமிழுக்கு அளிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்களில் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்திய எழுத்தாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் இவ்விருதானது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று. ரூ. 5 லட்சம் ரொக்கம், தங்கமும் செம்பும் கலந்த பட்டயம், பாராட்டுப் பத்திரம் மற்றும் கலை மகள் சிலையை உள்ளடக்கிய விருது இது. 1961-ல் இந்த விருது நிறுவப்பட்டது. அதிகபட்சமாக கன்னட எழுத்தாளர்கள் ஏழு முறையும் இந்தி எழுத்தாளர்கள் ஆறு முறையும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். தமிழில் அகிலனும் ஜெயகாந்தனும் ஞானபீட விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாண்டு விருதுப் பட்டியலில் தமிழ் எழுத்தாளரின் பெயர் முன் வரிசையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முன்னதாக, தமிழகத்தில் இது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்ட பட்டியலில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், வைரமுத்து, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், சிற்பி, வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- தம்பி