

நிச்சயமற்ற வாழ்வின் சதா அலைவுறும் குரல் மனுஷ்ய புத்திரனுடையது. கவிஞர், ‘உயிர்மை’ இதழின் ஆசிரியர், அரசியல்வாதி, ஊடக விவாதங்களில் பங்குபெறுபவர் எனப் பல முகங்கள் கொண்ட மனுஷ்ய புத்திரனின் முதல் கவிதைத் தொகுப்பு 1983-ல் வெளிவந்தபோதும் 1993-ல் வெளிவந்த ‘என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற இரண்டாவது தொகுப்பே அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளும் கட்டுரைத் தொகுப்புகளும் பரவலான கவனத்தை ஈர்த்தன. இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான விருது, கனடா, அமெரிக்கா தமிழ் இலக்கிய அமைப்புகளின் விருதுகள், இளம் படைப்பாளிகளுக்கான உயரிய விருதான சம்ஸ்கிருதி சம்மான் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் அவரது ‘காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்’, ‘தித்திக்காதே’ ‘இருளில் நகரும் யானை’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட உள்ளன. தொடர்ச்சியான செயல்பாட்டின் இடையறாத குரலாக ஒலிக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து:
6 மாதத்தில் 500 கவிதைகள். ஒரு நவீன கவிஞர் வாழ்நாளில் எழுதும் மொத்தக் கவிதைகளைவிடவும் இது அதிகம். எப்படிச் சாத்தியப்படுகிறது?
இந்த உலகத்தின் புதிர்களை என்னளவில் திறக்கும் சாவிகள்தான் இந்தக் கவிதைகள். அல்லது எனக்குத் திறக்க மறுக்கும் கதவுகளை நான் தட்டும் ஓசைதான் இந்தச் சொற்கள். இந்த உலகத்தின் தீமைகளால் சபிக்கப்பட்ட அத்தனை உறைந்த உண்மைகளுக்கும் கவிதையின் வழியே உயிர்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஒரு விதத்தில் எனது காலம் என்பது என்னை ஒரு தண்டனை முகாமில் அடைத்து வைத்திருக்கிறது. அதன் குரூரமான மெளனத்தை என்னால் தாங்க முடியவில்லை. நான் அதன் சுவர்களில் எழுதும் மனம் பிறழ்ந்த தண்டனைக் கைதியாக இடையறாது எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் வழியாகவே என் இருண்ட அறையில் கொஞ்சம் வெளிச்சத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கிறேன்.
அதிக எண்ணிக்கையில் எழுதுவது நீர்த்துபோகச் செய்யாதா?
அப்படிச் சொல்ல முடியாது. கவிதையை நான் ஒரு தவமாகக் கருதுபவன் அல்ல. மாறாக, அது ஒரு இடையறாத நடனம். எழுத எழுத எழுத்து உக்கிரம் பெறுகிறது. நிறைய எழுதும்போது மொழி தன்னளவில் பல அற்புதங்ளை உண்டாக்கிக்கொள்கிறது. உங்களுக்கு இந்த வாழ்க்கையில் கண்டுபிடிப்பதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் ஏதாவது இருக்கிறதா என்பதுதான் கேள்வி. நான் வாழ்க்கையை ஒவ்வொரு கணத்திலும் மறு கண்டுபிடிப்புச் செய்கிறேன். வாழ்க்கையை நான் இடையறாத கண்டுபிடிப்புகள் நிகழும் அற்புதத் தருணமாகக் காண்கிறேன். காதலின் உச்சத்தில் நிகழ்வதுபோலவே செய்தித்தாளில் படிக்கும் ஒரு செய்தி யும் என் கவிதை கட்டவிழும் தருணம்தான். இந்த வாழ்வின் சிடுக்குகளும் பதற்றங்களும் எழுதித் தீர முடியாதவை. காண்பதற்கும் சொல்வதற்கும் எனக்கு ஏராளமாக இருக்கின்றன. மொழி புழங்கப் புழங்கத்தான் பிரகாசமடையும். குறைவாக எழுதினால் செறிவாக இருக்கும் என்பதும் நிறைய எழுதினால் நீர்த்துபோகும் என்பதும் வெறும் இலக்கிய மூட நம்பிக்கை. உங்களால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
இந்த மூன்று தொகுப்புகளுக்கும் பிரத்யேகமான தனித்தன்மைகள் ஏதும் உண்டா?
உண்டு. ‘காந்தியியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்’ தொகுப்பு சமகாலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரமான எதிர்வினை எனலாம். அதிகாரம் நம்மீது செயல்படும் விதத்தை ‘அப்போலோ தினங்கள்’ என்ற பகுதியில் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன். பண மதிப்பு நீக்கம் அறிவிக்கபட்ட அன்றிரவே அதன் விளைவுகள் குறித்து நான் எழுதிய கவிதை ஃபேஸ்புக்கில் வைரலாக மாறியது. ‘தித்திக்காதே’ காதல், அன்பு, மன நெகிழ்ச்சி சார்ந்த கவிதைகள். ‘இருளில் நகரும் யானை’ வாழ்வின் இருண்ட தருணங்களை, குறிப்பாக மரணத்தை, பயத்தைப் பேசுகின்றன. சென்னையில் வீசிய புயல் ஏற்படுத்திய கோர விளைவுகள் பற்றி 26 குறுங்கவிதைகள் எழுதியுள்ளேன். இந்த நகரம் தன் நிழலை இழந்துவிட்டது. நகரமெங்கும் மரம் அறுக்கும் ரம்பத்தின் ஓசை கேட்டுக்கொண்டிருக்கிறது, வாழ்க்கையில் மறக்க முடியாத காயம் அது.
கவிதைகள்மேல் வாசகர்களின் கவனம் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கிறது. கவிதைகள் ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைப் பிரதிபலிக்கும்போதோ அல்லது ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் உணர்ச்சிகரமான தருணங்களில் அது புதிய வெளிச்சத்தைப் பெறும்போதோ அவை பெரும் கவனத்தையும் விவாதங்களையும் உருவாக்குகின்றன. எனது ‘வாணி கவிதைகள்’. ‘கிளிக்காவியம்’ உருவாக்கிய பரபரப்பை நீங்கள் அறிவீர்கள்.
ஒரு கவிஞனின் அரசியல் சார்பு நிலை அவனது தனித்துவத்தை அழித்துவிடாதா?
ஏன் அழிக்க வேண்டும்? நான் அரசியல், ஊடகச் செயல்பாடுகளுக்குள் வந்த இந்த ஐந்தாண்டுகளில்தான் மிக அதிகமாக எழுதியிருக்கிறேன். சமுகத்தின் மீதான என் கவனம் கூடியிருக்கிறது. மேலும் சார்பு நிலைகள் இல்லாதவர் யார்? சிலர் அதை ரகசியமாக வைத்துக்கொண்டு சார்பு இல்லாதவர்கள்போல நாடகமாடுகிறார்கள். சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால் அரசியலும் அதிகாரமும் தேவை. மேலும் பண்பாட்டுத் துறையில் வேலை செய்யும் சக்திகள் மைய நீரோட்ட அரசியக்குள் வந்தால்தான் அந்த அரசியலை மேலும் ஜனநாயகப்படுத்த முடியும். நம் சமூகத்தில் எட்டப்பட்ட சமநீதி சார்ந்த விஷயங்களும் பெண் விடுதலையும், கல்வியும் அரசியல் அதிகாரத்தின் வழியாகவே சாத்தியப்பட்டிருக்கிறது.
ஊடகங்களிலும் சரி, கவிதையிலும் சரி உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது உங்கள் பலமா, பலவீனாமா?
இரண்டும் இல்லை. உடனடித்தன்மை என் இயல்பு. என் மொழி. என் வழிமுறை. எல்லாவற்றோடும் எப்போதும் ஆழ்ந்த உரையாடலில் இருந்துகொண்டே இருக்கிறேன். எனவே, ஒன்றை மதிப்பிடுவதில் எனக்குச் சிக்கல் இல்லை. தெரியாதவற்றை விரைந்து கற்றுக்கொள்வேன். நிற்கவும் நிதானிக்கவும் நமக்கு நேரமிருக்கிறதா என்ன?
சேனல்களுக்கு பேட்டி, நூல் வெளியீட்டு விழாக்கள், பதிப்பு, கவிதைகள் எழுதுவது, பத்திரிகை எனப் பல தளங்களில் இயங்கிவருகிறீர்கள். உங்களைத் தொடர்ந்து இயக்கிவரும் உந்து சக்தி எது?
ஒரு மனிதனின் சாத்தியங்கள் எல்லையற்றவை என்று நம்புகிறேன். சிறு வயதில் ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னை நானே நினைத்துக்கொண்டேன். என்னால் வாழ்க்கை யில் எவ்வளவு தூரம் போக முடியும் என்பதைச் சோதிக்க விரும்பினேன். ஒரு சக்கர நாற்காலியிலிருந்து நகர்ந்து செல்வதல்ல, பறந்து செல்வதும் சாத்தியம்தான் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். எனக்குள் தீராத பசியுடைய பூதங்கள் வாழ்கின்றன. அடிப்படையில் நான் ஒரு கவிஞன். எனது அரசியல் சமூக ஊடக செயல்பாடுகள் இந்த உலகத்துடனான என் உறவுகளை விரிவாக்குகின்றன. இதன் வழியாக நான் எழுதுவதற்கான உலகம் பிரமாண்டமாகத் திறந்துகொள்கிறது.
பால்நிலவன், தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in