Published : 03 Dec 2016 10:49 AM
Last Updated : 03 Dec 2016 10:49 AM

பிறமொழி நூலறிமுகம்: அதீதத்தின் வெளி

மீண்டெழும் வரலாறு!

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம் | பிரேம் | விலை: ரூ.170 | ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை-77. | 9884155289

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு இது. அயோத்திதாச பண்டிதர் தொடங்கிய 'திராவிட மகா ஜன சபை'யின் முதல் மாநாட்டின் 125-வது ஆண்டும் இது என்பது கூடுதல் சிறப்பு! இந்தத் தருணத்தில் வெளியாகியிருக்கிறது எழுத்தாளர் பிரேம் எழுதிய 'அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்' எனும் புத்தகம்.

முன்னோடியே இல்லாத முன்னோடி அயோத்திதாசர். 'தமிழன்' இதழ் மூலமாக சாதியத்துக்கு எதிரான, அறிவார்ந்த போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அவர். 90-களில் அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது தலித் சிந்தனையாளர்களிடத்தில் மாபெரும் புத்தெழுச்சி நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில்தான் வரலாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அயோத்திதாசரின் சிந்தனைகள் மீண்டும் பொதுவெளிக்கு வரத் தொடங்கின. அதன் பிறகு வெவ்வேறு வடிவங்களில், பலர் அவரின் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.

'நமது தமிழ்மண்' இதழில் தன் கட்டுரைகள் மூலமாக அயோத்திதாசரின் கருத்துகளைப் பரவலாகக் கொண்டுசென்றவர். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். கொஞ்சம் சிரமப்படுத்தும் மொழிநடை என்றாலும் அயோத்திதாசர் பற்றி அறிய விரும்புபவர்கள் அனைவரது கையிலும் இருக்க வேண்டிய நூல் இது!

- ந. வினோத் குமார்

****

அதீதத்தின் வெளி

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் | போகன் சங்கர் | விலை: ரூ.140 | உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. | 044-24993448.

மனதின் அதீத நிலைகளின் விசித்திரங்களையும் அறிவுக்குப் பிடிபடாத மர்மங்களையும் சிறுகதைகளின்வழி சொல்கிறார் போகன் சங்கர்.

இந்தச் சிறுகதைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்திருக்கின்றன. தீயின் நாவுக்குத் தன்னைத் தின்னக் கொடுத்த அம்மாவை வெறுக்கும் மகன், பின்னாளில் அவளுடைய தெய்வ ரூபத்தின் தரிசனத்தைப் பார்க்கிறான். தீராத காதலின் சோகம் உந்தித் தள்ள மலைக்காடுகளில் சுற்றியலைகிறான் ஒரு காதலன். கிருஷ்ணன் மீது காதல் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி நதியில் சடலமாக மிதந்துவரும் உம்மிணி சேச்சி, அல்வா விற்றபடி கவிதைகள் எழுதி, ரயில் முன் பாய்ந்து இறந்துபோகும் ஆறுமுகம்… இப்படி ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஆனால் எல்லாக் கதைகளும் ஒரே பாதையில் பயணிக்கின்றன. ஒருவரது உணர்வை மதிப்பதென்பது அவரது இருப்பை அங்கீகரிப்பது. இதைச் செய்யத் தவறுவதால் சிதறிப்போகிற உறவுகளை, உடைந்துபோகிற மனங்களை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பிரதிபலிக்கின்றன.

- பிருந்தா

*****

உணவிலக்கிய நாட்காட்டி

அடிசில் 2017 | உணவு நாட்காட்டி | விலை ரூ.150. | காலச்சுவடு பதிப்பகம் | நாகர்கோவில் 629001 | கைபேசி: 9677778863

சில பத்தாண்டுகளுக்கு முன்பு நம் அன்றாடத்தில் இருந்த உணவுப் பொருள்கள் சில இன்று அரிய பொருளாகிவிட்டன. இந்தச் சூழலில் பண்டைய உணவுகளைத் தேடும் ஒரு பயணம்தான் ‘அடிசில் 17’ நாட்காட்டி.

ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு உணவு முறை இந்த நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளது. உளுந்தஞ்சோறு, கம்மங்கூழ் போன்ற நம் பாரம்பரிய உணவைத் தயாரிக்கும் முறைகளுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கூடவே சர்க்கரைப் பொங்கல், மீன் குழம்பு, நாட்டுக் கோழிக் குழம்பு ஆகியவையும் உள்ளன. பழைய சோறுக்கும் இதில் இடம் உண்டு.

சமையல் குறிப்புகளுடன், குறிப்பிட்ட உணவு குறித்துத் தமிழ் எழுத்தாளர்கள் ரசனையுடன் எழுதியதைத் தேடி எடுத்துத் தொகுத்திருக்கிறார்கள். லா.ச.ராமாமிருதம், நாஞ்சில் நாடன், அம்பை, செங்கை ஆழியான் முதலான 12 எழுத்தாளர்களின் வரிகளைத் தந்து கூடுதல் சுவை சேர்த்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் பிரசாந்தி சேகரம், கவிஞர் சே.பிருந்தா, ஓவியர் ரோஹிணி மணி ஆகியோரின் உழைப்பில் அழகாக உருவாகியிருக்கும் இந்த ‘அடிசில் 2017’ புத்தகக் காட்சிக்கு வருகிறது.

- குமார்

*****

வஞ்சத்தால் வீழ்ந்தவர்

தாரா ஷுக்கோ - கேப்டிவ் விஷனரி ஆஃப் ஹிஸ் டைம்ஸ் | ராகேஷ் குப்தா | கல்பஸ் பப்ளிகேஷன்ஸ் | புதுதில்லி. விலை: ரூ. 790/-

தாஜ்மஹாலை உருவாக்கிய ஷாஜஹானின் மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான தாரா ஷுக்கோவின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இது. சூஃபி மரபில் வந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களுள் ஒருவரான தாரா, சொந்தச் சகோதரர்களின் வஞ்சகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார். இறுதியில் அவரது தலை கொய்யப்பட்டு, ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த ஷாஜஹானுக்கு ஒரு பெட்டியில் வைத்து அனுப்பப்பட்டது.

இந்து மதச் சிந்தனைகளை உள்வாங்கி, தன் பாட்டன் அக்பரைப் போல் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கப் பாடுபட்ட ஒரு மொகலாய இளவரசரின் வாழ்க்கையை சிறப்பாக எடுத்துக் கூறும் நூல் இது.

- வீ.பா. கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x