இலக்கியம் | கற்றதும் பெற்றதும் - பின்னகர்ந்த காலம் 2022

இலக்கியம் | கற்றதும் பெற்றதும் - பின்னகர்ந்த காலம் 2022
Updated on
5 min read

சினிமாவின் இலக்கிய மோகம்: ஒருகாலத்தில் இலக்கியவாதிகள் பலருக்கும் சினிமா மோகம் பிடித்தாட்டியது. தமிழைப் பொறுத்தவரை இலக்கியத்தின் உச்சபட்ச சாதனை, சினிமாதான். எழுத்தை நம்பித் தெருவில் இறங்கிவிட்டால், வாழ்க்கைப் பாட்டுக்குப் பத்திரிகையாளர்கள் ஆகலாம்.

கொஞ்சம் செளகரியமாக வாழ சினிமாதான் கதி என்ற நிலை. புதுமைப்பித்தனும் இந்த வழியில் நடந்துபோனவர்தான். அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களுக்கும் இது கைகூடவில்லை. இன்று நிலைமை தலைகீழ். சினிமாவுக்கு இலக்கிய மோகம் பிடித்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் கதைகளுக்கு சினிமாவில் ஒரு கிராக்கி உருவாகியிருக்கிறது.

அது இந்த 2022இல் இன்னும் திடப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் இதில் முன்னணியில் இருக்கிறார். இயக்குநர் ரஃபீக்கின் ‘ரத்தசாட்சி’ அதற்குச் சுத்தமான சாட்சி. ‘பொன்னியின் செல்வன்’ வெற்றியால் ஷங்கரும் ஒரு சரித்திர நாவலைத் தேடி எழுத்தாளர் சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’யைப் பிடித்துள்ளார். மிஷ்கினின் தம்பி ஆதித்யா, எழுத்தாளர் தேவிபாரதியின் கதையை ஒரு த்ரில்லர் திரைப்படமாக்கிவருகிறார். எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையும் ‘சேத்துமான்’ படமாகியுள்ளது. அவரது ‘கூளமாதாரி’ படத்துக்கு அடிபோட்டுள்ளார்கள்.

வெற்றிமாறன் ‘வாடிவாச’லுக்குப் பிறகு எழுத்தாளர் இமையத்தின் ‘செல்லாக் காசு’ இயக்கப்போகிறார் எனத் தகவல்; எழுத்தாளர் மீரான் மைதீனின் ‘அஜ்னபி’யையும் வாங்கிவைத்திருக்கிறார். எழுத்தாளார் நரன், சுதா கொங்கராவின் அடுத்த இரு படங்களுக்குக் கதை எழுதுகிறார். அவரது ‘வாரணாசி’ கதையை இயக்குநர் ராம் வாங்கிவைத்திருக்கிறார்; ‘குமாரத்தி’ நாவலை நடிகை அஞ்சலி வாங்கியிருக்கிறார். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், பாடலாசிரியராகியிருக்கிறார். கவிஞர் வெய்யில், மாரி செல்வராஜின் ‘வாழை’ மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகவிருக்கிறார்.

சாகித்ய விருதுகள் சர்ச்சை: தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை விருதுகள் என்றாலேயே சர்ச்சைதான். சாகித்ய அகாடமி என்றால் சர்ச்சை மேல் சர்ச்சைதான். சாகித்திய அகாடமி விருதுக்காக நடுவர்களைத் தேடித் திராணியுள்ள எழுத்தாளர்கள் தாம்பூலத் தட்டுடன் நடந்த கதைகள் குறித்துப் பிரபலமான கிசுகிசு இலக்கியத்தில் உண்டு. விருதுக்காகப் புத்தகம் போட்ட எழுத்தாளர்களையும் இலக்கிய உலகம் அறியும். 2011இலிருந்து யுவ புரஸ்காரும், 2010இலிருந்து பால சாகித்திய புரஸ்காரும் தொடங்கப்பட்ட பிறகு சர்ச்சை இன்னும் இறுகியிருக்கிறது.

இதற்கும் ஆள் பிடிக்க இளைஞர்கள் பலர் உத்வேகத்துடன் களம் கண்டதாகக் கிசுகிசுக்கப்பட்டது. சாகித்ய அகாடமி பெறுவதற்கு ஒரு நல்ல வழியாக சிறார் இலக்கியம் என்ற துறை தழைக்கத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது. இந்த ஆண்டு யுவபுரஸ்கார் பெற்ற ப.காளிமுத்துவின் கவிதைத் தொகுப்பும் விமர்சனத்துக்கு உள்ளானது. தகுதியானது/தகுதியற்றது என இரு தரப்பும் தன் பக்க நியாயங்களுடன் சமூக ஊடகங்களில் முட்டிக்கொண்டனர். பால சாகித்ய புரஸ்கார் பெற்ற ஜி.மீனாட்சிக்கும் இதே போன்ற விமர்சனம் கிட்டியது. ஆனால், இதையெல்லாம் பற்றி எந்தக் கவலையும் படாமல் சாகித்ய அகாடமி ‘வழக்கம்போல்' இயங்கிவருகிறது.

வண்ணநிலவன் ஃபேஸ்புக் கருத்துகள்: மனிதமும் நவீனத்துவமும் கொண்ட பல கதைகளை எழுதியவர் வண்ணநிலவன். இந்த ஆண்டு ஃபேஸ்புக்கில் இவர் போட்டுடைத்த இலக்கியக் கற்பிதங்கள் பல. கதைகள் வழியாக இவரைச் சந்தித்த ஃபேஸ்புக் வாசிகள் பலருக்குப் பட்டதைச் சொல்லும் தாதன்குளத்துச் சுபாவம் அதிர்ச்சிதான். உதாரணமாக, தமிழ் இலக்கியமே உச்சாணிக் கொம்பில் வைத்துக் கொண்டாடும் ஜப்பானிய எழுத்தாளர் முரகாமியை அவர் சாதாரண வெகுஜனக் கதைகள் எழுதக்கூடியவர் என்றார்.

தமிழ் இலக்கியத்தில் விமர்சகர் என அறியப்பட்ட வெங்கட் சாமிநாதனை, ‘டப்பாவுக்குள் போடப்பட்ட வெறும் கற்கள்தான். உருப்படியாக வெ.சா. எதையும் செய்யவில்லை. கடபுடா என்று அர்த்தமில்லாமல் உருட்டிக்கொண்டிருந்தார்’ என்றார். ‘விமர்சனக் கலையின் முன்னோடி’ என்ற க.நா.சு.வை விமர்சகரே அல்ல என எழுதியிருக்கிறார். விருதுகள், அங்கீகாரம் குறித்த எந்தக் கவலையும் இல்லாததால் கை வீசிக்கொண்டு, நல்ல சுதந்திரமாக ஃபேஸ்புக்கில் நடக்கிறார் வண்ணநிலவன். முகம் பார்த்துத் தயங்குவது இல்லை. சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என எல்லாரும் இதற்கு உட்பட்டவர்கள்தாம். எல்லாக் கருத்துகளும் இதற்கு உட்பட்டவைதாம்.

கரோனா காலம்: கரோனா காலத்தைக் கடக்கப் பட்ட சிரமங்கள், கதைகளாகத் தமிழில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ‘சற்று இறக்கிவைக்க முடியாமல் மடியில் அமர்ந்திருக்கும் காலம்’ எனத் தொடங்கும் லீனா மணிமேகலையின் கவிதை அவற்றுள் நினைவில் நிற்கும் ஒன்று. கரோனா காலத்தில் புத்தகங்களைக் கையாள்வது சிரமமாக இருந்ததால், மின் நூல்கள் தயாரிப்பு தீவிரம் அடைந்தது.

பலரும் தங்கள் கரோனா அனுபவங்களை அமேசானில் மின் நூலாக வெளியிட்டனர். நேரடி இலக்கியக் கூட்டங்களுக்கு வாய்ப்பில்லாததால், மெய்நிகர் கூட்டங்கள் அதிகமாயின. இதனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பலரால் கூட்டத்தில் பங்களிக்க முடிந்தது. இந்தக் கலாச்சாரம் இப்போது தொடர்வதைப் பார்க்க முடிகிறது. ஆடியோ புக் செயலிகள் பல தமிழில் வளர்ச்சியடையவும் இந்தக் காலகட்டம் காரணமானது.

பொன்னியின் செல்வன் பாதிப்புகள்: பொன்னியின் செல்வன் படம் வந்தாலும் வந்தது. புயலைப் போல் தமிழர்களுக்கு வரலாற்று ஆர்வத்தைக் கிளப்பிவிட்டுப் போய்விட்டது. வந்தியத் தேவன் யார், அருள்மொழி வர்மன் யார், ஆதித்த கரிகாலனை யார் கொன்றது எனப் பல கேள்விகள். இது தொடர்பாகக் குறைந்தது ஆயிரம் யூடியூப் பதிவுகள் வந்திருக்கும். தமிழக சுற்றுலாத் துறை பொன்னியின் செல்வன் பயணப்பட்ட இடத்திற்குச் சுற்றுலாத் திட்டத்தை அறிவித்தது. பொன்னியின் செல்வன் பூஜை போட்ட நாளிலேயே பலரும் சோழ வரலாற்றை ஆராயத் தொடங்கிவிட்டார்கள். படம் பார்ப்பதற்கு முன் நாவல் படிப்பது நல்லது என வதந்தி பரவ, பல பதிப்பகங்கள் நாட்டுடமையாக்கப்பட்ட நாவலைச் செம்பதிப்பாக வெளியிட்டுச் சேவையாற்றின.

இன்றைக்குள்ள பரபரப்பான காலத்தில் ஐந்து பாகங்களைப் படிப்பது சிரமம் எனச் சிந்தித்த நல்லுள்ளம் கொண்ட பதிப்பகங்கள் சில அதன் சுருக்கத்தை ஒரே புத்தகமாக வெளியிட்டன. படிப்பதே சிரமம் எனக் கருதிய சில யூடியூபர்கள் அதை ஆடியோவாக வெளியிட்டுச் சிறப்பித்தனர். எழுத்தாளர் ஒருவர் ஆயிரம் பக்கங்களில் பொன்னியின் செல்வனைப் போல் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் காலத்தில் இது தொடர்பாக ஏதாவது செய்து கவனம் பெற்றுவிட வேண்டும் என எழுத்தாளர்கள் பலர் இப்போதே தயாராகிவருகிறார்கள்.

தமிழக அரசின் இலக்கிய முன்னெடுப்புகள்: சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் மட்டுமே நடந்த புத்தகக் காட்சிகளைத் தமிழக அரசு இந்த ஆண்டில் மாவட்டந்தோறும் விரித்தது. இதற்காகத் தனியாக நிதி ஒதுக்கியது. மாவட்ட நிர்வாகம், தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர் விற்பனையாளர் சங்கத்துடன் இணைந்து இதைச் செய்தது. புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர்களின் உரைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. இத்துடன் இலக்கிய விழாக்களையும் தமிழக அரசு திட்டமிட்டு ஒருங்கிணைத்துவருகிறது.

பொருநை விழா என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டத் திருவிழாவைத் திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது. இதில் எழுத்தாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். இது விமர்சனத்துக்கும் இடமளித்தது. சென்னை இலக்கிய விழா ஜனவரியில் நடைபெறவுள்ளது.

பதிப்பாளரின் சர்ச்சைக் கருத்து: ‘இந்தி மொழியை மூன்று மாதங்களுக்குள் முழுமையாகக் கற்றுத் தேர்ந்துவிட முடியும். அதற்கு மேல் கற்க அந்த மொழியில் எதுவும் இல்லை’ என்று அண்ணா சொல்லியிருப்பதாகப் பத்திரிகையாளர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ‘இது எவ்வளவு முட்டாள்தனமான கூற்று. சி.என்.அண்ணாதுரை உண்மையிலேயே இப்படிச் சொல்லியிருந்தால் அவரை முட்டாள் என்றுதான் அழைக்க வேண்டும்’ என்ற பொருள்பட ஆங்கிலத்தில் ட்வீட் செய்திருந்தார்.

திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பத்ரியின் ட்வீட்டுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அத்தோடு தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் பத்ரி சேஷாத்ரி இடம்பெற்றிருப்பதையும் கவனப்படுத்தியிருந்தார். ‘அண்ணாவை அவமதித்தவர் திமுக அரசு அமைத்த குழுவில் இடம்பெறலாமா’ என்று திமுகவினரும் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அந்தக் குழுவிலிருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டார். இது தொடர்பான விவாதத்தில் சம்ஸ்கிருதத்துடன் ஒப்பிட்டுத் தமிழின் இலக்கிய வளம் தொடர்பாக பத்ரி வெளிப்படுத்தியிருந்த கருத்துக்கு எதிர்ப்பாகத் தன்னுடைய ‘குறத்தியாறு’ நாவல் பத்ரியின் கிழக்குப் பதிப்பகத்தில் வெளியாகாது என எழுத்தாளர் கெளதம சன்னா அறிவித்தார்.

வேறு சில எழுத்தாளர்களும் தங்கள் நூல்களையும் அவற்றின் புதிய பதிப்புகளையும் வெளியிடும் உரிமையை கிழக்குப் பதிப்பகத்திடமிருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்தனர். சிலர் தமிழ்நாடு அரசு நடத்தும் புத்தகக் காட்சிகளில் கிழக்குப் பதிப்பகத்துக்கு இடம் அளிக்கக் கூடாது என்று கூறினர். சிலர் பத்ரியைச் சாதிரீதியாக வசைபாடினர். ‘அண்ணா குறித்த பத்ரியின் கருத்து கண்டனத்துக்குரியது என்றாலும் அதற்கான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட விதம் ஜனநாயகத்துக்கு புறம்பானது’ என்று சிலர் சுட்டிக்காட்டினர்.

விவாதத்தைக் கிளப்பிய சிறுகதை: மூத்த எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதி ‘தமிழினி’ இணைய இதழில் வெளியான ‘இசைவு’ சிறுகதை பெரும் விவாதங்களைக் கிளப்பியது. மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையிலான பிறழுறவை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் ‘சர்ச்சைக்குரிய’ கதையாகவும் பலரால் அடையாளப்படுத்தப்பட்டது. சிலர் இந்தக் கதையைக் கடுமையாக விமர்சித்தனர். தமிழ் இலக்கியத்தில் பிறழுறவு கையாளப்படுவது புதிதல்ல.

பிறழுறவைக் கையாள்வதே ஆபாசம் என்றோ பிழையானது என்றோ கூறுவதும் இலக்கிய விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வை அல்ல. மாறாக, அப்படிச் சொல்வது வறட்டு ஒழுக்கவாதப் பார்வை என்றே விமர்சிக்கப்பட்டுவந்துள்ளது. ‘இசைவு’ கதையைப் பாராட்டிய, ஆதரவு தெரிவித்த சிலர், அதன் உள்ளடக்கத்தை விமர்சிப்பது வறட்டு ஒழுக்கவாதம் சார்ந்தது என்று விமர்சித்தனர்.

ஆனால், இந்தக் கதையில் பாலியல் உறவு சார்ந்த விவரணைகள் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் விதமாகவும் ஆண்-பெண் பாலின அரசியல் சார்ந்த ஆணாதிக்க மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பதாகவும் இருப்பதாகச் சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனத்தைப் பிறழுறவைப் பேசுவதற்கு எதிரான வறட்டு ஒழுக்கவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது என்பதையும் சிலர் கவனப்படுத்தினர்.

வாழத் தகுதியற்ற நகரமா சென்னை? - தமிழ்நாட்டின் அரசியல் தலைநகரான சென்னை, நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரமும்கூட. தஞ்சை, நெல்லை, கரிசல், கொங்கு என வட்டாரங்கள் சார்ந்து தமிழிலக்கியம் வளர்ந்துவந்திருந்தாலும், நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள் சென்னையிலிருந்தே முதன்மையாக இயங்கினர்.

சென்னைக்கு வந்து அல்லல்பட்டு இலக்கியம் வளர்த்த கதையைச் சொல்லும், ‘சென்னைக்கு வந்தேன்’ என்கிற அவர்கள் சிலரின் பதிவுகள் வழியும் 1920களில் வெளியான ‘மதிமோசக் களஞ்சியம்’, சென்னையில் ஒருவர் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுவார் என்பதை விளக்கும் நூலின் அடிப்படையிலும் இன்றைய சென்னையைப் பற்றி கவிஞராக அறியப்படும் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதிய தொடர் பதிவுகள், கலவையான எதிர்வினைகளைக் கிளப்பின.

தம் வழக்கமான குமுறல்களுடன் எழுத்தாளர் சாரு நிவேதிதா இதற்கு எதிர்வினையாக எழுதிய மூன்று பதிவுகளும் ‘சென்னை வாழத் தகுதியில்லாத நகரம்’ என அறிவித்தன. அப்படியிருந்தும் அவர் சென்னையைவிட்டு ஏன் வெளியேறவில்லை என ஒரு நடிகை வினவியதற்குச் சாரு இப்படிப் பதிலளிக்கிறார்: ‘என் மனைவிக்காக என்றே சொல்வேன். அவளுக்காக நான் செய்யும் தியாகம் இது.’

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in