

இந்தாண்டு (2022) வெளிவந்த எஸ்.வி.ராஜதுரையின், இரு புத்தகங்கள் குறிப்பிடத்தக்கன. ஒன்று ‘அந்நியமாதல்’; இன்னொன்று ‘ஸரமாகோ: நாவல்களின் பயணங்கள்’. காரல் மார்க்ஸ் எங்கெல்ஸுடன் இணைந்து எழுதிய ‘புனிதக் குடும்பம்’, தனியாக எழுதிய நீண்ட கட்டுரைகள் ஆகியவற்றிலும்கூட ‘அந்நியமாதல்’ இடம்பெற்றிருந்தது.
என்றாலும், மேற்சொன்ன கையெழுத்துப் படிகள் முதலில் ஜெர்மன் மூலத்தில் 1935இலும், ஆங்கில மொழியாக்கத்தில் 1959இலும் வெளிவந்த பிறகே ‘அந்நியமாதல்’ பற்றிய மார்க்ஸ் எழுதியவை இன்றுவரை மார்க்ஸிய அறிஞர்களாலும், மார்க்ஸியத்தை ஏற்றுக்கொள்ளாத தத்துவவாதிகளாலும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இக்கருத்தாக்கம் மார்க்ஸுக்கு முன்பே கிறிஸ்துவ இறையியல், ஹெகலியம் முதலியவற்றில் இடம்பெற்றிருந்து.
‘அந்நியமாதலை’ முதலாளிய சமுதாயத்திலுள்ள உற்பத்தி உறவுகளுடன் தொடர்புபடுத்திக் காட்டியவர் மார்க்ஸ் மட்டுமே. உழைக்கும் மனிதர்கள் நான்கு வகையான அந்நியமாதலுக்கு உட்படுகிறார்கள் என்பதை விரிவாக விளக்கியுள்ள அதேவேளை, மனிதர்கள் உருவாக்கும் பொருள்வகை, ஆன்மிகப் படைப்புகள் தொடங்கி அரசுவரை, அவை அனைத்துமே அவர்களுக்கு எதிரான பகைச் சக்தியாகிவிடுவதையும் அவற்றின் ஆளுகைக்குள்ளானவர்களாக மனிதர்கள் குறுக்கப்படுவதையும் விளக்குகிறார்.
இயற்கையின் பகுதியான மனிதர்கள் சமுதாயமாக ஒன்றிணைந்து இயற்கையைத் தம்வசமாக்கிப் பொருள்வகை, ஆன்மிகச் செல்வங்களை உருவாக்கும் தங்கள் படைப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும்போதே இயற்கையையும் தங்களையும் மாற்றியமைக்கிறார்கள். ஆனால், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பகையுறவாக்குகிறது முதலாளியம் (இதன் உச்சகட்டமே சூழலியல் நெருக்கடி). வரலாறு நெடுக மனிதர்கள் சமுதாயமாக ஒன்றிணைந்து இயற்கையினூடாக வளர்த்துக்கொள்ளும் ஆற்றல்களையே மார்க்ஸ் ‘மனித சாரம்’ என்றழைக்கிறார்.
இந்த மனித சாரத்துக்கு ஏற்ற வகையில் மனிதர்களின் வாழ்க்கை அமைவதில்லை; அவர்களது பன்முக ஆற்றல்கள் ஊதியத்துக்காக உழைப்பது அல்லது அந்த உழைப்பின் மூலம் உருவாக்கப்படும் செல்வத்தை அபகரிப்பது என்ற ஒற்றைப் பரிமாணம் பெற்றுவிடுவதற்குச் சமுதாயத்திலுள்ள வர்க்கப் பிரிவினைகளே காரணம் என்றும் வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டி, மனித சாரத்திற்கு இயைந்த வகையில் மனிதர்கள் வாழக்கூடிய நிலையே கம்யூனிசம் என்றும் மார்க்ஸ் கூறுகிறார்.
‘அந்நியமாதல்’ என்ற இளமைக் கால மார்க்ஸின் கருத்தாக்கம் மேலும் பருண்மையான ஆய்வுகளின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டு அவரது முதிய காலப் படைப்புகள்வரை காணப்படுவதாக எஸ்.வி.ராஜதுரை, தக்க சான்றுகள், ஆழமான விவாதங்கள் கொண்டு விளக்குகிறார்.
நோபல் விருதாளரான ஸரமாகோவின் பல நாவல்கள், ‘அந்நியமாதல்’ பற்றிய தத்துவ வகையான வாதங்களுக்கு வலு சேர்ப்பவையாக உள்ளன. அவையனைத்துமே சாமானிய மனிதர்களை முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டவை. பேரங்காடி ஒன்றால், குயவரின் உழைப்பால் விளைந்த அழகிய பொருள்கள் நிராகரிக்கப்பட்டு, அவரது படைப்பாற்றல் அந்நியமாக்கப்படுவது; வரலாற்றில் முக்கியப் பங்கேற்ற மனிதர்கள் வரலாற்றாசிரியர்களால் மறைக்கப்பட்டு, அந்நியமாக்கப்படுவது; தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் மீது எவ்விதக் கட்டுப்பாடும் செய்ய முடியாத வகையில் அமைந்துள்ள நவீன ஜனநாயகத் தேர்தல் முறையால் வாக்காளர்கள் அந்நியமாக்கப்படுவது; ஒரு நகரம் முழுவதிலும் பரவும் தொற்றுநோயால் குடிமக்கள் அனைவரும் பார்வை இழக்கும் நிலையிலும்கூட அரசாங்கத்தால் அவர்கள் புறக்கணிக்கப்படுவது (இது கோவிட்-19 பரவிய ஆண்டுகளை நினைவூட்டுகிறது), பண்ணை அடிமைகளின் உழைப்பால் விளைந்த உற்பத்திப் பொருள்கள் நிலப் பிரபுக்களால் அபகரிக்கப்படுவது என மார்க்ஸ் விவரித்த நிகழ்ச்சிப்போக்கின் பல்வேறு பரிமாணங்களை ஸரமாகோவின் நாவல்கள் காட்டுகின்றன. இந்த இரண்டு நூல்களையும் சேர்த்துப் படிப்பது அவற்றின் ஆழத்தையும் வீச்சையும் நன்கு புரிந்துகொள்ள உதவும்.
அந்நியமாதல்
எஸ்.வி.ராஜதுரை
வெளியீடு: க்ரியா, சென்னை.
விலை: ரூ.350
***
தொடர்புக்கு: 7299905950
ஸரமாகோ: நாவல்களின் பயணம்
எஸ்.வி. ராஜதுரை
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
விலை: ரூ.550
தொடர்புக்கு: 04259 226012