Last Updated : 24 Dec, 2016 10:17 AM

 

Published : 24 Dec 2016 10:17 AM
Last Updated : 24 Dec 2016 10:17 AM

புத்தகக் காட்சி எப்படி இருக்க வேண்டும்?

புத்தகக் காட்சி ஜனவரி 6-ல் தொடங்குகிறது. பச்சையப்பா கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், ஜனவரி 19 வரை நடக்கும் அறிவுலகத் திருவிழா இது. 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, 2016-ன் புத்தகக் காட்சியைப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஜூன் மாதம் நடத்தியது பபாசி. இந்த முறை நாட்டையே உலுக்கியெடுக்கும் நிகழ்வுகள், புயல் மழையைத் தொடர்ந்து, மீண்டும் ஜனவரி மாதத்திலேயே புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. புத்தகக் காட்சி எப்படி இருக்கும்? என்னென்ன எதிர்பார்ப்புகள், விமர்சனங்கள்? வெவ்வேறு தரப்பினரிடம் கேட்டோம்...

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்:

கடந்த மூன்று மாதங்களில் திருவிழா விடுமுறைகள், பணமதிப்பு நீக்கம், புயல் என்று பதிப்பாளர்களுக்கு வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வெள்ள பாதிப்பு இன்னமும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் புதிய புத்தகங்களைக் கொண்டுவருவதே கஷ்டமாகிவிட்டது. ஜனவரியில் வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் வருவார்களா, வந்து புத்தகங்களை வாங்கும் அளவுக்கு அவர்களிடம் கையில் ரொக்கம் உள்ளதா அல்லது கடன் அட்டை, பண அட்டை உள்ளதா போன்ற சிக்கல்கள் வேறு. புயலுக்குப் பின், கண்காட்சி வளாகத்தில் கைபேசி சிக்னல் கிடைக்குமா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம். சிக்னல் இல்லாவிட்டால் கடனட்டை தேய்க்கும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்யாது. பேடியெம், மோபிக்விக் போன்ற அமைப்புகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யவும் இணைய இணைப்பு தேவை. யூபிஐ வழியாகப் பணப்பரிமாற்றம் செய்யவும் இணைய இணைப்பு தேவை.

அனுஷ், எதிர் வெளியீடு:

பணத்துக்குத்தான் கடும் தட்டுப்பாடு இருக்கும் என்று தோன்றுகிறது. புத்தகம் வாங்க வருபவர் கள் ஏமாற்றமடையாமல் இருக்க வேண்டும் என்றால் ஸ்வைப் மெஷின் வசதி சிறப்பாக இருக்க வேண்டும். புத்தகக் காட்சி தொடர்பாகப் பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை. புத்தகக் காட்சி நடக்கிறது என்ற தகவல் அதிக அளவிலான வாசகர்களைச் சென்றடைய வைக்க வேண்டியது அவசியம். கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் இருக்கும் குறைபாடுகள் தொடராமல் பார்த்துக்கொண்டால் வாசகர்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக்கொள்ளலாம்!

செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம்:

புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் பலரிடமும் ரூ.2,000 இருக்கும். ஆனால், அவர்களுக்குக் கொடுக்க எங்களிடம் போதுமான சில்லறை இருக்குமா என்றும் தெரியவில்லை. முன்பு வங்கிகளிலிருந்து சில்லறை கொடுப்பார்கள். இந்த முறை வங்கிகளே பிரச்சினையில் இருப்பதால் அதையும் எதிர்பார்க்க முடியாது. முன்புபோல் அதிக எண்ணிக்கையில் இந்த முறை புத்தகங்களை அச்சடிக்கப் பதிப்பகங்கள் பயப்படுகின்றன. எனவே, ‘ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்’ முறையில் 50, 100 என்ற எண்ணிக்கையில்தான் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதனால் புத்தக விலை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஒரு பக்கம், நூலக ஆணை முறையாகக் கிடைக்காமல், பதிப்பகங்கள் கஷ்டப்படுகின்றன. இந்த முறை அரசே ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வேறு.

புகழேந்தி, பபாசி செயலாளர்:

பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்த பின்னரும் சின்னச் சின்ன அளவில் வெவ்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடவில்லை. பண அட்டை, கடன் அட்டை மூலம் புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது ஒரு முக்கியக் காரணம். உதாரணத்துக்கு, சென்னை கன்னிமரா நூலகத்தில் இருக்கும் நிரந்தரப் புத்தகக் காட்சியில் முன்பெல்லாம் கடன் அட்டை மூலம் வாங்குபவர்களின் எண்ணிக்கை 10%தான். இன்றைக்கு அது 80% ஆக உயர்ந்திருக்கிறது. தவிர, முன்பு பபாசி சார்பில் பதிப்பகங்களுக்கு உதவியாக, 10 ஸ்வைப்பிங் மெஷின் வழங்கிவந்தோம். இந்த முறை 50 மெஷின்களை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். சிறிய பதிப்பகங்கள் பயன்பெறும் வகையில், புத்தகக் காட்சி நடக்கும் வரை ஸ்வைப்பிங் மெஷின்களைப் பயன்படுத்திக்கொள்ள வசதியாக, சில வங்கிகளிடம் பேசி ஏற்பாடு செய்திருக்கிறோம். நெட்வொர்க் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் 50 பிரத்யேக இணைப்புகளை வழங்க பி.எஸ்.என்.எல்.லிடம் பேசி ஏற்பாடு செய்திருக்கிறோம். அப்புறம், இந்த முறை 50 ‘மொபைல்’ கழிப்பறைகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க மூன்று நுழைவாயில்கள், மூன்று வெளியேறும் வழிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த முறை சீசன் டிக்கெட் எடுக்கும் வசதியை ‘மொபைல் ஆப்’ மூலம் வழங்கவிருக்கிறோம். இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகக் காட்சிக்குச் சென்று வர முடியும். தவிர, அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான அறிவிப்புகளும் அவர்களுக்கு அனுப்பப்படும்.

சிவக்குமார், மூத்த பத்திரிகையாளர்:

முன்பெல்லாம் புத்தகக் காட்சிகளில் ‘பார்கெய்ன் கவுன்ட்டர்’ என்று ஒரு அரங்கு இருக்கும். பதிப்பகங்களும், வேறு சிலரும் பழைய புத்தகங்களைக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அச்சில் இல்லாத பல அரிய புத்தகங்களைப் பதிப்பகங்கள் அங்கே விற்பனைக்கு வைக்கும். அந்த ஏற்பாட்டைத் திரும்பக் கொண்டுவந்தால் வாசகர்களுக்கு அது வரமாக அமையும். புத்தககங்களை வாங்க அலைந்து திரிந்து களைப்புறும் வாசகர்கள் இளைப்பாறுவதற்குப் புத்தகக் காட்சிகளில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

ஷாஜஹான், வாசகர்:

சமூக ஊடகங்களில் பபாசியின் விளம்பரங் களைக் காணவே முடியவில்லை. பபாசி வலைதளத்திலும் புத்தகக் காட்சியின் தேதி, நடைபெறும் இடம் தவிர நிகழ்வுகள் குறித்த செய்திகள் அதிகம் இல்லை. பெரும் பாலான பதிப்பகங்கள் புத்தகத் திரு விழாவை ஒட்டியே நூல்களை வெளியிட முனைகின்றன. பல பதிப்பகங்களும் அவசர அவசரமாக அச்சகங்களை நெருக்குகின்றன. அவசரக் கோலமும் போட்டியும் நூல்களின் தரத்தைக் கெடுக்கின்றன. பல நகரங்களிலும் தொடர்ச்சியாக புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன எனும்போது, சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டே நூல்களை வெளியிடத் திட்டமிடுவது ஏன் என்று புரியவில்லை. செல்லாக்காசு அறிவிப்பு புத்தக விற்பனையை நிச்சயமாக பாதிக்கும் என்பதே என் கருத்து.

வீ. அரசு, பேராசிரியர்:

புத்தகக் காட்சிகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் சொற்பொழிவுகள், போட்டிகள் போன்றவை அதிகம் கேளிக்கைத் தன்மை கொண்டவையாக உள்ளன. அதுவும் ஒரு ஓரத்தில் நடக்கட்டும். ஆனால், அச்சுப் பண்பாடு என்பது புலமைத் துறை சார்ந்த ஒரு செயல்பாடு. வெறும் கேளிக்கை மரபு இல்லை. நமது மொழியில் அச்சிடுதல் எவ்வாறு நடைபெறுகிறது, புத்தகங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவற்றை எவ்வாறு பரவலாக எடுத்துச் செல்கிறார்கள், நமது மக்களின் வாசிப்புப் பழக்கம், ஒவ்வொரு ஆண்டும் எவ்வகையான புத்தகங் கள் வெளிவருகின்றன? போன்றவை பற்றியெல்லாம் நாம் பேச வேண்டும். அதற்கென இந்தப் புத்தகக் காட்சியில் குறைந்தது இரண்டு முழு நாட்களும், மாலை வேளைகளில் ஒரு மணி நேரமும் ஒதுக்க வேண்டும். இப்படிப்பட்ட கருத்தரங்க நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு அடுத்த ஆண்டு நிகழ்வின்போது புத்தகமாக வெளியிடப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x