திண்ணை: கலாப்ரியாவுக்கு விருது

திண்ணை: கலாப்ரியாவுக்கு விருது
Updated on
3 min read

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக கவிஞர் கலாப்ரியாவுக்கு 2022 க்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், இரா.முருகன், மாலன், தேவேந்திரபூபதி, யவனிகா ஸ்ரீராம், சந்தியா நடராஜன், வழக்கறிஞர் சுமதி, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் ராம்ஜி, காயத்ரி ஆகியோர் இணைந்து கலாப்ரியாவுக்கான நினைவுப் பரிசையும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அளித்தனர். ஸீரோ டிகிரி சிறுகதை, குறுநாவல், நாவல் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மொழி விருதுகள்: மொழி அமைப்பு 2022க்கான தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான போட்டியில், மொழிபெயர்ப்பாளர் பத்மஜா ஆனந்துக்கு ‘A House without Cats’ என்ற கதைக்காக முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சந்திரா தங்கராஜ் எழுதிய ‘பூனைகள் இல்லாத வீடு’இன் மொழிபெயர்ப்பு. ஜெயமோகனின் ‘வெறும் முள்’ கதையை மொழிபெயர்த்த அம்ருத் வர்ஷனுக்கு இரண்டாம் பரிசும் செந்தில் ஜெகநாதனின் ‘மழைக் கண்’ கதையை மொழிபெயர்த்த அஞ்சனா சேகருக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளி ரங்கராஜன் நாடகம்: ஸ்பானிய நாடக ஆசிரியர் கார்சியா லோர்க்காவின் ‘பெர்னாதா இல்லம்’ (The House of Bernarda Alba), நாடக இயக்குநர் வெளி ரங்கராஜன் இயக்கத்தில் நாளை (டிசம்பர், 18) மாலை 6.30 மணிக்கு சென்னை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தப்பட உள்ளது. இந்த நாடகத்தைத் தமிழில் எழுத்தாளர் பிரேம் மொழிபெயர்த்துள்ளார். நிகழ்வு குறித்த தொடர்புக்கு: 9444818922

சி.மோகன் 70: கவிஞர் சி.மோகனுக்கு 70 வயது நிறைவடைவதை முன்னிட்டு, அவரது இலக்கியப் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. மயிலாப்பூர், சிஐடி காலனி, கவிக்கோ மன்றத்தில் நாளை (டிசம்பர், 18) மாலை 4 மணிக்கு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்

இந்தக் கருத்தரங்கில் எழுத்தாளர்கள் வண்ணநிலவன், பவா செல்லதுரை, யூமா வாசுகி, தமிழச்சி தங்கபாண்டியன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், சுப்பிரமணி ரமேஷ், வெய்யில், கவின்மலர், இயக்குநர்கள் சீனு ராமசாமி, பா.இரஞ்சித், பத்திரிகையாளர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தளவாய் சுந்தரம், அருட்தந்தை ஜெயபதி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சி.மோகனுக்குப் பண முடிப்பு வழங்கப்படவுள்ளது.

நிமாய் கோஷ் நூல் வெளியீடு: மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான நிமாய் கோஷின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ‘நிமாய் கோஷ்’. சுனிதா பாசு எழுதிய இந்த ஆங்கில நூலை அம்ஷன் குமார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். போதி வனம் பதிப்பகம், இந்நூலை இன்று (டிசம்பர், 17) மாலை 6:30 மணிக்கு சென்னை தி.நகர் கிரி சாலையில் உள்ள பெங்காலி அசோசியேஷனில் வெளியிடவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் மகேந்திரன் இந்நூலை வெளியிடுகிறார். படத் தொகுப்பாளர் லெனின், அறந்தை மணியன், ப்ரணாப் பாசு, கருணா பிரசாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

வாசகசாலை விழா: வாசகசாலை ஆண்டு விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா ஆகிய மூன்றும் சேர்த்து முப்பெரும் விழாவாக இன்று (டிசம்பர் 17) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கவிஞர்கள் கண்டராதித்தன், நாணற்காடன், எழுத்தளார்கள் எழில் சின்னத்தம்பி, கார்த்திக் புகழேந்தி, சி.சரிதா ஜோ, முடவன் குட்டி முகம்மது அலி, ம.நவீன், லட்சுமிஹர், ஓவியர் ஜீவா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. கவிஞர்கள் உமா ஷக்தி, கவிதைக்காரன் இளங்கோ, எழுத்தாளர் பாமரன், இயக்குநர் கவிதாபாரதி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

டொமினிக் லாப்பியர் மறைவு: பிரெஞ்சுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டொமினிக் லாப்பியர், போர், வறுமை, நோய்கள், இவற்றுக்கு நடுவே வாழும் மனிதர்கள் எனப் பல்வேறு விஷயங்களை ஆவணப்படுத்தியவர். 17 வயதில் பாரிஸை விட்டு வெளியேறியவர்.

வட அமெரிக்கா முழுவதும் 30 ஆயிரம் மைல்கள் பயணம் செய்தார். அந்தப் பயண அனுபவத்தை மையமாக வைத்து இவர் எழுதிய ‘A Dollar for a Thousand Miles’ புத்தகம் சிறந்த பயண நூல். அதன் பிறகு புதுப்புது கதைகளையும் அனுபவத்தையும் தேடி உலகம் முழுவதும் பயணித்தார். இரண்டாம் உலகப் போரைப் பதிவுசெய்த கடைசி ஐரோப்பியப் பத்திரிகையாளர் இவர். அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து இந்திய – பாகிஸ்தான் பிரிவினை குறித்த ‘Freedom at Midnight’ (1975) நூலை எழுதினார்.

டொமினிக் லாப்பியர் இந்தியா மீது பிரியம் கொண்டவர். வங்க மொழியைப் பேசுவதில் புலமைபெற்ற இவர், கொல்கத்தாவில் உள்ள ரிக்‌ஷா தொழிலாளியை மையமாக வைத்து ‘City of Joy’ என்கிற நூலை எழுதினார். கொல்கத்தாவின் குடிசைப் பகுதிகளில் உள்ள தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக ‘City of Joy’ என்கிற அறக்கட்டளையை நிறுவி, தன் நூல்களின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பாதிக்கப்பட்டோருக்குச் செலவிட்டார். மத்திய அரசு 2008இல் இவருக்கு ‘பத்ம பூஷண்’ விருதை வழங்கியது. டிசம்பர் 2ஆம் தேதி இவர் காலமானார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in