

கர்ணன், சகுனி, குந்தி, பீஷ்மர், துரியோதனன், பாஞ்சாலி போன்ற மகாபாரதக் கதாபாத்திரங்களை வைத்துத் தனித் தனி நூலைப் படைத்துள்ளார் பத்திரிகையாளர் விஜயராஜ். முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று கர்ணன். பாஞ்சால நாட்டைச் சேர்ந்த திரெளபதியின் வரலாறு, பாரதப் போரில் அவளது நிலை என பாஞ்சாலியைப் பற்றிச் சுவையான வரலாற்றை நூலாசிரியர் எழுதியுள்ளார். அதுபோல் இந்தக் கர்ணன் யார், அவரது பின்னணி என்ன என்பது பற்றி முழுமையாக ‘கர்ணன்’ நூலில் எழுதியுள்ளார்.
கர்ணன் என்கிற கதாபாத்திரத்தின் உருவாக்கத்தைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியாளரின் பாணியில் நூலாசிரியர் ஆய்வுசெய்திருக்கிறார். பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதம், அம்பை சகோதரிகளைக் கவர்ந்துவந்த கதை என விறுவிறுப்பான நடையில் சொல்லியிருக்கிறார். எல்லா நூல்களிலும் வாசகருடன் உரையாடும் அழகான நடையை விஜயராஜ் கையாண்டுள்ளார். மகாபாரதக் கதையைக் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி இதுவரை கேள்விப்பட்டிராத வகையில் இந்த நூல்களின் வழி விஜயராஜ் விவரித்துள்ளார். - விபின்
கர்ணன், பாஞ்சாலி, குந்தியின் குருசேத்திரம், பீஷ்மரின் தேசம், சகுனி, ஒரு வழக்கு துரியோதனனை ஆதரித்து
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
தொடர்புக்கு: 8682868415
முழுமை பெறவேண்டிய வரலாறு
மதுரை - குற்றாலம் நெடுஞ்சாலையால் நீளவாக்கில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும் ஊரே கடையநல்லூர். முஸ்லிம்கள் வாழும் பகுதி என்று எடுத்துக்கொண்டால், சாலைக்குக் கிழக்கே உள்ள பகுதி தெரு என்றும் மேற்கே உள்ள பகுதி பேட்டை என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரே ஊர்தான் என்றாலும் இப்பகுதிகள், கலாச்சாரம், பேச்சு வழக்கு ஆகியவற்றில் மாறுபட்டவை.
இந்தத் தனித்துவமான ஊரின் வரலாற்றைச் சொல்லியிருக்கும் நூல், ‘கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு II’. கடையநல்லூர் குறித்த நல் அறிமுகத்தைத் தனது அழகான சொற்களில் இந்நூலாசிரியர் சேயன் இப்ராகிம் எடுத்துரைத்துள்ளார். இவர், கடையநல்லூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். ஆனாலும், இந்நூலில் பேட்டைப் பகுதியின் தகவல்களைக் கோப்பதில் இவர் கோட்டை விட்டிருக்கிறார். 2009இல் ‘கடையநல்லூர் வரலாறு’ எனும் பெயரில் கடையநல்லூர் வரலாற்றை இவரே எழுதியுள்ளார். அதிலிருந்த இம்மாதிரியான விடுபடல்கள் சுட்டிக் காட்டப்பட்டன.
அதைக் களையும்விதத்தில்தான் இந்நூலை எழுதியிருப்பதாக புதிய நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். ஆனால், பேட்டை பகுதியின் செய்திகளோ நிகழ்வுகளோ ஆளுமைகளோ பெரிய அளவில் இதில் சேர்க்கப்படவில்லை. ‘அன்றைய கடையநல்லூர் மெயின் பஜார்’ எனும் பகுதியில்கூட பேட்டை பகுதியைச் சேர்ந்த கடைகள் பேருக்கு இரண்டு மட்டும் இடம்பெற்றுள்ளன. பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி, பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி போன்ற பொறுப்புகளை வகித்துள்ளனர்.
ஆனால், இவை தொகுக்கப்படவில்லை. இந்நூலில் மங்களசுந்தரி திரையரங்கம் பற்றி விவரிக்கும் ஆசிரியர், அதற்கு முன்பாக அவர்கள் நடத்திவந்த மங்களசுந்தரி தயாரிப்பு நிறுவனம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சோப், ஊதுபத்தி, பீடி உள்ளிட்ட பல பொருட்களை அந்தக் காலத்திலேயே தயாரித்த அந்நிறுவனத்தின் சங்கு சத்தம்தான் ஒருகாலத்தில் கடையநல்லூர் நேரங்காட்டியாக இருந்துள்ளது. இம்மாதிரியான விடுபடல்களைச் சரிசெய்திருந்தால் உள்ளூர் வரலாறு சார்ந்த நூல்களில் இது முக்கியமான ஒன்றாக இருந்திருக்கும். - முகமது ஹுசைன்
கடையநல்லூர் முஸ்லிம்கள்
வரலாறு II
சேயன் இப்ராஹிம்
வெளியீடு: இஸ்லாமிய இலக்கியக் கழகம்
தொடர்புக்கு: 99654 58887