நூல் வெளி | “பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!” - ஆழி செந்தில்நாதன் நேர்காணல்

நூல் வெளி | “பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!” - ஆழி செந்தில்நாதன் நேர்காணல்
Updated on
3 min read

தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு ‘சர்வதேசப் புத்தகக் காட்சி’யாகப் பரிணமித்திருக்கிறது.

ஜனவரி 6 தொடங்கி 22 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவிருக்கும் பபாசியின் 46ஆவது புத்தகக் காட்சியில், ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதே மைதானத்தில் அமைக்கப்படவிருக்கும் நவீனப் பன்னாட்டு அரங்கில் முதல் ‘சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி’ நடைபெறுகிறது; இதற்காக, chennaiinternationalbookfair.com என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், ஆழி பதிப்பக உரிமையாளரும் சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் பன்னாட்டுத் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான ஆழி செந்தில்நாதன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்னெடுப்பு பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

சர்வதேசப் புத்தகக் காட்சி என்றால் என்ன; அது சென்னைக்கு வந்தது எப்படி?

வாசகர்கள் பெருந்திரளாகச் சென்று புத்தகங்கள் வாங்கும் புத்தகக் காட்சிகளையே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளுக்கு, பதிப்பகங்களும் நூலாசிரியர்களின் பிரதிநிதிகளான பதிப்புரிமை முகவர்களும் வருவார்கள்.

ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தை வேறு மொழியில் மொழிபெயர்த்து விற்பதற்கான பதிப்புரிமையை விற்பதும் வாங்குவதும் அங்கே நடக்கும்; பதிப்புலகம் சார்ந்த பல நிகழ்ச்சிகள், புத்தக அறிமுகங்கள், சந்தை அறிமுகங்கள், அண்மைக்காலப் பதிப்புத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் அங்கே அரங்கேறும். வழக்கமான புத்தகக் காட்சிகளைப் போல் அல்லாமல், பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளில் பல நாட்டவர்கள் வந்து உறவாடுவார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஃப்ராங்ஃபர்ட் புத்தகக் காட்சிக்கு, தமிழ்நாடு நூலக இயக்குநர் இளம்பகவத், பாடநூல் கழகத்திலிருந்து கூடுதல் இயக்குநர் சங்கர சரவணன், பபாசி செயலாளர் முருகன், துணை இணைச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோருடன் நானும் இணைந்து சென்றிருந்தோம். அங்கு பெற்ற பாடங்கள், தொடர்புகளைக் கொண்டு மிகக் குறைந்த காலத்தில் இந்த புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்தோம்.

ஷார்ஜா, ஃப்ராங்ஃபர்ட் போன்ற சர்வதேசப் புத்தகக் காட்சிகளுக்கும் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சிக்குமான வேறுபாடு என்ன? முதல் புத்தகக் காட்சி என்பதைத் தாண்டி இதை நடத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

உலகில் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடந்துவருகின்றன; ஃப்ராங்ஃபர்ட் புத்தகக் காட்சி பல நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. ஷார்ஜா, பாரிஸ், லண்டன், பெய்ஜிங் போன்ற நகரங்களில் அவை பிரசித்தமானவை. இந்தியாவில் புது டெல்லி, கொல்கத்தா நகரங்களைத் தொடர்ந்து, மூன்றாவது பெரிய பன்னாட்டுப் புத்தகக் காட்சியாக சென்னைப் பன்னாட்டு புத்தகக் காட்சி உருவாகும் வாய்ப்புள்ளது. எல்லாப் புத்தகக் காட்சிகளின் ஒரே நோக்கம், படைப்புகளை நாடு கடந்து எடுத்துச்செல்வதுதான்; சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் நோக்கமும் அதுதான்.

முதல் ஆண்டு, கால அவகாசம் குறைவு போன்ற காரணங்களால் மிகப் பெரிய சவால்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அரசாங்கம் முழு மூச்சோடு களமிறங்கியிருக்கிறது. அரசு அறிவித்துள்ள மொழிபெயர்ப்பு நல்கை (Translation Grants) காரணமாகப் பல பதிப்பாளர்கள் வர இசைவு தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கியமான பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு விமானக் கட்டணத்தையும் தங்குமிடச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்வதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது; இந்தியஅளவிலும் பிற மாநிலங்களிலிருந்தும் முக்கியப் பதிப்புலகப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியின் இயங்குமுறை, அது உள்ளடக்கியிருக்கும் சாத்தியங்கள் குறித்து விளக்க முடியுமா?

மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில், பல நாடுகளின் அரங்குகள் இடம்பெறுகின்றன. அந்தந்த நாட்டுப் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் பதிப்புரிமை முகவர்களும் நமது பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் தொடர்புகொண்டு தமிழ்ப் புத்தகங்களை உலக மொழிகளுக்கும் உலக மொழிகளின் நூல்களைத் தமிழுக்கும் கொண்டுசெல்ல ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவர்.

பல நாடுகளின் இலக்கியங்களைப் பற்றிய அறிமுகக் கூட்டங்கள் நடக்கும். பதிப்புத் துறையின் அண்மைக்காலப் போக்குகள் குறித்து 18ஆம் தேதி முழுநாள் மாநாடு நடக்க உள்ளது. உலகத் தமிழர்கள் அரங்கில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியைத் தமிழ்ப் பதிப்பாளர்களும் அறிவுச் சமூகமும் எப்படி அணுக வேண்டும்?

உலக இலக்கியங்களோடு நமக்கு நீண்டகாலத் தொடர்பு உண்டு. ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க, அரபு, ஆப்பிரிக்க இலக்கியங்கள் இன்றைய வாசகர்களிடம் பிரபலமாக இருக்கின்றன. இந்த நாடுகளின் படைப்புலகத்துடனும் பதிப்புலகத்துடனும் நாம் கொண்டிருக்கும் தொடர்பு வெறும் ஏட்டளவிலானது. அந்த நாடுகளின் பதிப்பகங்களோடு நாம் நெருங்க வேண்டும், படைப்பாளர்களிடம் நேரடியாக உறவாட வேண்டும். இவை மற்ற நாடுகளில் நடக்கின்றன.

தமிழ் செவ்விலக்கியங்களும் நவீன இலக்கியங்களும் உலக வாசகர்களை ஈர்க்கக்கூடியவை என்பது உண்மை. ஆனால், தமிழ்ப் படைப்புகள், குறிப்பாக நவீனப் படைப்புகள், மிகக் குறைவாகவே உலகளவில் சென்று சேர்ந்திருக்கின்றன. ஏனென்றால், நமது படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அந்த அளவுக்குத் தொடர்புகளோ வியூகமோ இல்லை.

இந்த நிலை மாற வேண்டும் என்றால், தமிழ்ச் சமூகம் சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி போன்ற ஒரு வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அங்கு வரும் உலகளாவியப் பதிப்பாளர்களோடு உறவாடி, நமது நூல்களுக்கான மொழிபெயர்ப்பு உரிமையை அவர்கள் வாங்கும்படி செய்ய வேண்டும்; அவர்களது படைப்பாளர்களின் நூல்களுக்கான காப்புரிமையை நாம் பெற வேண்டும்.

குறிப்பாக, அனைத்து முக்கியத் தமிழ் நூல்களுக்குமான பதிப்புரிமை அட்டவணை (rights catalogue) ஒன்றை அரசே தொகுத்துவருகிறது. தங்கள் நூல்கள் அதில் இடம்பெற பதிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். அது தமிழ் நூல்கள் உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட உதவும்.

இவையெல்லாம் சாத்தியமா; தமிழ்நாடு அரசு இதில் என்ன பங்கெடுத்துவருகிறது?

சாத்தியம் என்றுதான் தமிழக அரசு நினைக்கிறது. இந்த நிகழ்வே தமிழ்நாடு அரசின் நேரடி நிகழ்வுதான்; இதை நடத்துவது தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை. அதற்காகத்தான் தமிழ் நூல்களை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் கொண்டுசெல்ல, மொழிபெயர்ப்பு நல்கை திட்டத்தை அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பல பதிப்பகங்களோடு இணைந்து தமிழ் நூல்களை ஏற்கெனவே மொழிபெயர்த்துவருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடந்துவருகிறது; சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, பல நகரங்களில் இலக்கிய விழாக்கள் ஆகியவை முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கியமான நகர்வுகள்.

துரதிர்ஷ்டவசமாக, பதிப்பாளர்கள் போதுமான அளவுக்குத் தயாராகவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் எங்கள் பணிகள் பன்னாட்டுக் காட்சிக்குத் தமிழ்ப் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் தயார்படுத்துவது சார்ந்தே இருக்கும். வருகைதரும் வெளிநாட்டுப் பதிப்பகங்களோடு நாம் பதிப்புரிமைகளை விற்காமல், வாங்காமல் போனால், அது நமக்குப் பேரிழப்பாக மாறும். - சந்திப்பு: சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in