Published : 17 Dec 2016 11:13 AM
Last Updated : 17 Dec 2016 11:13 AM

என் உலகம்: கடலோரத்துக் கதைகள்

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் எங்களது சொந்த ஊர். 1944-ம் ஆண்டு பிறந்தேன் என்பது பதிவேடுகளில் உள்ளது. ஆனால், நிச்சயமாக அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு பிறந் திருப்பேன். என் தகப்பனார் அப்துல் காதர்; தாயார் பாத்திமா. இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. தகப்பனாருக்குக் கருவாடு வியாபாரம். இங்கிருந்து இலங்கைக்குக் கருவாடு ஏற்றுமதி செய்துவந்தார். என் தகப்பனாருக்கு எங்களைப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வமெல்லாம் கிடையாது. ஆங்கிலக் கல்வி இஸ்லாத்தில் விலக்கப்பட்டது என்ற நம்பிக்கை அப்போது பரவலாக இருந்தது. அதனால் நாங்கள் சகோதரர்கள் பள்ளிக்குப் போய்ப் படிப்பது எங்கள் தகப்பனாருக்குப் பிடிக்கவில்லை. இந்த ஆங்கிலக் கல்வி எதிர்ப்பை எனது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலில் சொல்லியிருப்பேன்.

எங்கள் தகப்பனாருக்கு இரு மனைவிகள். மூத்த மனைவிக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் என் தாயாரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். எங்கள் பெரியம்மா எங்கள் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். அவரிடம் போய் பள்ளிக்குண்டான கட்டணத்தைப் பெற்றுக்கொள்வோம். அந்த ஒண்ணேகால் ரூபாயையும் நாங்கள் கேட்டதற்காகத் தருவாரே தவிர பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் இல்லை. இந்தச் சூழலில்தான் நாங்கள் சகோதர, சகோதரிகள் வளர்ந்தோம்.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் வாங்குவதற்குத் தகப்ப னாரின் கையெழுத்து அவசியம். நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தகுதி யானதும் அதற்கான சான்றிதழ் வாங்கு வதற்கு என் தகப்பனாரை அழைத்து வர வேண்டும் என்று பள்ளியில் சொன் னார்கள். என்னுடைய தகப்பனாருக்கு நாங்கள் படிப்பதிலேயே இஷ்ட மில்லையே, எப்படிச் சான்றிதழில் கையெப்பமிட வருவார், ஆனால் சான்றிதழும் வாங்க வேண்டும், என்ன செய்ய? அந்தக் காலத்தில் ராமநாதபுரத்திலிருந்து ஒரு சங்கு வியாபாரி எங்கள் ஊருக்கு வருவார். எனக்கு அவருடன் நல்ல பழக்கம்.

என் பள்ளியில் உள்ளவர்களுக்கு என் தகப்பனாரைத் தெரியாது. அதனால் சங்கு வியாபாரிக்கு என் தகப்பனார் வேஷம் கட்டிவிட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் கையொப்பமிட அவரைக் கூட்டிச் சென்றேன். ஆனால், மாண வர்கள் விளையாட்டாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ஊராரின் நிர்ப்பந்தத்தின் பேரில் என் தகப்பனார் விருப்பமில்லாமல் கையெழுத்துப் போட்டார்.

என் தகப்பனாருக்கு நாங்கள் பள்ளி யில் படிப்பதில் இஷ்டமில்லையே தவிர எங்களுடன் பிரியமாக இருந்தார். வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு எங்களுக்குக் கதைகள் சொல்வார். அவரது வேலைகளுக்கு இடையில் எங்களுடன் கதைகள் பேசுவதற்கும் நேரம் ஒதுக்குவார். நாட்டுப்புறக் கதை கள், ஊரிலுள்ள முதலாளிகளின் அடா வடித்தனங்கள் இவற்றையெல்லாம் நடிப்புடன் சொல்லிக் காண்பிப்பார். நாங்கள் வட்டமாக உட்கார்ந்து கேட் போம். என் தகப்பனார் சிறந்த ஒரு கதை சொல்லி. கல்வி அறிவு இல்லையா கிலும் இவ்வளவு பரந்த அறிவு எப்படிக் கிடைத்தது, என்று நாங்கள் சகோதர, சகோதரிகள் அடிக்கடி வியப்பதுண்டு.

நான் எழுத ஆரம்பித்ததற்கு என் தகப்பனாரிடம் கதைகள் கேட்டதுதான் காரணம். கருவாட்டு ஏற்றுமதியில் என் தகப்பனாருக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டது. எங்கள் சரக்குடன் சென்ற கப்பல் கவிழும் நிலைக்குச் சென்ற போது கப்பலில் இருந்த சரக்குகளை யெல்லாம் கடலுக்குள் எறிந்துவிட்டனர். அவற்றில் எங்கள் சரக்குகளும் அடக் கம். அதில் ஏற்பட்ட இழப்பு எங்கள் குடும்பத்தைத் துண்டுதுண்டாக்கி விட்டது. இதை என் தகப்பனார் கதை யாகச் சொல்லி, நான் எனது ‘துறை முகம்’ நாவலில் எழுதியிருக்கிறேன்.

என் தகப்பனாரின் கதைகளை எழுதியிருக்கிறேனே தவிர அவருக்கு நான் கதைகள் எழுதுவதும் பிடிக்காது. “காண்டம் எழுதுறான்” எனச் சொல் லியபடி காகிதங்களைக் கிழித்துப் போட்டுவிடுவார். என் சகோதர, சகோதரிகளுக்கும் நான் எழுதுவதைக் குறித்த அறிவோ ஆர்வமோ இருந்த தில்லை. எனக்கு முதலில் மலையாளப் பத்திரிகையான சந்திரிகாவில் வேலை கிடைத்தது. ஆனால், என் மூத்த அண்ணனுக்கு அதில் விருப்பம் இல்லை. சென்னையில் ஒரு எண் ணெய்க் கடை வேலைக்கு என்னை அனுப்பிவைத்தார். அங்கு வேலை பார்த்தபோது எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது.

அந்த அடிப்படையில் கடக்காவூர் தங்கப்பன் என்னும் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் படம் எடுப்பதற்குப் பணம் உதவினேன். பிரபல மலையாள நடிகர் மதுவும் சாரதாவும் இணைந்து நடித்த அந்தப் படமும் வெளிவந்தது. ஆனால், என் கடை முதலாளி என் சினிமா ஆர்வத்தை என் அண்ணனிடம் தெரிவித்துவிட்டார். “கலையும் வியாபாரமும் பொருந்திப் போகாது. ஒன்று வியாபாரியாக இரு. இல்லையென்றால் கலைஞனாக இரு” என்று எனக்கு எழுதினார். இந்த அண்ணன் ஒரு ஓவியர். நாகர்கோவில் இந்துக் கல்லூரியின் சின்னம் இவர் வரைந்ததுதான்.

எனக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தபோதும்கூட என் சகோதர, சகோதரிகள் யாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லவும் இல்லை; சந்தோஷப்பட்டதும் இல்லை. ஒருவேளை இந்த சாகித்திய அகாடமி விருது பற்றி அவர்களுக்குத் தெரியாதிருந்திருக்கலாம்.

நான் இப்போது திருநெல்வேலி யில் வியாபாரத்துக்காக வந்து தங்கிவிட்டேன். என் மனைவியின் பெயர் ஜெலீலா. எங்களுக்கு சமீம் அகமது, மிர்சாத் அகமது என்று இரண்டு மகன்கள். இருவரும் அரபு நாட்டில் ஐடி துறையில் பணியாற்றிவருகிறார்கள். என் பிள்ளைகள் இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள்தான். இரவு நேரங்களில் நான் கதைகள் எழுதும்போது என் மனைவி வாஞ்சை யுடன் எனக்குத் தேநீர் வைத்துத் தருவாள்.

வியாபாரம், எழுத்து என்று நான் இருந்தபோது, என் பிள்ளைகளைக் கவனித்துக்கொண் டாள். மலையாளம் வாசிக்கத் தெரிந்தவள். என்னுடைய கதைகளை அவ்வப்போது படிக்கக்கூடியவள். ஆனால், அபிப்ராயங்கள் எதுவும் பெரிதாகச் சொல்ல மாட்டாள். நான் பிறருடைய அபிப்ராயங்களைக் கேட்கக் கூடியவனும் இல்லை.

(தொடரும்)
- தோப்பில் முஹம்மது மீரான்,
மூத்த தமிழ் எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x