Published : 10 Dec 2016 10:52 AM
Last Updated : 10 Dec 2016 10:52 AM

பிறமொழி நூலறிமுகம் | ஓர் ஊர்சுற்றியின் வாழ்க்கை

ஓர் ஊர்சுற்றியின் வாழ்க்கை

எ ஃப்ரீ திங்கிங் கல்சுரல் நேஷனலிஸ்ட் எ லைஃப் ஹிஸ்டரி ஆஃப் ராகுல் சாங்கிருத்யாயன் | அலகா ஆத்ரேயா சுடா, ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிடி பிரஸ். விலை: ரூ.950

இந்தியாவின் ஊர்சுற்றிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர் ராகுல்ஜி என அறியப்பட்ட ராகுல் சாங்கிருத்தியாயன். சனாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்து வைஷ்ணவ சாதுவாக, ஆரிய சமாஜத்தின் பிரச்சாரகராக, புத்த பிக்குவாக, விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்டாக, இந்தி மொழியின் பாதுகாவலராக என ஏராளமான அங்கிகளை அவ்வப்போது அணிந்துவந்த ராகுல்ஜியின் வாழ்க்கை எண்ணற்ற ஆச்சரியங்களைக் கொண்டது. நீண்ட காலம் அறியப்படாமலே இருந்த வடமொழி, பெளத்த நூல்களைக் கடும் முயற்சிகளுக்கிடையே மீட்டு வந்த அவர் நாளந்தா பல்கலைக்கழகத்துக்குப் புத்துயிர் ஊட்டியவர் என்ற பெருமையும் பெற்றவர். திபெத், நேபாளம், இலங்கை, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளிலும் அவரது அறிவுத் திறனுக்காகப் பெரிதும் போற்றப்பட்டவர். அவரது பன்முகத் திறனும் பயண ஆன்மாவும் இந்தப் புத்தகத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கின்றன.

- வீ.பா. கணேசன்

*

இருண்ட காலமா?

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் | மயிலை சீனி. வேங்கடசாமி | விலை: ரூ. 120 | அலைகள் வெளியீட்டகம், சென்னை - 89 | 9841775112

தமிழகத்தில் வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் பௌத்த, சமண சமயக் கோயில், தொல்லியல் சான்றுகளில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. இதில் தனிக் கவனம் செலுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. சான்றுகளின் வழியாக வரலாற்றை அவர் முன்வைத்த பாங்கு முக்கியமானது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் களப்பிரர்கள். அவர்களைப் பற்றிச் சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அவர்கள் காலத்தை 'இருண்ட காலம்' என்று வரலாற்று நூல்கள் மறைத்தன. வைதிக சமயத்தையும், அதை வளர்த்தெடுத்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலப் பகுதிகளான பிரம்மதேயத்தையும் கேள்வி கேட்டது, சமண சமயத்துக்கு ஆதரவு தெரிவித்தது போன்றவையே களப்பிரர்கள் மறைக்கப்பட்டதற்குக் காரணம் என்கிறார் மயிலையார். செப்பேடுகள், அக்கால சமய, இலக்கிய நூல் ஆதாரங்கள் மூலம் களப்பிரர் கால வரலாற்றை, தன் 75-வது வயதில் எழுதிய இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.

- ஆதி

*

எது காந்தியைக் கொன்றது?

காந்தியும் தமிழ் சனாதனிகளும் | அ. மார்க்ஸ் | விலை: ரூ. 130 | பிரக்ஞை வெளியீடு, சென்னை-17. | 9940044042

தமிழ்நாட்டில் சமீபத்தில் காந்தியைப் பற்றி நடைபெற்றுவரும் விவாதங்களுக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்துவருபவர் அ. மார்க்ஸ். அவரது இந்த நூல், தமிழகத்தின் சனாதனிகள் காந்திக்குக் காட்டிய எதிர்வினைகள், தீண்டாமைக்கு எதிரான காந்தியின் கருத்துக்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது.

சாதி, தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறவர்கள் மத்தியில் அவற்றுக்கெதிராகத் தொடர்ந்து பேசியிருக்கிறார் காந்தி. இந்தியாவில் பூகம்பம் ஏற்பட்டதைக்கூட அது தீண்டாமை போன்ற கொடுமைகளுக்கு எதிரான கடவுளின் கோபம் என்று வர்ணித்திருக்கிறார்.

கோயில் நுழைவு ஆதரவு, கலப்பு மணம் ஆதரவு உள்ளிட்ட காந்தியின் கருத்துகள் தமிழகத்தின் பழைமைவாதிகளிடையே ஏற்படுத்திய எதிர்ப்பலைகளைப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. கோயில் நுழைவுக்காக காந்தியைக் கடுமையாக விமர்சித்து நீலகண்ட சாஸ்திரி என்பவர் சிறுநூல் எழுதியிருக்கிறார். சாதி, தீண்டாமை போன்றவற்றுக்கு எதிராக காந்தி போராடியதுதான் அவரது உயிரைப் பறித்தது என்பதற்கு ஆதாரங்களை முன்வைத்து வாதிடுகிறது நூல்.

மார்க்ஸியவாதிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியர்கள் காந்தியிடம் இன்று தீண்டாமை காட்டிவரும் சூழலில் அ. மார்க்ஸின் புத்தகம் முன்னோடியான, நேர்மையான முயற்சி!

- நீதி

*

அதிகாரிகளின் 'முறைவாசல்'

ஆட்சி முறை ஒரு பார்வை | ந. முருகன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) | விலை ரூ. 230 | என்.சி.பி.எச். வெளியீடு, சென்னை-98 | 044-26241288

ந. முருகன் ஐ.ஏ.எஸ்., 'துக்ளக்' பத்திரிகையில் எழுதிய தொடர் இப்போது புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் தயவுக்காக அதிகாரிகள் 'முறைவாசல்' செய்வது பற்றியும் இதில் அவர் விளக்கியிருக்கிறார். 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், 'கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் துறையில் நடந்த ஒழுங்கீனங்கள், விதிமீறல்களை உடனே பட்டியலிட்டு அனுப்புக' என்று தலைமைச் செயலாளர் நம்பியார் ரகசியச் சுற்றறிக்கையை அனுப்பியதும், 'எதுவுமே நடக்கவில்லை' என்ற அறிக்கையை எல்லாத் துறைகளின் செயலர்களும் அனுப்பியிருக்கின்றனர். 'செயலாளர்களை இன்னமும் மாற்றாத நிலையில் அவர்கள் எப்படி ஊழல், விதிமீறல்களை உங்களுக்குத் தெரிவிப்பார்கள்?' என்று சக அதிகாரி கேட்ட பிறகு, பழைய அதிகாரிகள் அனைவரும் மாற்றப்பட்டதை நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். தகுதி, திறமை புறக்கணிக்கப்பட்டு விசுவாசம், தவறுகளுக்கு உடந்தை போன்றவையே அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வுக்குக் காரணங்களாக இப்போதும் இருப்பதை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.

- சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x