

தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் கால முன்னோடிகளைப் பற்றி இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான முன்னெடுப்பாக வெளிவந்திருக்கிறது, ச.தமிழ்ச்செல்வனின் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ எனும் தொகுப்பு.
கார்த்திகேசு சிவத்தம்பி 1967ஆம் ஆண்டில் எழுதிய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, 1977இல் அ.சிதம்பரநாதர் எழுதிய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரமும் இணைந்தெழுதிய ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ உள்ளிட்ட இன்னபிற நூல்கள், தமிழ்ச் சிறுகதை எழுதப்பட்ட கால வரலாற்றையும் அன்றைய நாளில் எழுதப்பட்ட கதைகளையும் முன்வைத்துப் பேசின.
ஆனால், ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் இந்நூல், சிறுகதைகளைப் பற்றி மட்டுமல்லாமல், அவற்றை எழுதிய எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதியிருப்பதில் தனித்துவம் பெறுகிறது. ஒருவரின் அரசியலைப் புரிந்துகொள்ளப் படைப்பை மட்டும் பார்த்தால் போதாது. அவர் வாழ்ந்த வாழ்க்கை, படித்த படிப்பு, நட்பு வட்டம், பொருளாதார நிலை, வாழ்ந்த இடம், பொது வாழ்வுடன் அவருக்கு இருந்த தொடர்பு போன்ற தகவல்களும் ஒரு வாசகருக்குத் தெரிதல் அவசியம். சிறுகதையாளர்களின் வாழ்க்கை வரலாறும் அவர்களது உரைகளும் நேர்காணல்களும் தேவையான இடங்களில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளன.
தமிழின் முதல் சிறுகதை ஆசிரியரென நூலாசிரியர் ஏற்றுக்கொண்ட வ.வே.சுப்பிரமணியம் தொடங்கி கந்தர்வன் வரை 57 தமிழ்ச் சிறுகதையாளர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளில் சில எழுத்தாளர்களைப் பற்றி விரிவாகவும் (தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன்), சில எழுத்தாளர்களைப் பற்றி மிகச் சுருக்கமாகவும் (வை.மு.கோதைநாயகி அம்மாள், மு.கருணாநிதி) எழுதியிருக்கிறார். சுருக்கமாக எழுதினாலும் எழுத்தாளரின் கதைகளில் மனம் தோய்ந்து எழுதும் நூலாசிரியரின் எழுத்து நடை, வாசகருக்கு மிக நெருக்கமானதாக அமைந்துவிடுகிறது.
சிறுகதை எழுதப்பட்ட காலம், கதை மாந்தர்கள், அவர்களின் வாழ்க்கைப் பாடுகள், எழுத்தாளர்கள் முன்னிறுத்திய சமூகப் பிரச்சினைகள் பற்றியும் தனது பார்வையைச் சமரசமின்றி இக்கட்டுரைகளில் ச.தமிழ்ச்செல்வன் பதிவுசெய்துள்ளார். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் ஆகியோரின் கதைகளை விவரிக்கையில், அக்கதைகளுக்குள் நம்மையும் ஒருவராக்கி உலவவிடும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது தமிழ்ச்செல்வனின் எழுத்து.
தொடக்கக் காலத்தில் சிறுகதைகளை எழுதியவர்கள், அவற்றைப் பிரசுரித்த பத்திரிகைகள், கதைகளில் வெளிப்பட்ட சிந்தனைப் போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஆறு பிரிவுகளாகத் தமிழ்ச் சிறுகதைகளை வகைபிரித்துக் கூறியிருப்பது, அவற்றைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கான பாதையை அமைத்துத் தந்துள்ளது.
சிறுகதைகளுக்கான தனித்த இயக்கம்போல் செயல்பட்ட ‘மணிக்கொடி’, ‘எழுத்து’ பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள், வெகுஜன இதழ்களில் வெளியான கதைகள், ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘செம்மலர்’, ‘சிகரம்’ போன்ற இடதுசாரிச் சிந்தனையாளர்கள் நடத்திய இதழ்களின் கதைகள், சுயமரியாதை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பெண் விடுதலை போன்ற உள்ளடக்கத்துடன் எழுதப்பட்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர்களின் கதைகள், 1960-களுக்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் மனவெழுச்சியுடன் எழுதப்பட்ட தலித்தியக் கதைகள், 1980-களில் புதிய உத்வேகத்துடன் எழுதப்பட்ட பெண் எழுத்தாளர்களின் கதைகள் போன்றவற்றை வகைபிரித்துக் கூறுவது தமிழ்ச் சிறுகதைகளின் அகத்தையும் தமிழ்ச் சமூகத்தின் புறத்தையும் உள்வாங்கிக்கொள்ளப் பேருதவியாக உள்ளது.
‘பெண் படைப்பாளிகள்’ எனும் தலைப்பில் வை.மு.கோதைநாயகி அம்மாள், கமலா விருத்தாச்சலம், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், கு.ப.சேது அம்மாள் ஆகியோரைப் பற்றியும் ‘திராவிட இயக்க எழுத்தாளர்கள்’ எனும் தலைப்பில் மு.கருணாநிதி, இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோரைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளவை மிகச் சுருக்கமாக இருந்தாலும் மிகவும் அவசியமான அறிமுகக் கட்டுரைகள்.
இக்கட்டுரைகளை எழுதிய நூலாசிரியரின் பெரும் உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பெருந்தொகுப்பென்றாலும் இதிலும் விடுபடல்கள் உள்ளன. ஆர்.சூடாமணி, சுஜாதா, மேலாண்மை பொன்னுச்சாமி, இராசேந்திர சோழன் (அஸ்வகோஷ்) உள்ளிட்ட பல படைப்பாளிகளையும் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களும் விடுபட்டுள்ளதாக நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதை முன்னோடிகள் பற்றிய கட்டுரைகள் மட்டுமே அடங்கிய இந்நூலில், தற்காலச் சிறுகதையாசிரியர்கள் எவரின் பெயரும் படைப்பும் இடம்பெறவில்லை. ஆனால், சிறுபான்மை மக்கள் வாழ்வினை முன்வைக்கும் படைப்பாளர்கள் எனத் தற்கால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்பில் ஓரிருவரின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார். ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள இக்கட்டுரைகளில் உரத்த குரலுமில்லை; ஒடுங்கிய குரலுமில்லை.
சக பயணியின் அருகமர்ந்து பேசும் நெருக்கமும், நம் முன்னோடிகளின் பங்களிப்பினைப் பரவலாகக் கொண்டுசேர்க்கும் எண்ணமுமே மேலோங்கியுள்ளன. தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டுத் தடத்தின் முதல் ஐம்பதாண்டுகளின் சிறந்த கதைகளைப் பற்றியும் அதன் ஆசிரியர்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ள இந்நூல், கையேடாக, வழிகாட்டியாக, விமர்சனமாக, பரிந்துரையாக அமைந்திருப்பதில் ச.தமிழ்ச்செல்வனின் ஆழ்ந்த வாசிப்பு வெளிப்படுகிறது. - மு.முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in