

பாரதி அமரரான உடனே, முதன்முதலில் எல்.ஜி.ராமானுஜர், 1921இல் ‘சுதேசமித்திர’னில் ‘ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி பற்றிய சில தகவல்களை வழங்கினார். இவரைத் தொடர்ந்து, பாரதியின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சக்கரைச் செட்டியாரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
பாரதியின் கவிதைகளைத் தொகுத்து ‘சுதேச கீதங்கள்’ என்னும் தலைப்பில் இரண்டு பகுதிகளாக 1922 ஜனவரியில் ‘பாரதி அச்சரம்’ வெளியிட்டது. முதல் பகுதியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியார் - சரித்திரச் சுருக்கம்’ என்றும், இரண்டாம் பகுதியில் சக்கரைச் செட்டியார் ‘The Political Life of Sri Subramania Bharathi’ என்றும் தம் நினைவுக் குறிப்புகளை வழங்கினர்.
இதில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாரதியின் வாழ்க்கைக் குறிப்புகளையும் சில நிகழ்ச்சிகளையும் சுருக்கமாக வழங்கினார். சக்கரைச் செட்டியார் பாரதியின் அரசியல் ஈடுபாட்டினைக் குறித்து விரிவாக எழுதினார். இவர்களில் சோமசுந்தர பாரதியார், பாரதியின் பள்ளித் தோழர்; சக்கரைச் செட்டியார் பாரதியின் உற்ற தோழர்.
இவர்களுக்குப் பின்னர் மண்டயம் சீனிவாசாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, நாராயண ஐயங்கார், பாவேந்தர் பாரதிதாசன், பரலி சு.நெல்லையப்பர் இன்ன பிறரும் பாரதியைப் பற்றி பத்திரிகைகளில் எழுதிப் பதிவுசெய்தனர். யதுகிரி அம்மாள் ‘பாரதி சில நினைவுகள்’ எனும் வரலாற்று நூலை 1939ஆம் ஆண்டு எழுதினார்.
இவர் எழுதி 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அந்த நூல் வெளிவந்தது. யதுகிரி புதுச்சேரி சுதேசிகளுக்கு உதவிவந்த மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரின் புதல்வி. இவர் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு ‘இந்தியா’ பத்திரிகையை ஆரம்பித்தவர். பாரதியார் அடிக்கடி யதுகிரி அம்மாள் வீட்டுக்குச் சென்று, தான் எழுதிய பாடல்களைப் பாடிக்காட்டுவார். பாரதியின் வாழ்க்கையை நமக்குச் சொன்னவர்களில் யதுகிரி அம்மாள் முக்கியமானவர்.
வ.ரா.வின் ‘மகாகவி பாரதியார்’ 1944இல் வெளிவந்தது. 1911இலிருந்து 1914 வரை பாரதியின் வீட்டிலும் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திலும் தங்கி நெருக்கமாகப் பழகியவர் வ.ரா. அந்த அனுபவங்களின் அடிப்படையிலும் சில ஆவணங்களின் அடிப்படையிலும் அவர் இந்த நூலினை எழுதினார்.
பாரதியின் வரலாற்று நூல்களில் இந்த நூல் முக்கியமானது. பாரதியின் மனைவி செல்லம்மாள் பாரதி ‘தவப்புதல்வர் பாரதி சரித்திரம்’ எனும் சிறு நூலை எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து இவருடைய மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா ஆகிய இருவரும் தம் தந்தையார் குறித்து சிறு நூல்களை வெளியிட்டனர். அவை பாரதியின் முழுமையான வரலாறு இல்லை என்றாலும், பாரதி வாழ்க்கையின் சில குறிப்புகளாக மிளிர்கின்றன.
ரா.கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ என்னும் நூல் 1947இல் வெளியிடப்பட்டது. ரா.கனகலிங்கம் மகாகவியின் அன்புக்குரியவர். பாரதியார் கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்தது நாம் அறிந்த செய்தி. ரா.அ.பத்மநாபன் மகாகவியின் நம்பகமான ஆவணங்கள், ஒளிப்படங்களைப் பயன்படுத்தி ‘சித்திரபாரதி’ என்ற நூலினை 1957இல் வெளியிட்டார். இந்த வரலாற்று நூல் சிறப்பாகப் பேசப்பட்டது.
வ.உ.சிதம்பரனார் எழுதிவைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘வ.உ.சி கண்ட பாரதி’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இது அளவில் சிறியது என்றாலும், பல புதிய தகவல்களைக் கொண்டது. ரா.அ.பத்மநாபன் எழுதிய ‘பாரதியார்’ நூலினை 1983இல் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டது. சீனி.விசுவநாதன் பல்வேறு கோணங்களில் பாரதியைப் பற்றி எழுதிய நூல்கள் பல உள்ளன. ந.கோபாலன் ‘நூற்றாண்டு கண்ட பாரதி’ என்ற நூலினைப் படைத்துள்ளார்.
நெல்லை ஏ.வி.சுப்பிரமணிய ஐயர், ஆக்கூர் ஆனந்தாச்சாரி, கு.ப.ரா, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், பெ.தூரன், தொ.மு.சி.ரகுநாதன், பெ.சு.மணி, சீனி.விசுவநாதன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ய.மணிகண்டன் ஆகியோர் பாரதியைப் பல கோணங்களில் அறியத் தந்தவர்கள். பிரேமா நந்தகுமார் ‘Subramania Bharati’ என்ற நூலினை 1964இல் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா 1982இல் நடைபெற்றது. தமிழ்நாட்டு அரசின் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் ‘பாரதி நூற்றாண்டு விழாக் குழு’ அமைக்கப்பட்டது. அது பல திட்டங்களை வகுத்தது. அவற்றுள் ஒன்று பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் திட்டம். ஆனால், ‘பாரதியின் வாழ்க்கை வரலாறு’ நூல் மட்டும் இன்றுவரை வெளிவரவில்லை.
பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும் பாரதி பிரசுராலய நிறுவனருமான சி.விசுவநாதன், தான் மரணம் அடைவதற்கு முன்னர் 1984இல் சீனி.விசுவநாதனையும் தி.ந.ராமச்சந்திரனையும் அழைத்து, பாரதியின் வரலாற்றினை உடனே எழுதி வெளியிடுமாறு வேண்டினார். அவர்கள் எழுதிய ‘மகாகவி பாரதி வரலாறு’ 1996இல் வெளிவந்தது. சீனி.விசுவநாதன் பாரதியின் படைப்புகளைக் காலவரிசைப்படுத்தி 12 தொகுதிகளாகப் பதிப்பித்தவர்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ‘பாரதி கைதி எண் 253’ என்ற தலைப்பில், 1918இல் பாரதி கடலூர் சிறையில் கழித்த 21 நாட்களைப் பற்றி விளக்குகிறார். ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ என்ற நூலை கார்த்திகேசு சிவத்தம்பியும் அ.மார்க்ஸும் இணைந்து எழுதி 1995இல் பதிப்பித்தனர். எழுத்தாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் ‘பாரதி விஜயம்’ நூலை 2017இல் வெளியிட்டார். பாரதி குறித்து இவ்வளவு நூல்கள் வெளியிடப்பட்டும் பாரதி பற்றி முழுமையான வரலாற்று நூலின் தேவை இன்றும் நமக்கு இருக்கிறது!