

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிப்புக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், வழக்கம்போல அந்த விருது தொடர்பிலான சர்ச்சைகளும் உயிர் பெற்றுவிட்டன.
இந்திய மொழி இலக்கியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் பிரதமர் நேருவால் 1954-ல் தொடங்கிவைக்கப்பட்ட அமைப்பு சாகித்ய அகாதமி. ஆண்டுதோறும் அதன் சார்பில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு எழுத்தாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் இந்த விருதானது ஒரு வகையில் அரசு சார்பில் ஒரு படைப்பாளிக்கு அளிக்கப்படும் முக்கியமான கௌரவம். இந்தியாவில் எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி பிழைப்பு நடத்த முடியாத சூழலில் இந்த விருதுடன் அளிக்கப்படும் பரிசுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒரு தொகையே அல்ல; இத்தொகையை ஒரு கோடியாக உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும், அதைத் தாண்டியும் சாகித்ய விருதுக்கென ஒரு மதிப்பு இருக்கிறது இது அந்த விருதுக்கான தேர்விலிருந்து உருவாவது.
தமிழகத்திலோ ஆரம்ப காலகட்டத்திலிருந்தே எழுத்தாளர்கள் தேர்வு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இத்தனைக்கும் தமிழ் மொழிக் கான விருதைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் தமிழர்களே அமர்த்தப்படுகிறார்கள். எனில், என்னதான் பிரச்சினை? சாகித்ய விருதை ஒட்டி நடக்கும் அசிங்கமான அரசியல்தான் பிரச்சினை!
இந்திய விளையாட்டுத் துறையை அரசியல்வாதி களும் தொழிலதிபர்களும் ஆக்கிரமித்திருப்பது போல, தமிழக சாகித்ய வட்டத்தை இலக்கிய அரசியல்வாதி களும் இரண்டாம்தரக் கல்வியாளர்களும் ஆக்கிரமித் திருக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியம் கொண்டாடத் தக்க ஆளுமைகளான சுந்தர ராமசாமியும் மௌனியும் பிரமிளும்கூட இந்தக் கூட்டத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றால் மேலதிகம் சாகித்ய விருது அரசியலின் அசிங்கத்தைப் பற்றி விவரிக்க என்ன இருக்கிறது?
சாகித்ய விருது என்பது ஒரு எழுத்தாளருக்கு அளிக்கப் படும் விருதோடு முடிந்துவிடவில்லை; மாறாக விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நாட்டின் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட 23 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகிறது. சுமாரான ஒரு நபரோ, மோசமான ஒரு புத்தகமோ தேர்ந்தெடுக்கப்படும்போது நேரிடும் பெரும் துயரம் இங்குதான் நிகழ்கிறது. ஏனைய அத்தனை மொழிகளிலும் இப்படி மொழிபெயர்க்கப்பட்டுச் செல்லும் புத்தகத்தைப் பார்ப்பவர்கள் ‘இதுதான் இன்றைய தமிழ் எழுத்தின் நிலை’ என்ற முடிவுக்கு வர அது வழிவகுக்கிறது. ஆக, தவறான அங்கீகாரம் தமிழுக்கான அவமரியாதையாகவும் மாறிப்போகிறது.
இந்த மோசமான சூழலுக்குத் தமிழ் இலக்கிய உலகம் முடிவு கட்ட வேண்டும். விருதுக்குரிய மதிப்பைத் தேர்வின் வழி உயர்த்த வேண்டும்!