

நோக்கு நூல்கள் ஒரு மொழியின் மேம்பட்ட நிலையை விளக்குவனவாக அமைவன. அந்த வகையில், மரபும் புதுமையும் என்னும் இந்நூல் நிகண்டுகள் குறித்தும் கணினிவழி நூலடைவு உருவாக்கம் குறித்தும் பல தகவல்களை உள்ளடக்கி, மொழியின் பழமையையும் வளர்ந்துவரும் அறிவியல் யுகத் திற்கு ஈடுகொடுக்கும் புதுமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நீரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகியவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலின் முதற்கண் அமைந்து மரபு சார்ந்த சொல்வளங்களை எடுத்துக்காட்டுகின்றன. இதனை அடுத்து, கணினிவழி நூலடைவு உருவாக்கம் குறித்த ஒரு விரிவான ஆய்வு இடம்பெற்றுள்ளது
அகராதிகளை அடுத்து மொழிவளத்தை அறியத் துணை செய்வன நிகண்டுகள். இவற்றுள் ஐந்திணைத் தாவரங்கள் பெயர்களைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ள ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு- திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டுகளிலிருந்து பல இடங்களில் வேறுபட்டும் சில இடங்களில் ஒன்றுபட்டும் அமைந்து பல புதிய சொற்களை உள்ளடக்கி உள்ளதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
நீரரர் நிகண்டு மக்களால் பயன்படுத்தப்பட்ட பழமையான சொற்களின் தொகுப்பாக விளங்குவதையும் இதன் உட்பிரிவு மஞ்சரி எனப் பெயரிடப்பட்டுள்ளதையும் இது உரையுடன் அமைந்துள்ளதை யும் போன்று பல கருத்துக்களை எடுத்துரைக்கிறது அடுத்த கட்டுரை.
சிந்தாமணி நிகண்டு ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் உரைப்பதாக அமைந்து மாணாக்கரது மதிமயக்கத்தைப் போக்குவதாக அமைந்துள்ளதையும் இதன் ஆசிரியரான வைத்தியலிங்கன் என்பவர் குறித்த பல கருத்துக் களையும் அடுத்த கட்டுரை விளக்குகிறது.
கணினிவழி நூலடைவு உருவாக்கம் என்னும் கட்டுரை இன்றைய ஆய்வு மாணாக்கருக்கு நூலடைவு குறித்த ஐயங்களைப் போக்கி அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.
நோக்குநூல்கள் அவசியத்தை உணர்த்தும் வகையில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இந்நூலை உருவாக்கி மொழியின் சிறப்பை எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.