

தமிழியல் திறனாய்வில் குறிப்பிடத்தக்க ஆளுமையான பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் பெயராலமைந்த ‘பஞ்சு பரிசில் 2022’ விருதுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் சார்ந்த திறனாய்வு நூல்களும் ஆய்வு நூல்களும் தேர்வுக்குரியன; படைப்பிலக்கிய நூல்கள் தேர்வுக்கு உரியவை அல்ல. தேர்வுக்கு அனுப்பும் நூல் 2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி வரையிலான காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இந்த விருது ரூ.10,000 பண முடிப்பும் பாராட்டுக் கேடயமும் அடங்கியது. மேலதிகத் தொடர்புக்கு: 94442 34511
தேவிபாரதியின் திரைப்படம்: எழுத்தாளர் தேவிபாரதியின் ‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’ செய்தித்தாள்களில் நாம் பார்க்கும் திருமணத்துக்கு வெளியிலான உறவு என்கிற பிரச்சினையை ஆழமாகக் கையாண்ட சிறுகதை. இயற்பியல் மாணவியான மனைவி, தன் காதலனுடன் இணைந்து தனது கணவனது உடலைக் கையாளும் கதை. காலத்தை முன்னும் பின்னுமாகத் திசைமாற்றி தேவிபாரதி அதை இலக்கியமாக்கியிருப்பார். இந்தக் கதையை இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா, ‘டெவில்’ என்னும் தலைப்பில் திரைப்படமாக இயக்கிவருகிறார். விதார்த்தும் பூர்ணாவும் முன்னணிக் கதாபாத்திரங்களாக நடித்துவருகிறார்கள்.
உறுபசி மலையாளத்தில் எழுத்தாளர்: எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ நாவல் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. லோகோஸ் பதிப்பகம் இதை வெளியிட அனுமதி வாங்கியுள்ளது. ஒரு நண்பனின் மரணத்திலிருந்து தொடங்கும் இந்நாவல், கல்லூரிக் காலத்தில் நாயகனாக அறியப்பட்டு, தோல்வியின் பள்ளத்தாக்கில் இறங்கிய ஒருவனின் கதையைச் சொல்கிறது.
பிறந்த நாள் வெளியீடு: செ.ராம்கி-நிவேஜிதா தம்பதியின் குழந்தையும் ‘பரிசல்’ சிவ.செந்தில்நாதனின் பேத்தியுமான ரா.இனியாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (4.12.2022, ஞாயிறு) அன்று, பரிசல் புத்தக நிலையம் சார்பாக ‘பரமார்த்த குருவின் கதை’, ‘நீலத் தாடிக்காரன்’ ஆகிய இரு நூல்கள் சென்னையில் வெளியிடப்படுகின்றன.
வேள்பாரியில் இளங்கோ கிருஷ்ணன்: கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், ‘பொன்னியின் செல்வன்’ படப் பாடல்கள் மூலம் பரவலாகக் கவனம் பெற்றுள்ளார். ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துவருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வேள்பாரியில் இளங்கோ பாடல் எழுதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘வேள்பாரி’ எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவல்.
‘இந்து தமிழ் திசை’ புத்தகத் திருவிழா: ‘இந்து தமிழ் திசை’யும் மதுரை புக்ஸ் அண்டு ஸ்டேஷனரியும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா டிசம்பர் 2 தொடங்கி 2023 ஜனவரி 2 வரை தல்லாகுளம் அம்பலக்காரர் மண்டபத்தில் (அழகர்கோயில் ரோடு அருகில்) நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 97864 96857