

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறு இது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் வீடடங்கியிருந்த காலத்தில், இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் அவருடைய மகன் பி.எஸ்.ராமன். இந்நூலின் மூலம் தன்னுடைய தந்தையை வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ளார். அரசியல், சட்டம் ஆகிய இரண்டு துறையின் மீதான ஈடுபாடும் தேடலுமே வி.பி.ராமனின் வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றன. அவரது சாதனைக்கும் ஏற்றத்துக்கும் அவையே அடித்தளமாகவும் இருந்தன என்பதை இந்நூல் உணர்த்துகிறது. முடிசூடா மன்னராக நீதிமன்றத்தில் கோலோச்சிய ராமனுக்கு அரசியலில் மகுடம் சூட்ட வாய்ப்பு கிடைத்தபோது அதை மறுத்துள்ளார்; திமுகவின் தொடக்கக் காலத்தில் துணையாக நின்ற வி.பி.ராமன், திராவிட நாடு கொள்கையில் மாறுபாடு காரணமாக திமுகவிலிருந்து 1961இல் வெளியேறினார்; இருந்தாலும் 1967இல் அண்ணாவுக்கும் ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடுசெய்து, கூட்டணிக்கு உதவினார் என்பன போன்ற தகவல்கள் அவரது கொள்கைப் பிடிப்பை உணர்த்துகின்றன. ஒரு வழக்கறிஞராக மட்டுமல்லாமல் அரசியல், சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்துத் தளங்களிலும் ராமன் திறம்பட இயங்கியுள்ளார். தனது அறிவாலும் புத்திக்கூர்மையாலும் தெளிவான பார்வையாலும் அவருடைய சமகாலத்துத் தலைவர்களின் பெருமதிப்பையும் அன்பையும் பெற்றிருந்த வி.பி.ராமனின் ஒட்டுமொத்த ஆளுமையும் இந்நூலில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. - ஹுசைன்
மகுடம் மறுத்த மன்னன்
பி.எஸ்.ராமன்
தமிழில்: கமலாலயன்
வெளியீடு: புக் வெஞ்சர்
(Book Venture)
தொடர்புக்கு: 044 28344512