ஒரு காலகட்டத்தின் இலக்கியப் பதிவு

ஒரு காலகட்டத்தின் இலக்கியப் பதிவு
Updated on
2 min read

இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த கடிதம் எழுதும் பழக்கம், இன்று அரிய ஒரு பண்பாடாக நினைவில் தேங்கிவிட்டது. தொலைத்தொடர்பு அறிவியல் வளர்ச்சி, அதையெல்லாம் மாய்த்துவிட்டது. இந்தப் பின்னணியில் பழைய கடிதங்களைப் புரட்டிப் பார்ப்பது, காலப் பயணம் செய்வதற்கு ஒப்பானது. அக்கடிதங்கள் தமிழகத்தில் இலக்கியவாதிகளுக்கு இடையிலானதாக இருந்தால் இன்னும் அழகானதாக இருக்கும். அப்படியான ஓர் உணர்வைத் தரும் கடிதங்களின் தொகுப்பு இது.

மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், மறைந்த விமர்சகர் தி.க.சிவசங்கரனுக்கு எழுதிய கடிதங்களை எழுத்தாளர் கழனியூரன் தொகுத்து வெளியிட்ட நூல் இது. 1979 தொடங்கி 1997 வரை தி.க.சிக்கு வ.க. தொடர்ந்து எழுதியிருக்கிறார். இடைப்பட்ட இந்தக் காலத்தின் இலக்கிய நிகழ்வுகள் பலவற்றுக்கும் சாட்சியங்களாக இந்தக் கடிதங்கள் இருக்கின்றன. இந்தக் கடிதம்வழி, வ.க.வின் ஆளுமைச் சித்திரம் நல்ல துலக்கம் பெறுகிறது. புனைவுக்கு ஒத்த லட்சணங்களும் இந்தக் கடிதங்களுக்கு உண்டு. வ.க.வின் நாடோடி வாழ்க்கையும் மறைமுகமாகப் பதிவாகியிருக்கிறது.

இலக்கியம் மட்டுமல்ல, திட்டமில்லாமல் ஓடும் மனக்காட்சிகளும் தி.க.சி. என்கிற நண்பரிடம் வ.க. பகிர்ந்திருக்கிறார். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலின் முன்பதிவு இருக்கையில் செங்கல்பட்டுக்காரர்கள் ஏறி செளகரியமாக அமர்ந்துகொள்வது பற்றி எழுதியிருக்கிறார். நெல்லையில் காப்பி குடித்த கதை, சென்னையில் காப்பி விலை, இங்கு காப்பி என்ன விலை, தாமிரபரணி குளியல் போட்ட கதை எனப் பேச்சாக விரிகிறது கடிதம். அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்துக்கான 10 மணி பஸ்ஸில் கூட்டம் என்பதால் அதை விட்டுவிடுகிறார்.

10:30 பஸ்ஸிலும் கூட்டம். அரை மணி நேரத்தில் அடுத்த பஸ்ஸில் இடம் கிடைக்கிறது. இதில் தி.க.சியின் மகனும் எழுத்தாளருமான வண்ணதாசனிடம் வண்ணநிலவன் பற்றிப் பேசியதை எழுதியிருக்கிறார். அவரது ‘கம்பா நதி’ குறித்த வண்ணதாசன் அபிப்ராயத்தைப் பதிவுசெய்திருக்கிறார். வண்ணநிலவனின் சென்னைச் சூழல், அவர் நெல்லை திரும்ப விரும்பியது எனப் பல விஷயங்கள் வந்துபோகின்றன.

போகிற ஊரில் இருந்தபடியே தன் ‘அன்புச் சகோதர’னாகிய தி.க.சிக்கு வ.க. கடிதம் எழுதியிருக்கிறார். ராஜவல்லிபுரம், திருச்சி, துறையூர், நத்தம் கோவில்பட்டி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர், சென்னை என நீள்கிறது. கடிதங்களில் தான் தங்கியிருக்கும் ஊர், அதன் இயற்கை, சமூகச் சூழல்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். உதாரணமான நத்தம் கோவில்பட்டியில் தாலுக்கா அலுவலகம், சப்-ட்ரெஷரி என எல்லாம் இருக்கிறது எனப் பட்டியலிட்டுவிட்டு, என்றாலும் இது கிராமம்தான் என்கிறார். கண் வலிக்காவது ஒரு பெண்ணையும் இந்த ஊரில் காணவில்லை எனக் கேலியாக எழுதியிருக்கிறார்.

அந்தக் குறை உடுமலைப்பேட்டையில் போனதாக வேறொரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படைப்புகள் பற்றிய வ.க.வின் நேர்மையான அபிப்ராயங்களும் இதில் உள்ளன. மா.அரங்கநாதனின் ‘வீடுபேறு’ கதையை, ‘அசோகமித்திரன் புகழும் அளவுக்கு இல்லை’ எனச் சொல்லியிருக்கிறார். தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பற்றிய ராஜம் கிருஷ்ணனின் ‘கூட்டுக் குஞ்சுகள்’ நாவல் ‘சுமார் ரகம்’ என விமர்சித்திருக்கிறார்.

எழுத்தாளர் வையவனின் ‘தீக்குளிக்காத விட்டில்கள்’ குறித்துப் பாராட்டி எழுதியிருக்கிறார். அதுபோல் திரைப்படங்கள் குறித்த அவர் பார்வையையும் இதன்வழி அறிய முடிகிறது. தமிழின் மாற்று சினிமா முயற்சிக்காகக் கொண்டாடப்படும் ‘பசி’ படம் நல் அனுபவமாக இருந்ததாகச் சொல்லும் வ.க., அதில் தமிழ் சினிமா அபத்தங்களும் உண்டு என்கிறார். ‘சங்கராபரணம்’ படத்தையும் கலை பாதி, வணிகம் பாதி என விமர்சிக்கிறார்.

‘தீபம்’ இதழ் விரைவில் நிற்கவிருக்கும் தகவலும் இதில் வருகிறது. அசோகமித்திரனுக்கும் நீல பத்மநாபனுக்கும் இடையிலான மோதல்களும் வருகின்றன. இந்தக் கடிதங்களின் வழி இப்படி ஒரு காலகட்டம் பல பரிமாணங்களுடன் பதிவாகியுள்ளது. - ஜெயகுமார், தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in