நூல் வெளி: திருக்குறள் ஆய்வுகளில் புதிய திருப்பம்

நூல் வெளி: திருக்குறள் ஆய்வுகளில் புதிய திருப்பம்
Updated on
2 min read

திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை 1886இல் ஜி.யூ.போப் வெளியிட்டார். அதற்குப் பின்னிணைப்பாக 75 பக்கங்களில் ‘Concordance and Lexicon of the Kural and Naladiyar’ என்பதையும் சேர்த்தார். 1,330 குறட்பாக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் பட்டியல் அதனுள் அடங்கும். அச்சொற்களின் இலக்கணக் கூறுகள், முன்னும் பின்னும் வரும் சொல் ஒட்டுகள் (affixes), ஓரிரு கூட்டாளி-சொற்கள் மற்றும் குறுகிய சொற்பொருள்கள் ஆகியவற்றை அப்பட்டியல் மையப்படுத்துகிறது.

வள்ளுவர் கையாண்ட தமிழ்மொழி சார்ந்த துல்லியமான தகவல்களைத் தரும் அப்பகுதியைத் திருக்குறளின் முதல் தமிழ்ச் சொல்லடைவு நூல் என்று கருதலாம். போப் தொடங்கிவைத்த பாரம்பரியத்தின் வழியில் வேலாயுதம் பிள்ளை (1954), ந.சி.கந்தையா பிள்ளை (1961), இந்தோலஜி பிரஞ்சு மையம் (1967), செல்லமுத்து & பாஸ்கரன் (1986), பாண்டியராஜா (2014), தமிழ் இணையக் கல்விக் கழகம் எனப் பல பெயர்களில் திருக்குறள் சொல்லடைவு நூல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால், ‘திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை’ மேலே விவரித்த தமிழ்ச் சொல்லடைவுப் பாரம்பரியத்தின் இன்னொரு நீட்சியாக இல்லை. திருக்குறளை அக்காலத்திய ஒரு மொழி ஆவணமாக அது அணுகவில்லை. குறுந்தொகைக்கு உரை எழுதிய உ.வே.சா-வின் முன்சேர்க்கைகளுள் ஒன்றாகிய ‘நூலாராய்ச்சி’ என்ற பகுதியில், அவர் சங்க கால வாழ்வியல் செய்திகள் பலவற்றைத் (சிறு குறிப்புகளோடு) தந்துள்ளார்.

திருக்குறள் பகுப்பாய்வுக் கோவையின் நூலாசிரியரோ வள்ளுவர் காலத்து வாழ்வியல் கூறுகள் பலவற்றை அட்டவணைப் பெட்டிகளில் வகைமைப்படுத்துகிறார். பெட்டிகளின் கீழே ஒவ்வொரு கூறும் இடம்பெறும் குறட்பாக்களின் எண்களைத் தருவதோடு முழுப் பாக்களையும் வரிசையாகத் தந்திருக்கிறார். நூலில் செறிவுமிகுந்த வேறொரு பகுதியையும் நாம் காண முடிகிறது.

1,330 குறட்பாக்களிலும் வள்ளுவர் கையாண்டுள்ள அனைத்துலகுக்கும் பொருந்தும் அறம்சார் கருப்பொருள்களை, கருத்தாக்கங்களை மையப்படுத்தி அது அகழாய்வு செய்கிறது. அட்டவணைப் பெட்டிகளுக்குள் பாக்களின் எண்களோடு பல வகைமைகளில் தருகிறது. முழுப் பாக்களையும் கீழே வரிசையாகத் தருகிறது. இது ஒரு தனிப்பகுதியாகத் தரப்படவில்லை என்றாலும் ஒரு புதிய திருப்பத்துடன், புதிய திசையில் இது பயணிப்பதை நம்மால் உணர முடிகிறது. இப்பகுதியை இன்னொரு சொல்லடைவு எனச் சொல்லிக் கடந்துசென்றுவிட முடியாது.

மாறாக, இதை ஒரு திருக்குறள் கருப்பொருள்/கருத்தாக்க அடைவு (Thematic concordance to Thirukkural) அல்லது தலைப்புசார் திருக்குறள் (Topical Thirukkural) என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, அறிவு என்ற பதிவுக்கு இந்நூல் தந்துள்ள கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் தகவல்கள் அறிவு வாயில்கள் என்ற முதன்மைத் தலைப்பின் கீழ் பதினேழு துணைத் தலைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. அவையாவன, இறைமையைக் காணும் அறிவு: 357, உண்மைப் பொருள் காணும் அறிவு: 423, காக்கும் கருவியாகி நிற்கும் அறிவு: 421, களவோடும் பிறவோடும் பொருந்திய அறிவு: 175, 287, 846 இன்னபிற.

அதாவது, நூலாசிரியரின் பார்வையில் அறிவு என்ற வள்ளுவக் கருத்தாக்கம் பதினேழு-முகப் பரிமாணம் கொண்டு விரிகிறது. ஒவ்வொரு முகத்தையும் உய்த்துணரப் பதினேழு வாயில்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வேண்டியவர், வேண்டியவற்றை வேண்டியபடி பெற, செல்ல வேண்டிய வாயில்கள் வழியே நுழைந்து, பயணித்து, வேண்டிய இலக்குகளை அடையலாம்.

இவ்வாறு பல கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் அடைவுகள் இந்நூலில் நீள்கின்றன. இவை அனைத்தும் மொழிக்கூறுகள்சார் சொல்லடைவுகளைவிட மேலதிகக் கடும் உழைப்பையும் கூரிய சிந்தனைத் திறத்தையும் ஆழமான நினைவாற்றலையும் கொண்டு உருவானவை. திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை போன்ற கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் அடைவுகள் வேறு தமிழ் அல்லது ஆங்கில இலக்கியப் படைப்பாக்கங்களுள் எதற்கும் உள்ளனவா என இணையத்தில் தேடிப் பார்த்ததில் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இவ்வகையில் திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை ஒரு புதிய முயற்சி மட்டுமல்லாமல், ஒரு புதிய திருப்பத்தின் தொடக்கமுமாகும். பற்பல புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டும் இந்நூல், திருக்குறள் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இன்றியமையாத் துணைநூலாக, சிந்தனைத் தூண்டிலாகத் திகழ்கிறது என்று சொல்வது உயர்வு நவிற்சியாகாது. - கே.தியாகராஜன்
பேராசிரியர், தொடர்புக்கு: raajan.kt@gmail.com

திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை
மு.பழநிச்சாமி
பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகம், புது டெல்லி
விலை: ரூ.400, தொடர்புக்கு: 9911345252

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in