Published : 17 Dec 2016 11:22 AM
Last Updated : 17 Dec 2016 11:22 AM

நூல் நோக்கு: கவிதைத் திண்ணை

லாகிரி
நரன்
விலை: ரூ. 75
வெளியீடு: சால்ட், சென்னை-24.
89394 09893

‘உப்பு நீர் முதலை’, ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரை கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை அடுத்து நரேன் வெளியிட்டிருக்கும் தொகுப்பு ‘லாகிரி’. சமகால அரசியலை, சமகால வாழ்வின் அரசியலை ஐரோப்பிய கவிதைகள் பாணியில் உக்கிரமாகப் பேசும் கவிதைகள் இவை. என்கவுன்ட்டர், சிசிடிவி கேமரா, பூர்விகக் குடிகள் மீதான சுரண்டல் என்று நமது சமகால வாழ்வின் மரத்துப்போன குற்றவுணர்ச்சியைப் பற்றிப் பேசுகின்றன இந்தக் கவிதைகள். தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:

நம்பு. இந்த எல்லையை நான் கிழிக்கவில்லை

எல்லையைத் தாண்டி நிற்கும் உனக்கும் எனக்கும்

எந்தப் பிணக்குமில்லை

எதிரில் நிற்பதனாலேயே

உன்னை எதிரி என அழைக்க ஒப்பவில்லை

என் எதிரில் உன்னை நிற்க வைத்தவன் நானில்லை

நண்பனே. அவர்கள் ஒருபோதும் களத்திலில்லை

எல்லையில் நம்மை நிற்க வைத்துவிட்டு

அவர்கள் உள்நாட்டில் பூர்வீகக் குடிகளிடமிருந்து

நிலங்களை பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சிறுவயதில் சொந்த ஊரின் மண்ணை அள்ளி

தின்றிருக்கிறாயா?

அவ்வளவு ருசி.

சூளைக்காரா…

என் நிலம் பிடுங்கப்படுமென தெரிந்தால்

இன்னும் நிறைய அள்ளி அள்ளித் தின்றிருப்பேன்

இப்போது கூட பார்,

மதிய உணவுக்கு என் நிலத்திலிருந்து வேக வைக்கப்பட்ட

மூன்று செங்கற்களை வைத்திருக்கிறேன்.



மனவுலகப் பயணி ஃப்ராய்ட்

பிராய்ட்
ஜோனத்தன் லியர்
தமிழில்: ச. வின்சென்ட்
விலை ரூ.250
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி 642002.
98650 05084

“மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது” என்று கூறுகிறார் ஃபிராய்ட்.

சிசுவுக்குத் தான் வேறு, அம்மா வேறு என்ற தெளிவு, பிறந்தவுடன் வந்திருக்காது என்கிறார் ஃப்ராய்டு. தாயின் கருவிலிருந்து வெளியே வந்த குழந்தைக்கு ‘உள்ளே’, ‘வெளியே’ என்ற குழப்பம் நீடிக்கும். பால் குடிக்கும் அனுபவம், ஓய்வு (தூக்கம்), அம்மாவிடமிருந்து பிரிதல் என்பதன் மூலமே தான் வேறு, தாய் வேறு என்று அறிகிறது என்பது ஃப்ராய்டின் விளக்கம். “முதலில் மேல் அடிமனம் அனைத்து மனத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அவை பின்னர் வெளி உலகத்தைத் தன்னிடமிருந்து பிரித்துக்கொள்கிறது” என்று ஃப்ராய்டின் விளக்கத்தை நூலாசிரியர் ஜோனத்தன் லியர் நமக்குத் தருகிறார். எளிமையாகவும் சுவையாகவும் இந்த உளவியல் நூலை ச.வின்சென்ட் மொழிபெயர்த்திருக்கிறார்.

- சாரி



சிங்கப்பூரின் நாயகன்

லீ குவான் யூ - சிங்கப்பூரின் சிற்பி
எஸ்.எல்.வி. மூர்த்தி
விலை: ரூ. 250
கிழக்குப் பதிப்பகம், சென்னை - 14.
044-42009603

லீ குவான் யூ - சிங்கப்பூர் என்ற தேசத்தை கட்டியெழுப்பிய மேதை. குடிசைகளும் நோய்களும் திருட்டுகளும் குற்றங்களும் மலிந்து கிடந்த சிங்கப்பூரை உலகத்துக்கே முன் மாதியாக லீ குவான் யூ எப்படி கட்டியெழுப்பினார் என்பதை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறது எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய ‘லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி’ நூல். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர் காட்டிய ஈடு இணையில்லாத ஈடுபாட்டை நூல் முழுவதும் ஆசிரியர் படர விட்டிருப்பது அழகு.

33 அத்தியாயங்களாக விரிந்திருக்கும் இந்த நூல், சிங்கப்பூரில் நிலவிய பிரச்சினைகளையும் அதை லீ குவான் யூ கையாண்ட விதத்தையுமே பேசுகிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் சிங்கப்பூர் பற்றிய சில வரி உண்மைத் தகவல்கள் நூலின் தரத்தைக் கூட்டுகின்றன. ஒரு நாடு வளமாகவும், வலுவாகவும் உருவாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உந்துகோலாக இந்த நூல் இருக்கும் என்பது நிதர்சனம்.

- மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x