Published : 06 Dec 2016 10:52 AM
Last Updated : 06 Dec 2016 10:52 AM

கடவுளின் நாக்கு 22: மரத்தில் காய்க்கும் அரிசி!

சாமானியர்களின் புத்திசாலித் தனத்தைப் பற்றியும் அரசர் களின் முட்டாள்தனத்தைக் குறித்தும் உலகெங்கும் நிறைய கதை கள் உள்ளன.

மக்கள் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு பதிலா கவே கதையாக, பாடலாக உருமாற்றி சொல்கிறார்கள். கதை கேட்கும் மக் களுக்கு யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். ஆகவே, அதை உணர்ந்து சிரிப்பார்கள்.

அப்படி கர்நாடக மாநிலத்தில் சொல்லப்படும் ஒரு கதையைப் படித்தபோது வாய்விட்டுச் சிரித்தேன். மிகச் சிறந்த அரசியல் நையாண்டி கதை அது. வாய்மொழிக் கதைகளின் சிறப்பு கதையை நினைத்து நினைத்துச் சிரிக்க செய்யும் தன்மைக்கொண்டதாகும். இந்தக் கதையும் அது போன்றதே.

ஒருநாள் காட்டில் உள்ள குரங்குகள் யாவும் ஒன்றுசேர்ந்து உலக நன்மைக்காக ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்துகொண்டன. உடனே, தலைவராக இருந்த கிழட்டுக் குரங்கு சொன்னது: ‘‘உண்ணாவிரதம் தொடங்கு வதற்கு முன்பு நமக்குத் தேவையான உணவை சேகரித்துக் கொண்டுவந்து வைத்துக்கொள்வோம். உண்ணாவிரதம் முடியும்போது அலைந்து உணவு தேட தெம்பு இருக்காது!’’

‘‘நல்ல யோசனை..!’’ என குரங்குகள் ஆமோதித்தன. உடனே காட்டில் இருந்த வாழைப் பழங்கள் அத்தனையையும் பிடுங்கிக் கொண்டுவந்தன.

உடனே கிழட்டுக் குரங்கு சொன்னது: ‘‘உண்ணாவிரதம் முடியும்போது நாம் மிகவும் பசியோடு இருப்போம். ஆகவே, இப்போதே அவரவருக்கு உரியதைப் பகிர்ந்துகொள்வோம்!’’

மறுநிமிஷம் அத்தனை குரங்குகளும் வாழைப் பழங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டன.

மீண்டும் கிழட்டுக் குரங்கு சொன்னது: ‘‘உண்ணாவிரதம் முடியும்போது வாழைப் பழத் தோலை உரிக்க உடம் பில் தெம்பு இருக்காது. எனவே, இப் போதே பழத்தை உரித்து வைத்துக் கொள்வது நல்லது!’’

அதைக் கேட்ட குரங்குகள் நல்ல யோசனை என்று வாழைப் பழத் தோலை உரித்து வைத்துக்கொண்டன.

பலத்த யோசனைக்குப் பிறகு கிழட் டுக் குரங்கு சொன்னது: ‘‘உரித்த வாழைப் பழத்தை நாம் வாயில் வைத்துக் கொண்டுவிடலாம். அப்படியானால் உண்ணாவிரதம் முடிந்தவுடனே சாப்பிட எளிதாக இருக்கும் அல்லவா!’’

உடனே, எல்லாக் குரங்குகளும் உரித்த வாழைப் பழங்களை வாயில் திணித்துக் கொண்டன.

கிழட்டுக் குரங்கு கடைசியில் சொன் னது: ‘‘முன்கூட்டியே வாழைப் பழத்தை விழுங்கிவிட்டால் உண்ணாவிரதம் இருக் கும்போது தெம்பாக இருக்கும். எப்படி என் யோசனை?’’

மகத்தான யோசனை என்று சொல்லி விட்டு எல்லாக் குரங்குகளும் வாழைப் பழங்களைத் தின்றுவிட்டு, வெற்றி கரமாக தனது உண்ணாவிரத்தைத் தொடங்கின.

காட்டில் மட்டுமில்லை, நாட்டிலும் கூட இதுபோன்ற கேலிக் கூத்துகள் நடக் கவே செய்கின்றன. அரசியல் காரணங் களுக்காக உண்ணாவிரதம் இருப்பது வேறு; எந்த நாட்டைவிடவும் இந்தியாவில் தான் இந்தக் கேலிக் கூத்துகள் அதிகம். வெள்ளைக்காரர்களுக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரதம் முதல், ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்த ஐரோம் ஷர்மிளா வரை எத்தனையோ வலிமையான உண்ணா விரதங்களை இந்தியா கண்டு உள்ளது.

ஐரீஷ்காரர்கள்தான் உண்ணாவிர தத்தை எதிர்ப்பு அடையாளமாக மாற்றி யவர்கள். அதிகாரத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதை முதன் முதலாகத் தொடங்கியது ரஷ்யா. சைபீரியாவில் உள்ள சிறைச்சாலை யில் பெண் கைதிகள் கொடுமைப் படுத்தப்படுவதை எதிர்த்து 1888-ம் ஆண்டு கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அந்த உண்ணாவிரதத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. உண்ணாவிரதம் இருந்த ஆறு கைதிகள் இறந்துபோனதால் போராட்டம் வலிமை அடைந்தது. அதைத் தொடர்ந்து, கைதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சிறை அதிகாரியை இடமாற்றம் செய்ததோடு, அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்தது. இங்கிலாந்திலும் முதல் உண்ணாவிரதம் இருந்தவர் ஓர் பெண் கைதியே!

இந்தியாவில் உண்ணாவிரதத்தைப் போராட்ட முறையாக்கி வெற்றிபெற்ற பகத்சிங், தன்னுடைய சிறை வாழ்வில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந் திருக்கிறார். மகாத்மா காந்தி, தன்னுடைய பொதுவாழ்வில் மொத்தம் 17 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். வன்முறைக்கு எதிராகவும். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் தீண்டாமை கொடுமையைப் போக்குவதற்காகவும் மதக் கலவரத்தை தடுக்கவும் காந்தி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அஹிம்சை போராட்டத்தில் முக்கிய அம்சமாக இருந்தது உண்ணாநோன்பே!

தமிழ்நாட்டுக்கு அப்பெயர் சூட்டப் படுவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார் சங்கரலிங்கனார். எத்தனை கல்வி நிலையங்களில் அவரது உருவப்படம் மாட்டப்பட்டிருக்கிறது சொல்லுங்கள்?

வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலத்தில் இங்கிலாந்துக்கு இந்திய மந்திரி ஒருவர் சென்றிருந்தார். அவரிடம் அந்த நாட்டு மகாராணி ‘‘உங்கள் நாட்டில் அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது?’’ என்று கேட்டார். மகாராணிக்கு நெல்லைப் பற்றி எதுவும் தெரியாது.

இந்திய மந்திரியோ ஒருநாளும் வயல்வெளி பக்கம் எட்டிக்கூடப் பார்த்தவரில்லை. ஆகவே, விசாரித்து பதில் எழுதுவதாகச் சொல்லி இந்தியா திரும்பினார். வந்தவுடன் கவர்னருக்கு இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியாக ஆணையிட்டார். கவர்னரும் வெள்ளைக்காரர். ஆகவே, அவருக்கும் பதில் தெரியவில்லை. விரைந்து நடவடிக்கை எடுத்து உண்மை அறிக்கை தாக்கல் செய்யும்படி அவர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

கலெக்டர் அவசரக் கடிதத்தைக் கண்டு உடனே உண்மையைக் கண்டறிந்து பதில் எழுதும்படி ரெவின்யூ இன்ஸ் பெக்டருக்கு அனுப்பி வைத்தார். ரெவின்யூ அதிகாரிக்கு வயல் இருந்தது. ஆனால், கவர்னர் எந்த மரத்தில் அரிசி காய்க்கிறது என்று கேட்கிறார் என்றால், நிச்சயம் அப்படி அரிசி காய்க்கும் மரம் ஒன்று இருக்கக்கூடும். நாம் முட்டாள்தனமாக பதில் எழுதி விடக்கூடாது என முடிவு செய்து உண்மையைக் கண்டறிந்து, உடனே தகவல் அனுப்பும்படி தலையாரி ஒருவருக்குக் கடிதம் அனுப்பி வைத்தார்

தலையாரியோ குடிகாரன். அவன் கடிதத்தைப் படித்து முடித்தவுடன் என்ன முட்டாள்தனமான கேள்வி என நினைத்தான். ஆனால், அரசாங்க காரியம். பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து, தான் கள் குடித்துக் கொண்டிருந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அது பனைமரம். உடனே, அரிசி பனைமரத்தில் காய்க்கிறது என பதில் எழுதி அனுப்பி வைத்தான். அந்த பதில், உடனே கலெக்டர் மூலம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை மந்திரிக்கு அனுப்பி வைத்தார். உடனே இங்கிலாந்துக்கு இந்த விவரம் தந்தியில் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் மகாராணி ‘இந்தியாவில் பனை மரத்தில் அரிசி விளைகிறது’ என்று அறிவிப்பு செய்தார் என்று கேலியாக சொல்கிறது தமிழக நாட்டுப்புறக் கதை ஒன்று. இதன் பல்வேறு வடிவங் கள் புழக்கத்தில் உள்ளன. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களும் இது போன்ற கதை ஒன்றை தொகுத்திருக் கிறார்

மக்கள் தங்களை ஆள்பவர்கள் மீதும். அரசியல் செயல்பாடுகளின் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையைத் தான் இந்த இரண்டு கதைகளும் அடையாளப்படுத்துகின்றன. இக்கதை களைக் கேட்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் முடிவில் உண்மை சுடவே செய்கிறது. அதுதான் இவை காலம் கடந்து நிற்கும் கதைகள் என்பதற்கான சான்று!

இணையவாசல்: >இந்திய நாட்டுப்புறக் கதைகளை அறிந்துகொள்ள

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x