Published : 29 Nov 2016 09:42 AM
Last Updated : 29 Nov 2016 09:42 AM

கடவுளின் நாக்கு 21: தண்டனை மட்டுமா தீர்வு!

ஒருவர் ஏதோவொரு தப்புச் செய்துவிட்டார் எனத் தண்டிக்கப்படும்போது அதே தப்பை திரும்பச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே தண்டனை தருவதின் நோக்கம். ஆனால், பெரும்பான்மை மனிதர்கள் அதை உணர்வதே இல்லை.

தப்பு என்பது அறிந்து செய்கிற செயல். அதைத் தொடர்ந்து செய்வதன் வழியே தப்பை நியாயப்படுத்தவே முயற்சிக்கிறோம்.

‘எதுவுமே தப்பில்லை என்ற எண்ணம் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இது அபாயகரமான பிரச்சினை. முரட்டுதோல் கொண்ட உயிரினங்களுக்கு ஊசிவைத்து குத்தினாலும் வலிக்காது. அப்படித்தான் இன்றைய மனிதர்களும் மாறிவருகிறார்கள். ’சூடு சொரணையில்லையா...’ எனக் கிராமப்புறத்தில் கேட்பார்கள். இன்று அந்தச் சொற்கள் வழக்கொழிந்துபோய்விட்டன.

கல்விக் கடன் வாங்குவதற்காக வருவாய் சான்றிதழ் கேட்டதற்கு ஒரு அரசு அலுவலர் லஞ்சம் கேட்கிறார் என்று ஒரு மாணவன் பேருந்தில் ஏறிப் பிச்சை எடுத்திருக்கிறான். அவன் கையில் ‘லஞ்சம் கொடுக்கப் பத்தாயிரம் தேவைப்படுகிறது. உதவி செய்யுங்கள்’ என்ற அறிவிப்புப் பலகை இருந்தது என ஒரு நண்பர் சொன்னார்

“பேருந்தில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்..?’’ எனக் கேட்டேன்.

‘‘சிலர் சிரித்தார்கள். சிலர் செல்போனில் போட்டோ எடுத்தார்கள். சிலர் பத்து, இருபது ரூபாய் பணம் கொடுத்தார்கள். ஆனால் ஒருவரும் ‘யார் லஞ்சம் கேட்ட ஆள்..?’ எனக் கோபம் கொள்ளவேயில்லை’’ என்றார் நண்பர்.

இதுதான் பொதுபுத்தியின் அடையாளம். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுப் போகப் பழகிவிட்டார்கள். தனது தவற்றை உணரவோ, அதில் இருந்து விடுபடவோ, மோசடிகளுக்கு எதிராகப் போராடவோ நாம் தயாராகவே இல்லை.

பின்லாந்து நாட்டுப்புறக் கதை ஒன்றிருக்கிறது. அதில், ஒரு திருட்டு நரி வருகிறது. அந்த நரி எதையும் திருடிச் சாப்பிடக்கூடியது. யாராவது பிடிக்க முயன்றால் ‘திருடுவது என் உரிமை’ என்று வீறாப்பு பேசியது.

ஒரு நாள் அந்த நரி, மாடு வளர்க்கும் ஒருவர் வைத்திருந்த பாலைக் குடித்துவிட்டது. உடனே அவர் பாய்ந்து வந்து, அதன் வாலை அறுத்துவிட்டார். வால் இல்லாத நரி காட்டுக்குள் ஓடியது. அங்கே எல்லா விலங்குகளும் அதை ‘வால் அறுந்த நரி’ எனக் கேலி செய்தன.

‘சே... இப்படி மாட்டுக்காரர் தன்னை அவமானப்படுத்தி விட்டாரே. அவரிடம் எப்படியாவது பேசி, அறுந்த வாலை வாங்கிக் கொண்டுவந்தால் ஒட்டவைத்துவிடலாமே..!’ என நரி நினைத்தது. இதனால் அவர் வீட்டுக்குத் திரும்பிப் போனது.

அவர் மாடுகளுக்குப் புல்வெட்டிக் கொண்டிருந்தார்.

“என் தவறை உணர்ந்துவிட்டேன். என் வாலை திருப்பிக் கொடுத்துவிடு..!” என்றது நரி.

“அப்படியானால், ஒரு குவளைப் பாலைத் திருப்பி ஈடாகக் கொடு... தருகிறேன்” என்றார் மாட்டுக்காரர்.

உடனே, அந்த நரி பசுவிடம் போய் “பசுவே, பசுவே... என் வாலை மாட்டுக்காரர் துண்டித்துவிட்டார். ஒரு குவளைப் பால் கொடு. இதைக் கொடுத்துவிட்டு... அதைத் திருப்பி வாங்கிவிடுகிறேன்!” என்றது.

அதைக் கேட்ட பசுமாடு, “நல்லது. நீ திருந்திவிட்டாய் என்பது எனக்கு சந்தோஷம் தருகிறது. ஒரு குவளைப் பால் வேண்டுமானால் ஈடாக ஒரு கட்டுப் புல் கொண்டுவா!” என்றது.

உடனே, அந்த நரி புல்வெளியை நோக்கிப் போனது.

“புல்லே... புல்லே. என் அறுந்த வாலை மீட்க, ஒரு கட்டுப் புல் தேவைப்படுகிறது. அறுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டது.

அதற்குப் புல் சந்தோஷமாக, “அறுத்துக் கொள். ஆனால், அதற்கு முன்பு ஒரு வாளி தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி, என் தாகத்தைத் தீர்த்துவிடு. பிறகு அறுக்கலாம்” என்றது.

உடனே நரி, ஆற்றிடம் போய்த் தன் கோரிக்கையை வைத்தது. உடனே ஆறு, “நீ திருந்த வேண்டும் என்பதுதான் முக்கியம். ஒரு வாளி தண்ணீர் தருகிறேன். அதன் முன்பு என் கரையில் உள்ள மண் உடைந்துபோய்விட்டது. ஒரு மூட்டை மண் போட்டு கரையைச் சரி செய்துவிடு, தண்ணீர் தருகிறேன்” என்றது.

உடனே நரி மண்மேட்டுக்குப் போய்த் தனது நிலையை எடுத்துச் சொன்னது. அதற்கு மண், “நல்ல காரியம்; நிச்சயம் தருகிறேன். ஆனால், அதற்கு முன்பு நீ ஒரேயொரு விதையை நட்டு வைத்து, அதைச் செடியாக்கிக் காட்டு. உடனே ஒரு மூட்டை மண் அள்ளிக்கொண்டு போக அனுமதிக்கிறேன்” என்றது.

‘இவ்வளவுதானா..!’ என நரி உடனே ஒரு விதையை மண்ணில் புதைத்துவிட்டு, அது எப்போது முளைக்கும் எனக் காத்திருந்தது. மழை பெய்து, தானாக விதை முளைக் கும் வரை நரி காத்துக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. பின்பு விதை சிறு செடியாவதற்கு ஒரு மாதமானது.

‘ஒரு சிறுசெடி முளைப்பதற்கே இவ்வளவு காலமாகிறதே. எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதை உணராமல் நாம் அடுத்தவர் பொருளைத் திருடித் தின்கிறோமோ. அது அவர்களுக்கு எவ்வளவு துன்பத்தைத் தரும்..?’ என நரி கவலைப்பட்டது.

உடனே நரி மண்ணிடம் சென்று, “என் தவற்றை உணர்ந்து கொண்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடு...” என்றது. அது போலவே, தண்ணீரிடமும் புல்லிடமும் பசுவிடமும் மாடு வளர்ப்பவரிடமும் சென்று, “நீங்கள் மற்றவர்களுக்காக வாழ்கிறீர்கள். என் தவற்றை உணர்ந்துகொண்டேன்” என்று மன்னிப்பு கேட்டது.

உடனே மாடு வளர்ப்பவர் அறுந்த வாலை நரியிடமே திரும்பக் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த நரி வாலை வாங்கிக் கொள்ளவில்லை. ‘இப்படியே வால் அறுந்த நரியாக இருந்துவிடுகிறேன். என்னைப் பார்த்து மற்ற நரிகள் திருந்தட்டும்...’ என்றது.

கதையில் வரும் நரியாவது தன்னை உணர்ந்துகொண்டு முடிவில் திருந்துகிறது. ஆனால் தவறு செய்து தண்டிக்கப்பட்ட மனிதர்களில் எத்தனை பேர் திருந்தியிருக்கிறார்கள்? நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கூட அதிகாரமிக்கவர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் தவறைத் தட்டிக் கேட்பவர்களின் குரல்வளையோ எப் போதும் அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிறது. எதற்கும் தண்டனை மட்டும் தீர்வு இல்லை. தன்னை உணர்ந்து மாறுவதே சரியான வழி!

கதைகள் எப்போதும் நம் மனசாட்சியின் குரலை எதிரொலிப்பவை. நிகழ்காலம் சில விஷயங்களில் கண்மூடி இருக்கலாம். அதற்காகத் தவறுகள் ஒரு போதும் நியாயமானவையில்லை. என்றோ, எங்கோ சொல்லப்பட்ட ஒரு கதை உண்மையின் ஒளியோடு விளங்குவதால்தான் இன்றைக்கும் உலகம் அதைக் கொண்டாடுகிறது. திரும்பச் சொல்லுகிறது!

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

இணையவாசல்: >பின்லாந்து நாட்டுப்புறக் கதைகளை அறிந்துகொள்ள

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x