

'அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பல்ல புத்தகங்கள். அவை நேற்றின் வரலாற்றை, இன்றைய நிகழ்வை, நாளைய தலை முறைக்குக் கொண்டுசேர்க்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்' என்பார்கள். அப்படிப்பட்ட வரலாற்றுப் புதையல்களான புத்தகங்களை வெளியிட்டு, சமூகத்துக்கான அறிவுப் பரவலைச் செய்துவரும் பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் நிலை மோசமாகிக்கொண்டே வருவது குறித்து யாரும் கண்டுகொண்டதாகக்கூடத் தெரியவில்லை.
சென்ற ஆண்டில் சென்னையைச் சூழ்ந்த மழை வெள்ளம், பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்களைச் சேதப்படுத்தியது. இதிலிருந்து மீண்டுவர முடியாமல் இன்னமும் பதிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றது. வெள்ளத்தின் பாதிப்பால் விழுந்து கிடந்த பதிப்பாளர்கள் மெல்ல எழுந்துவர, இந்தப் புத்தகக் காட்சி விற்பனை ஓரளவுக்குக் கைகொடுத்து உதவியது.
வரும் ஆண்டுக்கான புத்தகக் காட்சி பற்றிய திட்டமிடல் தொடங்கும் வேளையில், மத்திய அரசு கடந்த நவம்பர் 8 அன்று புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தது. இந்த அறிவிப்பால் புத்தக விற்பனை மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, வழக்கமான புத்தக விற்பனையில் தற்போது வெறும் 20 சதவீதம்கூட இல்லை என்கிறார்கள் புத்தகக் கடைக்காரர்கள். கோவை, மதுரை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் இதையேதான் எல்லா விற்பனையாளர்களும் ஒரே குரலில் சொல்கிறார்கள். பபாசி 40-வது சென்னை புத்தகக் காட்சிக்குத் தயாராகிவருகிறது. இந்தச் சூழலில் வழக்கமான புத்தக விற்பனை யும் குறைந்துபோனதால், புதிய புத்தகங்களின் தயாரிப்பும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தகமென்பது எழுத்தாளர்க ளோடு மட்டும் தொடர்புடையதன்று. ஒளியச்சு செய்தல், வடிவமைத்தல், காகித விற்பனை, அச்சடித்தல், பைண்டிங் செய்தல் எனப் பல கிளைத் தொழில்களையும் உள்ளடக்கியது தானே! பணமதிப்பு நீக்கத்தால், அச்சுத் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் தேக்க மடைந்துள்ளன. ஏற்கெனவே, காகித விலை யேற்றம், அச்சுக் கூலி உயர்வு எனத் தடுமாறிக் கொண்டிருந்த பதிப்பகங்களை, இந்த திடீர் அறிவிப்பால் ஏற்பட்ட விற்பனை மந்தமும் சேர்ந்து, புதிய புத்தகங்களைக் கொண்டுவர முடியாமல் முடக்கிப் போட்டுள்ளன.
"ஒவ்வொரு வருஷமும் நவம்பர், டிசம்பர்லதான் ரொம்ப பிஸியா வேலை இருக்கும். அச்சகங்களுக்கு நிறைய புத்தக வேலை இருக்கும். ஒவ்வொரு பதிப்பகமும் குறைந்தது பத்து இருபது நூல்களாவது கொடுப்பார்கள். இப்ப ஒண்ணு ரெண்டு புத்தகம்கூட இல்லாம இருக்கோம்" என்கிறார் மணி ஆப்செட் உரிமையாளர் சண்முகம். "அச்சக வேலை மட்டுமில்லே. அதைச் சார்ந்து பைண்டிங் வேலை செய்யிறவங் களுக்கும் இப்ப வேலை இல்லே. வாரம் முழுக்க வேலை செஞ்சிட்டு, சனிக்கிழமை அன்னைக்கு அவங்களுக்கு வாரச் சம்பளம் கொடுக்கணும். இப்ப இருக்கிற பணத் தட்டுப் பாட்டில் வாரச் சம்பளத்தை எப்படிக் கொடுக் கிறது?" என ஆதங்கத்தோடு கேட்கிறார் கேபிடல் இம்ப்ரஷன்ஸ் இயக்குநர் மு.மணி.
"பதிப்பகங்களும் புத்தகம் போடலே. அச்சகத்திலேயும் வேலை இல்லே. அதைச் சார்ந்த எங்க பேப்பர் வியாபாரமும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு..!" என்கிறார் ராமு பேப்பர்ஸ் உரிமையாளர் சீனிவாசன். ஒரு பக்கம் பணத் தட்டுப்பாடு, இன்னொரு பக்கம் சென்னையை நாடா புயல் கொடுத்த இயற்கையின் எச்சரிக்கை என இப்படியான தொடர் நெருக்கடிகளுக்கிடையே சென்னை புத்தகக் காட்சி நடைபெறுமா என்கிற கேள்வி யோடு இருக்கும்போது, '2017 ஜனவரி-6 முதல் 19 வரை புத்தகக் காட்சி' எனத் தனது வலைதளத்தில் அறிவித்துள்ளது பபாசி. இன்றைய சூழலில் கண்காட்சி நடத்துவது சாத்தியம்தானா என்று பபாசியின் தலைவர் காந்தி கண்ணதாசனிடம் கேட்டபோது, "புத்தகக் காட்சி நடைபெறுவது உறுதி. இப்போ திருக்கும் சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரைவில் ஆலோசனை செய்து, அதற்கேற்ப செயல்படுத்துவோம்" என்றார்.
பணமதிப்பு நீக்கத்தால் நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தக விற்பனைக்கும் அது பெரும் சிக்கலாகியிருப்பது கண்கூடு. இது புத்தகக் காட்சிக்கும் அச்சுறுத்தலாக அமைவதற் கான வாய்ப்பைத் தடுப்பதற்கான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை பபாசியும் பதிப் பகங்களும் எடுக்க வேண்டும். இன்னும் கிட்டத் தட்ட ஒரு மாதமே இருக்கும் நிலையில் விரைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. கடன் அட்டை, பண அட்டை மூலம் புத்தகங்கள் வாங்கு வதற்கான வசதியை எல்லா அரங்குகளிலும் ஏற்பாடு செய்வது நல்ல பலனளிக்க வாய்ப்பிருக் கிறது. பபாசி இது போன்ற பல யோசனைகளைப் பரிசீலித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களும் பணமில்லா வர்த்தகத்துக்கு ஏற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருதல் நன்று!
பதிப்பகங்களும் புத்தக விற்பனையாளர் களும் தற்போது சந்தித்துவரும் நெருக்கடிகளை யெல்லாம் மனதில் கொண்டு, அதற்கேற்ப சரியான திட்டமிடலோடும், முறையான முன்னேற் பாடுகளோடும் செயல்பட்டால் மட்டுமே, தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த அறிவுத் துறை கரையேறுவதற்கான வாய்ப்பிருக்கும்.
- மு. முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in