புத்தகங்களோடு புத்தாண்டு தொடரட்டும் இந்த ஆண்டும்!
சென்னை மழைவெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்திருக்க வேண்டிய 'சென்னை புத்தகக் காட்சி' தள்ளிப்போனது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். மழைவெள்ளத்தால் பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு பெரும் துயரம் என்றால் அவர்களுக்குப் பிரதான வருவாயைத் தரக்கூடிய சென்னை புத்தகக் காட்சி தள்ளிப்போனது துயரத்துக்கு மேல் துயரம்! அந்த நிலையில் 'தி இந்து' தமிழ் நாளிதழ் முன்னெடுத்த 'புத்தகங்களோடு புத்தாண்டு' என்ற இயக்கத்தால், பதிப்பாளர்களிடமும் புத்தக விற்பனையாளர்களிடமும் வாசகர்களிடமும் புது உற்சாகம் பிறந்தது.
புத்தாண்டு அன்று வாசகர்கள் தாம் சந்திக்கும் முதல் நபருக்குப் புத்தகத்தைப் பரிசளித்துப் புத்தாண்டைக் கொண்டாடலாம் என்று 'தி இந்து' தமிழ் நாளிதழ் முன்வைத்த யோசனைதான் 'புத்தகங்களோடு புத்தாண்டு' முழக்கத்துக்கு வித்திட்டது. தொடர்ந்து, 'பபாசி'யில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் கடைகள் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தேதிகளிலும் தமிழகம் முழுவதிலும் திறந்திருக்கும் என்றும் புத்தகங்களுக்கு 10% கழிவு வழங்கப்படும் என்றும் 'பபாசி' அறிவித்தது.
'பபாசி' அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு பதிப்பகங் களும் 'புத்தகங்களுடன் புத்தாண்டு' கொண்டாட முன்வந்தன. தமிழ்நாடு முழுவதிலுமுள்ள பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் 'புத்தகங்களோடு புத்தாண்'டை உற்சாகமாகக் கொண்டாடினார்கள். சில பதிப்பகங்கள் 50% வரையில் விலையில் கழிவு தந்தன. எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், வாசகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன. நண்பர்களுக்குப் புத்தகங்கள் பரிசளித்தவர்கள் அதைத் தற்படம் எடுத்து 'தி இந்து'நாளிதழுக்கு அனுப்பித் தள்ளினார்கள். ஒரு புத்தகக் கடையில் வெளியூரிலிருந்து வரும் வாசகர்களுக்குத் தங்கும் வசதியெல்லாம் செய்துகொடுக்கப் பட்டிருந்தது. இப்படியாக, சிறு பொறியாகப் புறப்பட்ட இயக்கம் காட்டுத்தீயாகப் பரவிப் பெரும் வரவேற்பு பெற்றது.
சென்ற ஆண்டு பெருமழை வெள்ளம் என்றால் இந்த ஆண்டு பணமதிப்பு நீக்கம் என்ற வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் தவிக்கிறார்கள். தமிழ்ப் புத்தக உலகத்தின் துயர் துடைக்க நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும். புத்தக கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட 'புத்தகங்களோடு புத்தாண்டு' என்ற இயக்கத்தை இந்த ஆண்டும் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் வாசகர்களும் மேற்கொள்ளலாம். புத்தாண்டில் நாம் சந்திக்கும் முதல் நண்பருக்குப் புத்தகத்தோடு புத்தாண்டு வாழ்த்து சொல்வோம். இந்த இயக்கம் பேரியக்கமாக உருவாகி, தொடர்ந்து ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியின் பெருவெற்றிக்கு அச்சாரம் இடட்டும்!
