

தமிழ் இலக்கியம் தொடக்க காலத்திலிருந்தே அகச் சூழலையும் தான் சார்ந்த சூழலையும் பிரதிபலித்து வந்துள்ளது. ஆனால், இன்றைக்கு இலக்கியத்துக்குள்ளே பல பிரிவுகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் சூழலியல் (Environmental). சூழலியலைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள், கதைகள் சிருஷ்டிக்கப்படுகின்றன. தமிழ் இலக்கியத்திலேயே இது புதுத் துறையாகக் கிளை பிரிந்துள்ளது. தமிழில் இனி இலக்கிய நூல்களைப் பட்டியலிடும்போது மானுடவியலுக்கு, வரலாற்றுக்கு இன்னும் பல துறைகளுக்கு இருப்பதுபோல் சூழலியலுக்குத் தனி இடம் நிச்சயம் உருவாகும்.
இந்தச் சூழலியலையும் இலக்கியத்தையும் தனது கண்களாகக் கொண்டு ‘ஓலைச்சுவடி’ என்னும் சிற்றிதழ் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. காலாண்டிதழான இதன் ஆசிரியர் கி.ச.திலீபன். மிக எளிமையான வடிவமைப்பு, கறுப்பு வெள்ளை முகப்பு அட்டை ஆகியவற்றுடன் ‘சிற்றிதழ்’ என்பதற்கான முன்னுதாரணமாக இந்த இதழ் விரிந்துள்ளது.
தமிழின் முக்கியமான சூழலியல் எழுத்தாளரான நக்கீரனுடன் திலீபன் நிகழ்த்தியிருக்கும் நேர்காணல் இந்த இதழில் உள்ளது. நக்கீரனின் ‘காடோடி’ நாவல் குறித்த விரிவான கலந்துரையாடலாகவும் சூழலியல் குறித்த சில வெளிச்சங்களைத் தருவதாகவும் இந்த நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது. வறீதையா கான்ஸ்தந்தின், இரா.முருக வேள், பாமயன் ஆகியோரின் சூழலியல் கட்டுரைகளும் இதழில் இடம்பிடித்துள்ளன. இவை மட்டுமல்லாது இதழுக்கு இலக்கியச் சுவை அளிக்க க.சீ.சிவக்குமாரின் கதையும் வா.மு.கோமு, பா.திருச்செந்தாழை, ஷாராஜ், சு.வெங்குட்டுவன் ஆகியோரின் கவிதைகளும் உள்ளன.