

புகழ்பெற்ற இந்திய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஜேசிபி விருது, இந்த ஆண்டு ‘நே மத் கானா’ என்கிற உருது நாவலின் மொழிபெயர்ப்பான ‘தி பாரடைஸ் ஆஃப் ஃபுட்’டுக்கு வழங்கப்பட்டுள்ளது. உருதுப் பேராசிரியரான காலித் ஜாவத் இந்நாவலின் ஆசிரியர். பரான் பரூக்கி இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இதன் நடுவர் குழுத் தலைவராக, சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பொறுப்புவகித்தார். காலித் ஜாவத்தின் இந்த நாவல் ஹவுசுதீன் முகமத் பாபர் என்பவரின் வாழ்க்கைப் பயணத்தை நாவலாக விவரித்துள்ளார். அநாதையான ஹவுசிதீனின் குழந்தைப் பருவம், பதின் பருவம், முதுமை என மூன்று காலகட்டங்களை ஒரு 50 ஆண்டு காலப் பயணத்தில் இந்நாவல் பதிவுசெய்கிறது.
இத்துடன் இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமும் எப்படிக் கடினமாகி, சகிப்புத்தன்மையற்றதாக மாறியது என்பதையும் விவரிக்கிறார். இந்த நாவலின் தலைப்பு சொல்வதுபோல் சமையலறை ஒரு படிமமாகப் பயன்படுகிறது. உணவும் அடிப்படைத் தேவைகளும் எப்படி மனித வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறதோ அதுபோல அந்த வாழ்க்கையைப் பாதிக்கவும் செய்கின்றன என்பதை இந்த நாவல் வழி சொல்கிறார் ஜாவத்.
வெள்ளை யானைக்கு கெளரவம்!
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவல், சென்னைப் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. இந்த நாவலை ப்ரியம்வதா ராம்குமார் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவுள்ளார். இந்த மொழிபெயர்ப்புப் பணிக்காக, 2023ஆம் ஆண்டுக்கான ‘பென் அமெரிக்கா நிதிநல்கை விருது’ ப்ரியம் வதாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.