Published : 03 Dec 2016 11:45 AM
Last Updated : 03 Dec 2016 11:45 AM

தனித்தமிழ் நூற்றாண்டில் மறைமலையம்!

மறைமலையம் | மறைமலை அடிகள் | (34 தொகுதிகளும் சேர்த்து) விலை: ரூ.14,260 (15.12.2016 வரை 50% கழிவில் ரூ.7,130க்கு இந்த நூல்களை வாங்கலாம்) | வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17 044-24339030 |

தமிழுக்காகத் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்படைத்த சான்றோர்களால்தான் இன்று தமிழ் குறித்து நாம் பெருமை கொள்ள முடிகிறது. சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை என்று நீளும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான அறிஞர் மறைமலை அடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவும் நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டுவரும் இந்தச் சூழலில், மறைமலையடிகளின் படைப்புகளைத் தொகுத்து 'மறைமலையம்' என்னும் பெயரில் 34 தொகுதிகளைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

'எந்தவொரு சமூக இயக்கமும் மக்களின் ஆர்வத்தை ஈர்த்து நிலையான சமூக நடவடிக்கை களையும் அரசியல் நடவடிக்கைகளையும் உடையதாய் முகிழ்ப்பதற்கு முன்னர் அந்த இயக்கம் பற்றிய தேவை சிலரது சிந்தனை நிலையில் உணரப்பட்டுப் பிரச்சாரப்படுத்தப்படுவது வழக்கம்' என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார். அதற்கு இணங்க, கால்டுவெல் முன்வைத்த திராவிட மொழிக் கோட்பாடு, தமிழறிஞர் மத்தியில் தனித்தமிழ் குறித்த சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்தது. பரிதிமாற் கலைஞர் தனித்தமிழ் குறித்த உரையாடலைத் தொடங்கினார். விருதை சிவஞான யோகிகளால் 1908-ல் திருவிடர் கழகம் தொடங்கப்பட்டது. அந்தக் கழக உறுப்பினர்கள் ஐம்பத்தொன்மர் பட்டியலில் சுவாமி வேதாசலம் (மறைமலையடிகள்) பெயரும் இடம்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 1916-ல் தன் மகள் நீலாம்பிகையுடன் அவர் நிகழ்த்திய உரையாடலுக்குப் பின், இனி தமிழில் பிற மொழிகள் கலப்பின்றிப் பேசுவது, எழுதுவது என்று முடிவெடுத்தார். முதலாவதாகத் தன் பெயரைத் தனித்தமிழுக்கு மாற்றினார். அப்போதிலிருந்து வாழ்நாள் இறுதிவரை முழுக்க முழுக்கத் தனித் தமிழிலேயே எழுதினார். 1916-க்கு முன் வெளிந்த மறைமலையடிகள் எழுத்தில் பிற மொழிச் சொற்கள் கலந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

மறைமலையடிகள் சைவம், தனித் தமிழ் வழியாகவே தம் சிந்தனைகளை முன்வைத்தவர். கட்டுரைகள், சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் எனப் பல வகைமைகளிலும் அவரது எழுத்தா ளுமை இயங்கியது. தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டி ருக்கும் 34 தொகுதிகளையும் பார்க்கும்போது மலைப்பு ஏற்படுகிறது. 'சாகுந்தல நாடகம்', 'முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்', 'திருக்குறள் ஆராய்ச்சி', 'பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை', 'குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சியுரை', 'திருவாசக விரிவுரை' 'மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (மூன்று தொகுதிகள்)' என்று இலக்கியம், இலக்கிய வரலாறு குறித்து அவர் எழுதிய நூல்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. இன்னொரு பக்கம் 'பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்', 'தமிழர் மதம்', 'சைவ சித்தாந்த ஞானபோதம்', 'வேதாந்த மதவிசாரம்' என்று சமயம் சார்ந்த நூல்கள் இன்னொரு பக்கம். கூடவே, 'சிறுவர்களுக்கான செந்தமிழ்', 'இளைஞர்களுக்கான செந்தமிழ்' போன்ற நூல்களை இளம் தலைமுறைக்காக எழுதியிருக்கிறார். மருத்துவம் குறித்து 'பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்', 'மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை' ஆகிய நூல்களும் 'மனித வசியம்', 'மரணத்தின் பின் மனிதர் நிலை' போன்ற நூல்களும் மறைமலை அடிகளின் பரந்துபட்ட வாசிப்பையும் தேடலையும் நமக்கு உணர்த்துகின்றன. “யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கிறேன்… எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டியதில்லை, அது முடியவும் முடியாது. தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழிசாறாக யான் வடித்துத் தந்துள்ளேன்' என்று மறைமலை அடிகள் தனது நூல்களைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவரது வாழ்நாள் உழைப்பின் 'பிழிசாறாக' இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. தமிழர் வீடுகள்தோறும் இருக்க வேண்டிய நூல்கள் இவை!

- கல்பனா சேக்கிழார், விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: kalpanasekkizhar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x