Last Updated : 25 Dec, 2016 01:12 PM

 

Published : 25 Dec 2016 01:12 PM
Last Updated : 25 Dec 2016 01:12 PM

தி இந்து லிட் ஃபார் லைஃப்: இலக்கியத் திருவிழா

இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழா சென்னையில் வரும் ஜனவரி 14, 15, 16 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. ஏழாவது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கும் இந்த இலக்கிய விழாவில் பல விதமான தலைப்புகளில் இலக்கிய உரைகள், வாசிப்புகள், குழு விவாதங்கள் இடம்பெறுகின்றன.

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் வரலாற்றாசிரியர் கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள், விமர்சகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் திருவிழாவில் உரையாடவிருக்கிறார்கள். “இந்த ஆண்டு திருவிழாவை எழுபது ஆண்டுகள் சுதந்திர இந்தியாவின் கலை, இலக்கியத் துறையின் இன்றைய நிலையைக் கணக் கிடும் முயற்சியாக (Stock-taking) வடிவமைத் திருக்கிறோம். அத்துடன், பெண்களை மையப்படுத் தும் குறிப்பிட்ட சில அமர்வுகளும் இடம்பெறுகின்றன” என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ப்ரஸன்னா ராமஸ்வாமி.

விழாவில் எழுத்தாளர்கள் சுனில் கில்னானி, சசி தரூர், ஷஃபீ கித்வாய், ஊர்வசி புட்டாலியா, பால் சக்கரியா, வி. ஸ்ரீராம், என். மனு சக்கரவர்த்தி, ரஹ்மான் அப்பாஸ், அமன்தீப் சந்தீப், பெரும்பதவம் தரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். நடிகர் ரிஷி கபூர், பாடகி அருணா சாய்ராம், நாடக இயக்குநர் சி. பசவலிங்கைய்யா, திரைப்பட இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், கிரிஷ் காசாரவல்லி, தீபா தன்ராஜ் போன்றோரும் பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள்.

பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவை நினைவுகூரும் விதமாக இந்த விழாவில் ‘முரளிகானம்’ என்ற அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அமர்வில் பாடகர் பிரின்ஸ் ராம வர்மாவும், இசைக் காப்பாளர் நிவாச மூர்த்தியும் உரையாடுகிறார்கள். அத்துடன், நடனக் கலைஞர் சந்திரலேகாவை நினைவுகூரும் அமர்வில், நடனக் கலைஞர் திஷானி ஜோஷியும் ஒளிப்படக் கலைஞர் சதானந்த் மேனனும் பத்திரிகையாளர் சசி குமாருடன் கலந்துரையாடுகிறார்கள்.

சென்ற ஆண்டு இலக்கியத் திருவிழாவைப் போல இந்த ஆண்டு இலக்கியத் திருவிழாவிலும் தமிழ் அமர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவும், தமிழச்சி தங்கபாண்டியனும் ‘சொல், இசை, பொருள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடுகிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகனும், வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடா சலபதியும் ‘எழுத்தின் மறுவருகை’ (Return of the word) என்ற தலைப்பில் உரையாடுகிறார்கள். வார்த்தை: ஒரு மேம்படுத்தும் கருவி (Word: An Empowering Tool) என்ற அமர்வில் கவிஞர் சுகிர்தராணியும், கலீசிய எழுத்தாளர் மரியா ரேமோந்தஸும் வழக்கறிஞர் சுசிலா ஆனந்துடன் கலந்துரையாடுகிறார்கள்.

‘தி இந்து விருது 2016’ இலக்கிய விருதுகளும் இந்த இலக்கியத் திருவிழாவில் வழங்கப்படவிருக்கின்றன. விழா நடைபெறும் நாட்கள்: ஜனவரி 14, 15, 16.

இடம்: சர் முத்தா வெங்கடசுப்பராவ் கான்சர்ட் ஹால், ஹாரிங்டன் சாலை, சேத்பட், சென்னை.

மேலும் விவரங்களுக்கு: WWW.THEHINDULFL.COM



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x