Published : 25 Dec 2016 01:17 PM
Last Updated : 25 Dec 2016 01:17 PM

இதழ் முற்றம்: ‘தக்கை’யின் இரு கண்கள்

தமிழ் நவீன இலக்கியம் மிகுதியும் சிற்றிதழ் இயக்கமாகத்தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவந்தது. தமிழின் முதல் தலைமுறைப் படைப்பாளிகள் தீவிரமான தங்கள் படைப்புகளை எழுத இந்தச் சிற்றிதழ்கள்தாம் களமாக இருந்தன. அதன் பிறகுதான் நடுத்தர, பெரிய இதழ்களும் தீவிர இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகளை வெளியிடத் தொடங்கின. இன்று பரவலாக வாசிக்கப்படும் பெரிய இதழ்கள் பலவும் தீவிர எழுத்தை வெளியிடுகின்றன. இந்தச் சூழலில் சிற்றிதழுக்குத் தேவை என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலாக வந்திருக்கிறது ‘தக்கை’ சிற்றிதழ்.

சிற்றிதழ்கள் லாபத்தை நோக்கமாகக் கொண்டவை அல்ல. அதனால் அதன் செயல்பாடு சுதந்திரமானது. இலக்கியம் மட்டுமே அதன் நோக்கம். இந்த அம்சங்களைக் கண்களாகக் கொண்டது ‘தக்கை’. 2003-ம் ஆண்டு சேலத்தில் தொடங்கப்பட்ட இந்த இதழ் இடையே சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் வெளிவந்துள்ளது. தக்கை இளம் கவிஞர்கள், எழுத்தாளர்களின் தொகுப்புகளையும் வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு கவிஞர் ந.பெரியசாமியின் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது. கவிஞர் பா.ராஜாவின் சிறுகதைத் தொகுப்பையும் விரைவில் கொண்டுவரவுள்ளது.

காலாண்டிதழாகத் தொடர்ந்து கொண்டுவரப்படவுள்ள இந்த இதழுக்குக் கவிஞர்கள் சாஹிப்கிரான், வே.பாபு ஆகிய இருவரும் ஆசிரியர்கள். எழுத்தாளர் கோணங்கி, கவிஞர்கள் க.மோகனரங்கன், சபரிநாதன், சங்கர், சீராளன் ஜெயந்தன், அசதா, கவின் மலர், அஜயன் பாலா உள்ளிட்ட பலரும் இந்த இதழுக்குப் பங்களிப்பு செய்துள்ளனர். கவிதைகள், சிறுகதை, மொழிபெயர்ப்பு, புத்தகங்கள் குறித்த விமர்சனப் பார்வை எனப் பல அம்சங்களும் இந்த இதழ் வெளிவந்துள்ளன.

-ஜெயகுமார்

தக்கை (காலாண்டிதழ்) சேலம். விலை ரூ.10 தொலைபேசி: 99446 72988, 98651 53007.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x