

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலகப் புத்தகக்காட்சி குறித்த கருத்துப் பரிமாற்றம், நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன இணை இயக்குநர் சங்கர சரவணன், பபாசி தலைவர் வைரவன், மேனாள் தலைவர் காந்தி கண்ணதாசன், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழில் வெளிவந்த நூல்களை மற்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யவும் அயல் நூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்யவும் பதிப்பாளர்களுக்கிடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்த இந்தப் புத்தகக்காட்சி வழிவகுக்கும் என இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைத் தமிழ்ப் பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாங்கள் வெளியிட்ட நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்நூல் குறித்த சுருக்கத்தை ஆங்கிலத்தில் தயார்செய்து, வரும் உலகப் புத்தகக்காட்சியில் காட்சிப்படுத்தும்போது, அந்நூலுக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டது.
சேலம் புத்தகக்காட்சி | இந்து தமிழ் திசை அரங்குகள்: 85, 160 - புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் புத்தகக்காட்சி நடைபெற்றுவருகிறது. மாவட்ட நிர்வாகமும் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து இதை ஒருங்கிணைத்துள்ளன. இந்தப் புத்தகக்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 100 பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளன. நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில், ‘இந்து தமிழ் திசை’யின் அரங்கு எண்கள் 85, 160. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கு கிடைக்கும்.
தூத்துக்குடி புத்தகக்காட்சி | இந்து தமிழ் திசை அரங்கு எண்: 23 - மாவட்ட நிர்வாகமும் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள புத்தகக்காட்சி, ஏவி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக்காட்சியில் 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் அரங்கு எண்: 23. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கு கிடைக்கும்.
கே.சி.எஸ்.அருணாசலம் விழா: கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இன்று (நவம்பர் 26), பொள்ளாச்சியில் ‘அருணாசலம் நூல் மறுபதிப்பு நினைவு மல’ரும் ஆவணப்படமும் வெளியிடப்படவுள்ளன. கவியரங்கம், இசையரங்கம், நாடகம் என இந்த விழா முழு நாள் நிகழ்வாகப் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
விளக்கு விருது விழா! - அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவு விருதுகள், எழுத்தாளர்கள் வண்ணநிலவன் (புனைவு), இராசேந்திர சோழன் (அபுனைவு) ஆகியோருக்கு நாளை (நவம்பர் 27) மாலை 5:30 மணிக்கு சென்னை சிஐடி காலனி கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன. எழுத்தாளர் திலகவதி விருதுகளை வழங்குகிறார். வண்ணநிலவன் படைப்புகள் குறித்து அ.வெண்ணிலா, பாவண்ணன், மாலன் ஆகியோரும் இராசேந்திர சோழன் படைப்புகள் குறித்து எம்.கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், பவா செல்லத்துரை ஆகியோரும் பேசுகிறார்கள்.
மதுரை என்.சி.பி.ஹெச். புத்தகக்காட்சி: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவுடன் இணைந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 80, மேலக் கோபுரத் தெரு, மதுரை என்ற முகவரியில் 14.01.2023 வரை புத்தகக்காட்சியை ஏற்பாடுசெய்துள்ளது. இதில் அனைத்துப் புத்தகங்களும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும். காலை 9:30 மணி முதல் மாலை 8:30 மணி வரை புத்தகக்காட்சி நடைபெறும். தொடர்புக்கு: 0452 4374106