

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும், சமத்துவத்தை உருவாக்குவதற்கும் வர்க்கப் போராட்டங்களே அடித்தளமாக உள்ளன. வரலாற்றுரீதியாகச் சமூகத்தை வளர்ச்சியை நோக்கியும், மேன்மையை நோக்கியும் அவையே உந்தித் தள்ளின. பல வகையான சுரண்டல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆட்பட்டிருந்த நம் சமுதாய அமைப்பை அவற்றிலிருந்து மீட்டெடுத்து, முற்போக்குத் திசையில் பயணிக்க வைத்த வர்க்கப் போராட்டங்களில் முகம் தெரியாத பல தோழர்கள் பங்கேற்றனர்; பங்கேற்று வருகின்றனர்.
அத்தகைய தோழர்களில் குறிப்பிடத்தக்க 10 பேரை இந்நூல் அறியப்படுத்துகிறது. காலங்காலமாக ஆளும் வர்க்கத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிவரும் களப்பணி அளப்பரியது. இந்தச் சூழலில், வர்க்க அரசியலின் தாக்கம் தெரியாமல் வளர்ந்துநிற்கும் இன்றைய தலைமுறையினருக்கு, வர்க்க அரசியலின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கும் இந்தத் தோழர்களின் தியாகங்களையும் போராட்டங்களையும் இந்நூல் வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ளது. - ஹுசைன்
போருக்குப் பிறகு... உலகில் எங்குமே போருக்குப் பிந்தைய அனுபவங்கள் மிகவும் துயரமாகவே இருக்கும். போர் ஏற்படுத்திய வடுக்களை ஆற்றுப்படுத்துவதன் மூலமே அதிலிருந்து மீண்டுவர முடியும். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நீண்ட காலம் நடைபெற்ற போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. என்றாலும் சமூகரீதியாகவும் பிரச்சினைகளிலிருந்தும் மீட்சி அடைந்திருக்கிறதா என்பதைப் ‘போருக்குப் பிந்திய அரசும் சமூகமும் - இலங்கையின் அனுபவங்கள்’ என்ற நூல் அலசுகிறது.
இந்நூல், போருக்குப் பிந்தைய அபிவிருத்திகள், நிலைமாற்று நீதி, இன நல்லிணக்கம் உட்படப் பல பிரச்சினைகளையும் ஆய்வுசெய்கிறது. அதோடு, அப்படிப் பட்டியலிடப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடும் விளக்கத்தையும் தருகிறது. இலங்கையின் போர்ச் சூழலையும் அதன் பிரச்சினைகளையும் பற்றிப் படிக்க விரும்புவோரிடம் இருக்க வேண்டிய நூல் இது. - டி.கே.
இமையத்துக்கு கன்னட விருது: இந்தாண்டுக்கான குவெம்பு ராஷ்ட்ரிய விருது தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடக் கவிஞர் குவெம்பு பெயரில் வழங்கப்பட்டுவரும் இந்த விருது 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் உள்ளடக்கியது. வாழ்க்கையின் இயல்பான அழகையும் சமூக விமர்சனத்தையும் சொல்பவை இவரது கதைகள்.
கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத் தமிழ் எழுத்து வளர்ச்சியில் இமையத்தின் ‘கோவேறு கழுதைக’ளுக்கு இணையான நாவல் இல்லை என எழுத்தாளர் சுந்தர ராமசாமி இவரது நாவலை மதிப்பிட்டுள்ளார். ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்களும் 7 சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன.