

பேராசிரியர் ஒளவை நடராசன் (1936 – 2022). விழுப்புரத்திற்கு அருகில் உள்ள ஔவைக்குப்பம் என்ற கிராமத்தில் பிறந்தவர். புதுடெல்லி அகில இந்திய வானொலி நிலையச் செய்தி வாசிப்பாளர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத் துறைச் செயலர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவர், இறுதியாக 2015 முதல் பாரத் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வேந்தர் முதலிய பல்வேறு பணிகளின் மூலம் தன் வாழ்க்கைப் பயணத்தை அனுபவச் செழுமையோடு நிரப்பியவர். எல்லாவற்றிற்கும் மேலாக உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றும் சொற்பொழிவாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் புகழ்பெற்றுத் தமிழர்களின் மனப்பரப்பில் அவர் நிலைபெற்றுள்ளார்.
தனிப் பாணி: இளமையிலேயே திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் ஒளவை. மேன்மையான ஒரு மேடைப் பேச்சை எவ்வாறு நிகழ்த்திக் காட்டுவது என்பதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு, தனக்கெனத் தனிப் பாணியை அமைத்துக்கொண்டார். கனமான செய்திகளையும் கருத்துகளையும் எவ்வாறு எளிய மொழியில் எடுத்துரைப்பது என்ற நுட்பத்தைக் கடைப்பிடித்தார். எந்த ஒரு பொருளைக் குறித்துச் சொற்பொழிவாற்றினாலும் முதலில் ஓர் ஆலாபனை மாதிரி மெதுவாகத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளின் மையத்திற்குள் நுழைந்து அலசுவார்; அப்பொருள் குறித்து இதுவரை யாராலும் சொல்லப்படாத பல புதுக் கருத்துகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுவார்.
எடுத்துரைக்கும் முறையில் ஆழமான நகைச்சுவை உணர்வு ஒன்று இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும். கடைந்து கடைந்து தேர்ந்தெடுத்த சொற்களைக் கையாளுவார்.
கேட்பவர்களை அச்சொற் கூட்டம் கட்டிப்போட்டுவிடும். இவ்வளவுக்கும் கையில் ஒரு சிறு குறிப்புகூட இருக்காது. அவ்வளவு சிறந்த நினைவாற்றல்; மிகப் பெரிய சொற்பொழிவாளர்கள் அனைவரும் இந்த நினைவாற்றலில் முதல் தரமானவர்களாக விளங்குவார்கள். அவருக்குப் பெரிதும் பிடித்தமான வள்ளலாரின் திருவருட்பா குறித்துக் கையில் ஒரு சிறு குறிப்புகூட இல்லாமல், வள்ளலாரின் உள்ளம் கவரும் பாடல் வரிகள் பலவற்றோடு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் அவர் பேசியதை வியப்போடு கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
தமிழ் இலக்கியங்களிலேயே அறிவைத் தேடும் ஒரு வடிவமான பட்டிமன்றக் கலையில் ஒளவை நடராசன் அந்த வடிவத்தைத் தனதாக்கிக்கொண்டார். ஆனால், குன்றக்குடி அடிகளார் போலவே ஒளவையின் பட்டிமன்றப் பேச்சு மிகவும் தர்க்கபூர்வமாகவும் ஆழமாகவும் எடுத்துக்கொண்ட தலைப்பைவிட்டு வெளியே போய்விடாமலும் நகைச்சுவை மிளிரப் பல பொருத்தமான மேற்கோள்களுடனும் அமைந்திருக்கும். அதனாலேயே தமிழகம் முழுவதும் நடக்கும் கம்பன் விழாக்கள் எதுவும் ஒளவையின்றி நடப்பதில்லை என்பது ஒரு வரலாறாக அமைந்தது.
மகிழ்ச்சிப் பொழுதுகள்: சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஒளவை முனைவர் பட்டம் பெற்றார். இது பின்னால் நூலாகவும் வெளிவந்துள்ளது. தனது தந்தை ஒளவை துரைசாமியின் வழியில் இயங்கி, சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய வைரமுத்து கவிதைகள் வரை முழுமையாகக் கற்றறிந்தவர். வயது ஏறஏற அவர் இளைஞர்களோடு தனது உறவையும் உரையாடலையும் பெருக்கிக்கொண்டே இருந்தார். புதியவற்றைத் தேடித்தேடி அடைவதில் அவர் பேரானந்தம் கொண்டார். அவருடைய துணைவியார் மருத்துவர். பிள்ளைகள் இருவர் மருத்துவர்கள். அதனால் அறிவியல் சார்ந்த கல்வியிலும் ஆர்வமிக்கவராக விளங்கினார்.
அவரிடம் 1982இல் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக நான் சேர்ந்தேன். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மூலமாகத்தான் அவரது தொடர்பு கிடைத்தது. சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு மாணவனாக ஐந்து ஆண்டுகள் அவரிடம் பணியாற்றிய காலம், என் வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான பொழுதுகளால் நிறைந்தவை. அவரிடம் சேர்ந்த ஆறு ஆய்வு மாணவர்களில் நான் ஒருவன்தான் முடித்து முனைவர் பட்டம் பெற்றேன். என் மேல் பெரிதும் அன்பு பாராட்டினார். எனது பிள்ளைகளின் இரண்டு பேர் திருமணத்தையும் அம்மாவோடு புதுச்சேரிக்கு வந்து தலைமை வகித்து நடத்திக்கொடுத்தார்.
என்னை ஒரு பொதுவுடமைச் சிந்தனையாளன் என்ற பார்வையில் அணுகுவார். சில நேரம் ‘‘இது குறித்து உங்கள் மார்க்சியம் என்ன சொல்லுகிறது ராஜா?’’ என்றெல்லாம் தெரியாததுபோல் விளக்கங்கள் கேட்பார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்தபோது ‘‘ராஜா என்னிடம் எந்த உதவியையும் நீ ஒரு தடவைகூடக் கேட்டு வரவில்லையே. பெரிய மனிதன் நீ. இந்த எளியனிடம் மாணவனாக இருந்து என்னை மகிழ்வித்திருக்கிறாய்’’ - எனது பேராசானின் இந்தக் கூற்று போதும். மிச்சமிருக்கும் எனது வாழ்க்கையை அவர் நினைவுகளால் முழுமையாக நிரப்பிக்கொள்வேன். - க.பஞ்சாங்கம் பேராசிரியர், தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in