

தமிழுக்கு மொழிபெயர்ப்புக் கலை புதியதல்ல; பல நூற்றாண்டுக் கால வரலாறு இதற்குண்டு. ஆனால், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மொழிபெயர்ப்புக்கெனத் திடமான இலக்கணம், கொள்கை இல்லை. மேலும், அது ஊகமாகவும் தீவிர இலக்கியத்தைப் போல் விவாதத்துக்கு உரியதாகவுமே இருக்கிறது. இந்தப் பின்னணியில், மொழிபெயர்ப்புக் கலையின் வேரையும் வரலாற்றையும் பரந்துபட்ட ஆய்வு நோக்கில் பேராசிரியர் கே.தியாகராஜனின் ‘மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள்’ நூல் பதிவுசெய்திருக்கிறது.
இந்த முறைப்பாட்டில், இலங்கைத் தமிழ் அறிஞர்கள் வித்துவான் எஃப்.எக்ஸ்.ஸி. நடராசாவின் ‘மொழிபெயர்ப்பு மரபு’, தென்புலோலியூர் மு.கணபதியாரின் ‘மொழிபெயர்ப்பும், சொல்லாக்கமும்' ஆகிய நூல்களும் ‘மொழிபெயர்ப்பியல்’ என்ற ஒரே தலைப்பில் வெளிவந்த சி. சிவசண்முகம் - வே.தயாளன், சு.சண்முகம் வேலாயுதம், ந.முருகேசபாண்டியன் ஆகியோரின் நூல்களும் கவனம் கொள்ளத்தக்கவை.
நடராசா தனது ‘மொழிபெயர்ப்பு மரபு’ நூலில் தொல்காப்பியம், மொழிபெயர்ப்பு குறித்துச் சொல்லும் கூற்றை மேற்கோள் காட்டுகிறார். ‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’ என்கிற மொழிபெயர்ப்பு நெறி குறித்த அந்தக் கூற்றை இளம்பூரணர், தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர். தியாகராஜன் அதை இன்றைய பயன்பாட்டிலிருந்து தெளிவுற இந்நூலில் விளக்கியுள்ளார். பொருளதிகாரத்துக்கு உரை கண்ட 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேராசிரியர் என்கிற பெயர்பெற்ற தமிழ் அறிஞர் மேற்சொன்ன கூற்றுக்கான விளக்கங்களை அளித்துள்ளார்.
அவற்றை, ஒன்று, இரண்டு என அழகாக இந்நூலில் தொகுத்துள்ளார் தியாகராஜன். தொல்காப்பியக் கூற்றுக்கான விளக்கத்தில் பேராசிரியர் மொழிந்துள்ள ‘மக்களின் பயன்பாடு’ என்ற மொழியாக்க நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி, ‘மூல நூலுக்கு விசுவாசம்’ என்ற நெறிக்கு எதிராக இதைச் சொல்கிறார் நூலாசிரியர். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கருத்தாக்கம் இன்றும் விவாதப் பொருளாக இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மொழிபெயர்ப்பியலில் ‘பொருளின் பொருள்’ என்ற அம்சத்தை தியாகராஜன் இதில் அலசி ஆராய்ந்துள்ளார். மொழிபெயர்ப்புப் பணியில் சவாலானதாக இருக்கும் இதன் பல்வேறு பரிமாணங்களை உதாரணங்களுடன் எளிமையாக விளக்கியுள்ளார். ஒரு வானொலிப் பெட்டியின் ஓசை தொந்தரவு செய்யும்போது, ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்தை அழைத்து, ‘ரேடியோ’ என்கிறது. இதன் பொருள் அதை அணைத்துவைப்பது.
இதைப் பேசுபவரின் பொருள் என வகைப்படுத்துகிறார். ஊரார் விஷயங்களைப் பறைசாற்றுவதைத் ‘தொழிலா’கக் கொண்டவன் வரும்போது, ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்தை அழைத்து ‘ரேடியோ’ என்கிறது. இதற்குப் பொருள் ‘ரேடியோ என்ற பட்டப்பெயர் கொண்டவன் வருகிறான். நாம் பேச்சை நிறுத்திக்கொள்வோம்’. இதைக் கேட்பவரின் பொருள் என வகைப்படுத்துகிறார். ஆனால். பயன்படும் சொல் ஒன்றுதான் ‘ரேடியோ’. அந்தப் பொருளின் சொற்பொருள் ‘ரேடியோ’.
மொழிபெயர்ப்புக் கலையில் சமானம், தோராயம் ஆகிய இரு கருத்தாக்கங்கள் குறித்து இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இந்தக் கருத்தாக்கங்களில் முரண்படுவது உண்டு. பெறுமொழிப் பனுவலின் பொருளும் தருமொழிப் பனுவலின் பொருளும் சமமானவையாக இருக்க வேண்டும். இது சமானத்தின் கருத்து. வாக்கியக் கட்டமைப்பு, இலக்கணம், நடை போன்றவை பெறுமொழிக்கும் தருமொழிக்கும் சமமானவையாக இருக்கச் சாத்தியம் இல்லாதவை.
அதனால், மொழிபெயர்ப்பு தோராய நிலையைத்தான் அடைய முடியும் என்பது தோராயத்தின் கருத்து. இதனுடன் சேவல் கூவுவதைச் சுவாரசியமாக உதாரணப்படுத்தியிருக்கிறார் தியாகராஜன். தமிழ்ச் சேவல் ‘கொக்கரக்கோ’ என்றும் இங்கிலாந்துச் சேவல் ‘cock-a-doodle-do’ என்றும் அரபுச் சேவல் ‘kookookoo-koo’ என்றும் சீனச் சேவல் ‘goh-goh-goh-goh’ என்றும் கூவுமாம்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சொல்லுக்குள் சொல் மொழிபெயர்ப்பும் கட்டற்ற மொழிபெயர்ப்பும் விவாதத்துக்குரியவையாக இருக்கின்றன. மரபுத்தொடரை மொழிபெயர்க்கும்போது சொல்லுக்குச் சொல் என்பதில் நகைப்புக்கு உரிய பிழைகள் நேர்ந்துவிடுவதை உதாரணங்களுடன் தியாகராஜன் சொல்லியுள்ளார்.
தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஏ.கே.ராமானுஜத்தின் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டை இதில் தொகுத்தளித்துள்ளார். கவிதைகளை மொழிபெயர்ப்பதில் அவர் பின்பற்றிய ’உள் வடிவ, வெளி வடிவ’க் கோட்பாடு இதில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது அது சமகால ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்ற ராமானுஜத்தின் கருத்து இன்றைய பொருளில் கவனம் கொள்ளத்தக்கது.
வால்மீகியின் ‘ராமாயண’த்தை கம்பர் தமிழாக்கியபோது, அதில் தமிழ் நிலத்தின் கூறுகளைச் சேர்த்துத் தன் நம்பிக்கைகளையும் சேர்த்தார். உதாரணமாக அகலிகையைக் கற்புக்கரசியாக்கினார். ஆனால், மூல ராமாயணத்தில் அப்படி இல்லை. இதை மொழிபெயர்ப்பியல் என்ற நிலையில் நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். இதே பொருளில் அமைந்த ராமானுஜத்தின் அபிப்ராயங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் மொழிபெயர்ப்புகள் குறித்து எழுதிய கட்டுரையில், மொழிபெயர்ப்புகள் எப்படித் திரிக்கப்பட்டு மூலமொழிக்குப் பாதகம் செய்துள்ளனஎன்பதை விளக்கியுள்ளார். அதை இந்நூல்கவனப்படுத்தியுள்ளது. இயந்திர மொழிபெயர்ப்பு,கூகுள் மொழிபெயர்ப்பு என எல்லாவற்றையும் இந்நூல் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
மொழிபெயர்ப்பியல் குறித்த தமிழ், மேற்குலகச் சிந்தனைகளையும் அதை உருவாக்கியவர்களையும் தொகுத்துள்ள பாங்குபாராட்டுக்குரியது. இந்த நூல் பல்வேறு தலைப்புகளில்மொழிபெயர்ப்பியல் குறித்த கலைக் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு, எழுத்துத் துறையில்இயங்குபவர்களுக்கான ஒரு பாடமாகவும் இது அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்திலும் அறிவுத்தளத்திலும் மொழிபெயர்ப்பு நூல்கள் தாக்கத்தை விளைவித்தவை. இடைக்காலத்தில் அச்சுத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியால் மொழிபெயர்ப்புப் பணிகளும் அதிகமாகியுள்ளன. ஆனால், அவற்றின் மொழிபெயர்ப்பு நயம் கேள்விக்கு உரியதாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்த நூல் அது குறித்த ஓர் ஓர்மையை ஏற்படுத்துகிறது. - மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள்
கே.தியாகராஜன்
காலச்சுவடு, விலை: ரூ.675
தொடர்புக்கு: 04652 278525